No menu items!

ஒரு பந்து – பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து

ஒரு பந்து – பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து

உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான இவரது சொத்து மதிப்பு 3,980 கோடி ரூபாய். பந்தை எட்டி உதைத்தே இத்தனை சொத்தை சம்பாதித்திருக்கிறார். பணத்தை சம்பாதிப்பது மட்டுமின்றி, அதை ஜாலியாக செலவழிப்பதிலும் முதல்வராக இருக்கிறார் ரொனால்டோ. அவர் வைத்திருக்கும் பொருட்களின் விலைகள் எல்லாம் நமக்கு ஹார்ட் அட்டாக் கொடுப்பவை.

14 கோடி ரூபாய் கைக்கடிகாரம்

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் நட்சத்திரங்கள், சில லட்சங்களில் கைக்கடிகாரங்களை வைத்திருந்தாலே பார்த்து பிரமித்துப் போகிறோம். ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ  அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் விலை 14 கோடி ரூபாய். பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோவிடம் சொல்லி தனக்கு மட்டுமாக அந்த கைக்கடிகாரத்தை செய்ய வைத்துள்ளார் ரொனால்டோ. இந்த கைக்கடிகாரத்தின் விலை இத்தனை அதிகமாக இருப்பதற்கு காரணம் அதிலுள்ள வைரக் கற்கள். மொத்தம் 424 வெள்ளை நிற வைரக் கற்களை இந்த கைக்கடிகாரத்தில் பதித்திருக்கிறார் ரொனால்டோ.

ஆசைக்கு ஒரு சிலை

பிரபலங்களுக்கு பொதுவாக அவர்களின் ரசிகர்கள்தான் சிலை வைப்பார்கள். ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவோ தனக்குத் தானே ஒரு மெழுகுச் சிலையை வைத்துள்ளார். மாட்ரிட் மியூசியத்தைச் சேர்ந்தவர்கள்  ரொனால்டோவுக்கு ஒரு மெழுகுச் சிலையை வைத்து அதைப் பார்க்க அவரை அழைத்துள்ளனர். அந்த சிலையைப் பார்த்து மனம்குளிர்ந்த ரொனால்டோ, அதேபோன்றதொரு சிலைக்கு ஆர்டர் கொடுத்து தன் வீட்டில் வைத்துள்ளார். அந்த மெழுகுச் சிலையின் விலை 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். ரொனால்டோவிடம் இருப்பதிலேயே இதுதான் விலைகுறைந்த பொருள் என்றும் கூறப்படுகிறது.

சொந்தமாக ஒரு ஜெட்

போட்டிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கு தனது சொந்த ஜெட்டையே பயன்படுத்துகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. Gulfstream G650 என்ற இந்த ஜெட்டின் விலை 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் 558 கோடி ரூபாய்.

20 லட்ச ரூபாய் சரக்கு

லண்டன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சில மாதங்களுக்கு முன் ரொனால்டோ குடித்த ரெட் ஒயினை பற்றி மிகப்பெரிய அளவில் செய்திகள் வெளியானது. இந்த ஓட்டலில் 15 நிமிடங்களில் ரொனால்டோவும் அவருடைய நண்பர்களும் குடித்துத் தீர்த்த 2 ரெட் ஒயின் பாட்டில்களின் விலை 20 லட்ச ரூபாயாம். இந்த காசு மட்டும் இருந்தால் நம் நாட்டு குடிமகன்கள் ஓராண்டு முழுக்க அள்ளி அள்ளிக் குடிக்கலாம்.

கார்களின் காதலர்

கடந்த 2021-ம் ஆண்டில்   Bugatti Centodieci வகை சொகுசுக் காரை வாங்கியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த காரின் விலை 75 கோடி ரூபாய். இந்த வகையில் மொத்தமாகவே இதுவரை 10 கார்கள்தான் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   இதைத்தவிர உலகின் முன்னணி சொகுசுக் கார்களான Lamborghini Aventador,  Bentley,  Porsche, Mercedes ஆகிய கார்களையும் ரொனால்டோ சொந்தமாக வைத்துள்ளார்.

8 வீடுகள்

பொதுவாக ஓட்டல்களில் தங்குவது ரொனால்டோவுக்குப் பிடிக்காது. அதனாலேயே தான் அடிக்கடி தங்கும் மாட்ரிட், டுரின், லிஸ்பன் உள்ளிட்ட 8 நகரங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் பங்காளாக்களை வாங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...