ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ், இப்போது மீண்டும் அவற்றில் ஆட தீர்மானித்துள்ளார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடருக்கு புதிய வீர்ரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஸ்டோக்ஸ் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்கும், சிஎஸ்கே புதிய வீர்ரை தேர்ந்தெடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?… சம்பந்தம் இருக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமையால் இங்கிலாந்துக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தவர் பென் ஸ்டோக்ஸ். அதன் பிறகு முட்டி வலியால் பென் ஸ்டோக்ஸ் பாதிக்கப்பட, போட்டிகளில் அவரால் அதிகமாக பந்துவீச முடியவில்லை. இதனால் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அத்துடன் முக்கியமான போட்டிகளில் மட்டும் ஆட முடிவெடுத்தவர், கடந்த 2022-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகிய பின்னர் டி20 போட்டிகளில் ஆர்வம் காட்டிய அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.23 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வுபெறலாம் என்பதால், அடுத்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸை உருவாக்க அவரை சிஎஸ்கே வாங்கியதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் 2023 ஐபிஎல்லில் தோனி எல்லா போட்டிகளிலும் ஆட ஸ்டோக்ஸ் கேப்டனாக வேண்டிய சூழல் ஏற்படவில்லை.
சிஎஸ்கே அணிக்காக ஆடிய சில போட்டிகளில் பங்கேற்றாலும், ஸ்டோக்ஸால் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அத்துடன் காயம் காரணமாக தொடரின் நடுவில் சொந்த ஊர் திரும்பினார். அவர் இல்லாமலேயே சிஎஸ்கே அணி கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த சூழலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஆட பென் ஸ்டோக்ஸ் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார். இந்த உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியிலும் பென் ஸ்டோக்ஸ் ஆடுவார் என்றும், இதன்பிறகு தனது முட்டியில் அவர் அறுவைச் சிகிச்சை மேர்கொள்ளப் போவதாகவும் இங்கிலாந்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இந்திய தொடருக்குப் பின் ஸ்டோக்ஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால், அடுத்த ஆண்டில் நடக்கும் ஐபிஎல் தொடரில் அவர் ஆடமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் ஆடாத நிலையில் அவருக்கு பதிலாக புதிய வீர்ரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது.
கடந்த ஆண்டில் நடந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து ஸ்டோக்ஸை வாங்குவதற்காக சாம் கரண், காமரூன் கிரீன் ஆகியோரை வாங்குவதை சென்னை சூப்பர் கிங்ஸ் தவிர்த்தது. அதனால் அவர்கள் வேறு அணிக்கு சென்றுவிட்டனர். இந்த சூழலில் தனது நாட்டு அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸை ஸ்டோக்ஸ் பாதியில் தவிக்க விட்டிருப்பது சிஎஸ்கே ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
அதேநேரத்தில் ஸ்டோக்ஸின் இந்த முடிவு சென்னை அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அதன் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“கடந்த ஏலத்தில் 16.25 கோடி ரூபாய் கொடுத்து பென் ஸ்டோக்ஸை வாங்கினோம். இப்போது அவர் ஐபிஎல்லில் இருந்து விலகுவதால் அந்த தொகை மிச்சமாகிறது. மேலும் ராயுடு ஓய்வு பெற்றதால் அவரது சம்பளமான 6.75 கோடி ரூபாயும் மிச்சமாகிறது. அத்துடன் அடுத்த ஆண்டில் ஒவ்வொரு அணியும் புதிய வீர்ரை வாங்க தலா 5 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு சுமார் 30 கோடி ரூபாய் மீதமாகும். அந்த பணத்தை வைத்து மேலும் சிறந்த வீர்ர்களை வாங்கி சிஎஸ்கே அணியை வலிமையாக்குவோம்” என்று சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளில் ஒருவர் கூறினார்.