No menu items!

அன்று 60 ரூபாய் – இன்று 48 கோடி ரூபாய் – முகமது சிராஜின் Cricket Story

அன்று 60 ரூபாய் – இன்று 48 கோடி ரூபாய் – முகமது சிராஜின் Cricket Story

உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் என்ற இமேஜுடன் இந்த உலகக் கோப்பை தொடருக்குள் கால் வைக்கிறார் முகமது சிராஜ். ஷாஹின்ஷா அப்ரிடி, ஸ்டார்க், டிரெண்ட் போல்ட் என்று வேகத்தில் கொடிக்கட்டிப் பறக்கும் பந்துவீச்சாளர்கள் பலர் இருக்கலாம். ஆனால் சடசடவென விக்கெட்களை அள்ளுவதில் இப்போதைக்கு உலகின் நம்பர் 1 வீர்ர் முகமது சிராஜ்தான்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீர்ர் என்ற பெருமையும் முகமது சிராஜுக்குதான் இருக்கிறது. இக்காலகட்டத்தில் 28 ஒருநாள் போட்டிகளில் ஆடிய சிராஜ் 54 விக்கெட்களை எடுத்துள்ளார். அதேபோல் ஒரு ஓவருக்கு மிகக் குறைவாக 4.74 ரன்களையே அவர் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் முகமது சிராஜ். அவரது அப்பா முகமது காஸ் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர். அவரது வருமானம் மட்டுமே குடும்பத்துக்கு போதாமல் இருந்ததால் அம்மாவும் பல்வேறு வீடுகளில் வேலை பார்த்து குடும்ப செலவுக்காக பணம் சம்பாதித்தார். இப்படி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த சிராஜுக்கு, மற்ற இந்திய வீர்ர்களைப் போல கிரிக்கெட் அகாடமிகளுக்கு சென்று பயிற்சி பெறும் வசதியெல்லாம் கிடைக்கவில்லை. வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறிய மைதானங்களில் வெறுங்காலில் கிரிக்கெட் ஆடித்தான் சிறுவயதில் பயிற்சி பெற்றார்.

ஆரம்பத்தில் ஒரு பெரிய பேட்ஸ்மேனாக வேண்டும் என்பதுதான் சிராஜின் கனவாக இருந்தது. ஆனால் அவரது பந்து வீசும் வேகத்தைப் பார்த்த நண்பர்கள்தான் வேகப்பந்து வீச்சாளராக பயிற்சி பெறுமாறு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் சிராஜின் பந்து வீசும் ஆற்றலைப் பார்த்த முகமத் மஹ்பூப் அகமத் என்ற பயிற்சியாளர் அவருக்கு இலவசமாக பயிற்சி தர சம்மதித்துள்ளார். இதற்காக தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள உப்பல் ஸ்டேடியத்துக்கு அவர் தினந்தோறும் செல்லவேண்டி இருந்தது. அங்கு மற்ற வீர்ர்கள் எல்லாம் காரில் வந்து பயிற்சி பெற, சிராஜ் மட்டும் தனது அப்பா செகண்ட் ஹாண்டில் வாங்கிக் கொடுத்த பழைய பிளாட்டினா பைக்கில் பயிற்சிக்கு சென்றுள்ளார்.

இந்த காலகட்டத்தைப் பற்றி சொல்லும் சிராஜ், “என் அப்பாவின் வருமானம் குறைவு என்றாலும், நான் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வருவேன் என்று அவர் நம்பினார். அதனால் தனது வருமானத்தில் இருந்து என் பயிற்சி செலவுக்காக தினமும் 60 ரூபாய் தருவார். அதில் 40 ரூபாய் பெட்ரோலுக்கே போய்விடும். அப்படி பெட்ரோல் போட்டாலும் அந்த பைக்கை சில அடிகளாவது தள்ளிக்கொண்டு ஓடினால்தான் ஸ்டார்ட் ஆகும். பல நாட்கள் காலையில் இருந்து மாலை வரை பயிற்சி இருக்கும். அப்போது சாப்பாட்டு செலவுக்கு என்னிடம் மொத்தமே 20 ரூபாய்தான் இருக்கும்.

அப்பா எனக்கு தினமும் 60 ரூபாய் கொடுத்து கிரிக்கெட் ஆட அனுப்புவது என் அம்மாவுக்கு பிடிக்காது. என் அண்ணன் இஞ்சினீயரிங் படிக்கும்போது, நான் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக அம்மா திட்டுவார். ஆனா அப்பா, அவரை சமாதானப்படுத்தி என்னை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைப்பார்” என்கிறார்.

2015-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் ஆடும் ஹைதராபாத் அணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதன் மூலம் சிராஜின் கஷ்டங்கள் ஓரளவு முடிவுக்கு வந்தாலும், அவர் சுகபோகமாக வாழத் தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக ஆஅர்சிபி அணியால் வாங்கப்பட்ட பிறகுதான். ஐபிஎல்லில் ஆடத் தொடங்கியதும், தன் அப்பாவை இனியும் ஆட்டோ ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் சிராஜ். சிறுவயதில் தனக்காக கஷ்டப்பட்ட அப்பாவை சொகுசாக வாழவைக்க விரும்பினார்.

ஆனால் அவரது எண்ணத்தை நிறைவேற்ற விடாமல் விதி தடுத்தது. 2020-ம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாட முகமது சிராஜ் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது அவரது அப்பா உடல்நலக் குறைவால் இறந்தார். ஆனால் அப்பா இறந்த செய்தி கேட்டும், சிராஜ் ஊருக்கு திரும்பவில்லை. தன்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக்கி பார்ப்பதே அப்பாவின் ஆசை என்று கூறி, ஆஸ்திரேலியாவிலேயே இருந்து போட்டிகளில் பங்கேற்றார். அந்த ஈடுபாடுதான் இன்று கிரிக்கெட் உலகில் அவருக்கு வெற்றிகளை குவித்து தருகிறது.

ஒரு நாளைக்கு 60 ரூபாயை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்திய முகமது சிராஜின் இன்றைய சொத்து மதிப்பு 48 கோடி ரூபாய். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமான வீடு, சொகுசுக் கார்கள் என்று உல்லாசமான வாழ்க்கை அவரைத் தேடி வந்திருக்கிறது. இத்தனை வசதிகள் கிடைத்தும், ஒரு காலத்தில் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல தான் பயன்படுத்திய பிளாட்டினா பைக்கை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார் சிராஜ்.

அவரது ஆசையெல்லாம் இப்போது ஒன்றே ஒன்றுதான், தன் தந்தை விரும்பியபடி சிறப்பாக பந்து வீசி இந்தியாவுக்கு உலக்க் கோப்பையை வென்றுதர வேண்டும் என்பதே ஆசை, அந்த ஆசை நிறைவேறவேண்டும் என்பதுதானே நம் ஆசையும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...