தேன் கூட்டை கலைத்து விட்டிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
அக்டோபர் 2 2023. சமீபத்திய இந்திய அரசியலில் முக்கியமான நாள். மகாத்மா காந்தி பிறந்த நாளில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பல எதிர்ப்புகள், வழக்குகள், தீர்ப்புகளுக்குப் பிறகு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதை செய்திருக்கிறார்.
இந்த முடிவுகள் பல ஆச்சர்யமான விஷயங்களை சொல்லுகின்றன. பீகார் மாநில தரவுகள்படி அந்த மாநிலத்தில்..
மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் (OBC) – 36.01%
பிற்படுத்தப்பட்ட சாதியினர் (EBC) – 27.12%
பட்டியல் சாதியினர் (SC) – 19.65%
இடஒதுக்கீடு இல்லாத உயர் சாதியினர் (Unreserved) – சுமார் 15.52%
பட்டியல் பழங்குடி சாதி (ST) – 1.68%
மத அடிப்படையில் பார்க்கும்போது,
இந்துக்கள் – 82 %
முஸ்லிம்கள் – 17.7%
கிறிஸ்தவர் – 0.05%
பௌத்தர்கள் – 0.08%
சீக்கியர்கள் – 0.01%
என்று பீகார் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் வெளிவந்துள்ள இந்த சாதிய புள்ளிவிரங்கள் தேசிய அளவில் பொருத்திப் பார்க்க முடியுமா? பொருந்துமா? நாடெங்கிலும் அரசியலை மாற்றுமா? பாஜகவின் இந்துத்வ அரசியலை மாற்றுமா? என்று ஏகப்பட்ட கேள்விகள்.
அத்தனைக்கும் பதில் வாய்ப்பிருக்கிறது என்பதே.
பீகார் சாதிய புள்ளிவிவரங்கள் வெளிவந்ததும் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் இந்தியில் வெளியிட்ட பதிவு இந்திய அரசியல் மாற்றத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
’பீகாரில் ஓ.பி.சி. + எஸ்.சி.+ எஸ்.டி. – 84% என்று சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. மத்திய அரசின் 90 செயலாளர்களில், 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவின் பட்ஜெட்டில் 5% மட்டுமே கையாளுகின்றனர். எனவே, இந்தியாவின் சாதிப் புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். அதிக மக்கள் தொகை, அதிக உரிமைகள், இது எங்கள் உறுதிமொழி’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் ராகுல் காந்தி. அதாவது சாதி எண்ணிக்கைக்கு ஏற்ப ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கான இடம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று கூறியிருக்கிறது. காங்கிரஸ், திமுக மட்டுமல்ல பல வட இந்திய கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது இது மேலும் வலுவான ஒன்றுபட்ட குரலாக ஒலிக்கும்.
2024 தேர்தல் சாதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடந்தால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சிக்கலைத் தரும். அதன் இந்துத்வா கொள்கை அடி வாங்கும்.
இதை உணர்ந்த பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன் சத்திஸ்கரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘அதிக மக்கள் தொகை, அதிக உரிமை என்று இப்போது காங்கிரஸ்காரர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இதைக் கேட்டால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்ன நினைப்பார் என்று தெரியவில்லை. அவர் சிறுபான்மையினருக்குதான் குறிப்பாக இஸ்லாமியருக்குதான் நாட்டில் முதல் உரிமை என்று பேசியிருக்கிறார். இப்போது காங்கிரஸ்காரர்கள் வேறு மாதிரி பேசுகிறார்கள்’ என்று காங்கிரசின் நிலைப்பாடு மாற்றத்தை சுட்டிக் காட்டுகிறார். முஸ்லீம்களுக்கு முன்னுரிமை என்று மன்மோகன் சிங் சொன்னதை மோடி அழுத்தி சொல்வதற்கு காரணம் இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக பெறுவதற்காக. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளிவந்தால் இந்து – முஸ்லிம் என்று அரசியல் செய்ய முடியாது. மத அரசியல் சாதி அரசியல், இட ஒதுக்கீடு அரசியல் என்று மாறும்.
தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பல வருட கோரிக்கைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை மத்தியில் ஆண்ட கட்சிகள் எதுவும் அதை செயல்படுத்தவில்லை.
இப்போது நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு 1931ல் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இருந்தபோது எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலானது.
அதன்பின் ஒவ்வொரு பத்தாண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றன. 1951, 1961, 1971…. என்று தொடர்ந்து கணகெடுப்புகள் நடந்துக் கொண்டே இருக்கின்றன. 2011ல் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சமூக, பொருளாதார, சாதிய அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1931க்குப் பிறகு சாதிய அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரே கணக்கெடுப்பு அது. ஆனால் அந்த கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன, சாதிய புள்ளிவிவரங்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை. அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு மறுக்கிறது.
1990ல் வி.பி.சிங் ஆட்சியின்போது மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைபடி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அந்த இட ஒதுக்கீடும் 1931ல் எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிவரங்கள்படிதான் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் இப்போது இடஒதுக்கீட்டின் உச்ச அளவு 50 சதவீதம்தான். இதை நிர்ணையித்தது உச்ச நீதிமன்றம். தமிழ்நாடு, ஹரியானா, சத்திஸ்கர் ஆகிய சில மாநிலங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் தங்கள் மாநிலங்களில் அதிக இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றன.
சாதிய அடிப்படையில் இந்தியா முழுவதிலும் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் இந்த இட ஒதுக்கீடு விகிதங்களில் மாற்றம் செய்ய கோரிக்கைகள் பலமாக வரும். கிட்டத்தட்ட தேன் கூட்டை கலைத்த கதைதான்.
இந்து என்ற ஒற்றை அடையாளத்தில் ஆதரவை திரட்டி வைத்திருக்கும் பாஜகவுக்கு சாதிய அடிப்படையில் இந்துக்கள் பிரிந்தால் அவர்களின் வாக்குகளை மொத்தமாக கவர்வதற்கு சிரமப்படும். பாஜகவின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் உயர்சாதி, உயர் வர்க்க இந்துக்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதிரீதியான கணக்கெடுப்பும் அதனைத் தொடர்ந்து எழப்போகும் இடஒதுக்கீடு சிக்கல்களும் பாஜகவுக்கு உகந்ததாக இருக்காது.
1990ல் மண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்பட்ட போதும் இதே போன்ற ஒரு அரசியல் சூழல்தான். எதிர்க் கட்சிகள் மண்டலை முன்னிறுத்தின. பாஜக அதனை எதிர்க்க கமண்டலத்தை முன்னிறுத்தியது. மண்டல் Vs கமண்டல் என்று அப்போது அந்த அரசியலை வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.
வி.பி.சிங் ஆட்சி கவிழ்ப்பு, பாபர் மசூதி இடிப்பு, ராஜீவ் படுகொலை என்று அரசியல் திசை மாறி வேறு பாதைக்கு பயணித்து கமண்டல அரசியல் உச்சம் பெற்று கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறது.
மீண்டும் சாதி பிரச்சினை முளைத்திருக்கிறது.