No menu items!

எரியும் மணிப்பூர் – அணைக்க என்ன செய்ய வேண்டும்?

எரியும் மணிப்பூர் – அணைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு மாதமாக வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் எரிந்துக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வீடுகள் தகர்க்கப்படுகின்றன. எரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு படைகள் சூழ்ந்திருந்தும் மக்கள் அச்சத்துடன் உயிர் பயத்துடன் ஒவ்வொரு நொடியையும் கடந்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது மணிப்பூரில்?

இந்திய வரைபடத்தைப் பார்த்தால் வட கிழக்கு ஒரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல் அழகாய் காட்சியளிக்கும் மாநிலம் மணிப்பூர். நான்கு பக்கம் மலை. நடுவே ஒரு தட்டு போல் ஒரு பள்ளத்தாக்கு இதுதான் மணிப்பூர்.

சின்ன மாநிலம். மொத்த மக்கள் தொகையே 28 லட்சம்தான். இந்த அழகிய சிறு மாநிலம் இன்று எரிந்துக் கொண்டிருப்பதற்கு காரணம் சாதி, மதம் மற்றும் அரசியல்வாதிகள்.

இங்கே பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் மலைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் சிக்கல். சண்டை.

பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிப்பவர்கள் இந்துக்கள். மெய்தி (Meitei) சமூகத்தை சார்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்ட சமூகமாக இப்போது இருக்கிறார்கள். இவர்கள்தாம் மணிப்பூரின் பெரும்பான்மை சமூகத்தினர் – சுமார் 53 சதவீதம். தங்களை பட்டியலின பழங்குடி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்த வழக்கில் மெய்தி சமூகத்தினரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. இது மெய்தி சமூகத்துக்கு மக்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று பார்க்கப்பட்டது.

மெய்தி சமூகத்தினருக்கு எதிராக மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி சமூகத்தினர் இருக்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் 90 சதவீதம் மலைப் பிரதேசங்கள்தாம். 10 சதவீதம்தான் பள்ளத்தாக்கு. இந்த மலைவாழ் பழங்குடியினர் நாகா (Naga) மற்றும் குகி (Kuki) சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவர்கள்.

மெய்தி சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்த்தால் தங்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் பெரும்பான்மை சமூகத்தினராக இருக்கும் மெய்தி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திவிடுவார்கள் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் பழங்குடி சமூகத்தினர்.

மணிப்பூரில் பழங்குடி பாதுகாப்பு சட்டம் இருப்பதால் பள்ளத்தாக்கில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மெய்தி இனத்தினர் மலைப்பகுதிகளில் இடங்கள் வாங்க இயலாது. இதுதான் அடிப்படியில் இருக்கும் முக்கியமான பிரச்சினை. அவர்களும் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட்டால் மலைப் பகுதிகளை வாங்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள் குகி மற்றும் நாகா இன மக்கள்.

சாதி, மதம் கலந்த இந்தப் பிரச்சினையில் மாநில பாஜக அரசு சரியாக செயல்படவில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு.

கிறிஸ்துவ பழங்குடி இன மக்களுக்கு எதிராக மெய்தி சமூகத்து இந்து மக்களுக்காக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செயல்படுகிறார் என்ற விமர்சனத்தை எதிர்க் கட்சிகள் வைக்கின்றன. பிரேன் சிங் மெய்தி சமூகத்தை சார்ந்தவர்.

பல ஆண்டுகளாக சிறு சிறு சச்சரவுகளுடன் இரு சமூகத்தினரும் வாழ்ந்துக் கொண்டிருந்த நிலையில் 2017ல் பாஜக அங்கு காலூன்றத் தொடங்கியப் பிறகுதான் சாதி, மத ரீதியான மோதல்கள் அதிகரித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க் கட்சிகள் வைக்கின்றன.

53 சதவீத இந்துக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டால் மணிப்பூரில் தங்களை யாரும் அசைக்க முடியாது என்பது பாஜகவினரின் கணக்கு என்று குற்றஞ்சாட்டுகின்றன எதிர்க் கட்சிகள்.

2021ல் மியான்மார் நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டபோது அங்கிருந்து பலர் மணிப்பூர் மாநிலத்துக்குள் சட்ட விரோதமாக நுழைந்திருக்கிறார்கள். அவர்களை கண்டறியும் முயற்சியில் மணிப்பூர் மாநில அரசின் பாதுகாப்பு படைகள் காடுகளுக்குள் நுழைந்து சோதனைகளை செய்திருக்கிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சிலரை பிடித்திருக்கிறது, சட்ட விரோத கட்டிடங்கள் என்று காடுகளில் இருந்த குடியிருப்புகளையும் கிறிஸ்துவ தேவாலாயங்களையும் இடித்திருக்கிறது.

சில பழங்குடியினர் ‘பாப்பி’ செடிகளை பயிரிடுவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள். பாப்பி செடி விதைகளிலிருந்து போதை வஸ்துக்கள் தயாரிக்கப்படுகின்றன. போதைப் பொருள் ஒழிப்பு என்ற அடிப்படையில் மணிப்பூர் பாதுகாப்பு படைகள் மலைகளுக்குள் சென்று 15,400 ஏக்கர் பாப்பி பயிர்களை அழித்ததாக மாநில அரசு தெரிவிக்கிறது. சுமார் 2500 பழங்குடி இன மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் போதைப் பொருள் ஒழிப்பு என்ற போர்வையில் பழங்குடி மக்களை மணிப்பூர் அரசு வேட்டையாடுகிறது என்பது பழங்குடி மக்களின் குற்றச்சாட்டு.

இப்படி பல சிக்கல்கள் இன்று வன்முறை மாநிலமாக மணிப்பூரை மாற்றியிருக்கிறது.

கடுமையான வன்முறைகளுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்று நிலைமையை நேரடியாக பார்த்தார். ஆலோசனைகள் கூறினார். ஆனால் வன்முறை நிற்கவில்லை. இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான பாதுகாப்பு படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

முதலில் மக்களின் நம்பிக்கையை இழந்த, வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் அரசு பதவி விலக வேண்டும்.

மத்திய அரசு தலையிட்டு பல்வேறு சமூகத்தினருக்கிடையே சமாதானத்தை உருவாக்கி அவர்களின் நல்லுறவுக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் நிலச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.

மிக முக்கியமாய் இந்த வன்முறையில் அரசியல் குளிர்காய்வதை உடனே நிறுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...