No menu items!

பங்காரு அடிகளார்: அருள்வாக்கு To ஆன்மிக புரட்சி

பங்காரு அடிகளார்: அருள்வாக்கு To ஆன்மிக புரட்சி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் செவ்வாடை பக்தர்களால் ‘அம்மா’ என பக்தியோடு அழைக்கப்படுபவருமான பங்காரு அடிகளார், தனது 83ஆம் வயதில் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். பங்காரு அடிகளாருக்கு முன்பும் பின்பும் நிறைய சாமியார்கள் தோன்றியுள்ளார்கள். அவர்கள் எல்லோரையும்விட ஒரு விஷயத்துக்காக பங்காரு அடிகளார் கடவுள் மறுப்பாளர்களாலும் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்வதுக்கும் மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்குள் வந்து வழிபாடு செய்யவும் அனுமதியளித்த ஆன்மிக புரட்சி!

பங்காரு அடிகளார், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் – மீனாம்பிகை தம்பதிக்கு 3-3-1941இல் பிறந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலகட்டத்தில் உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமியை திருமணம் செய்துகொண்டாா்.

இந்நிலையில், மேல்மருவத்தூரில் ஒரு வேப்பமரத்தடியில் அருள்வாக்கு சொல்லத் தொடங்கினார். அடிகளார் அருள்வாக்கு தொடர்பாக தனக்கேற்பட்ட அனுபவத்தை சொல்லும் எழுத்தாளர் ராஜேஷ்குமார், “1988ஆம் வருடம்… ஆகஸ்ட் மாதம்… கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த எனது வாசகர் ஆனந்தன், மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாரைச் சந்தித்து, கண்களில் நீர் கோர்க்க, ஒரு கோரிக்கை வைத்தார்.

‘என்னுடைய அபிமான எழுத்தாளர் ராஜேஷ்குமாரைப் பற்றி அவதூறாகவும் தரக்குறைவாகவும் ஒரு பத்திரிக்கை எழுதிக் கொண்டிருக்கிறது. அதை எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, நான் மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறேன். இந்தப் பிரச்சினைக்கு, நீங்கள் தீர்வு சொல்ல வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

அதற்கு பங்காரு அடிகளார், ‘அந்தப் பத்திரிகை அப்படி எழுதியது ஒரு திருஷ்டி பரிகாரம். ராஜேஷ்குமாருக்கு இனிமேல் தான், நல்ல காலம். அவர் மேன்மேலும் உயர்வார். எழுத்துலகில் ஓர் உச்சத்தை தொடுவார். இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்லி, குங்குமத்தையும் மஞ்சள் கயிற்றையும் கொடுத்து, அவருக்கு இதை அனுப்பி வை, சில வாரங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, வாசகர் ஆனந்தும் எனக்கு அவற்றை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அடுத்த இரண்டு வருடங்களுக்குள், அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு, பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, நடத்திக் கொண்டிருந்த பத்திரிகைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சொத்து, சுகத்தை இழந்து என் வீட்டிற்கு வந்து அழுதபடி மன்னிப்பு கேட்டார்.

இதுவரைக்கும் பங்காரு அடிகளாரை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், 1988 முதல் எப்போதும் அவரோடு இருப்பதைப் போன்ற ஓர் உணர்வை அடைந்துகொண்டே இருக்கிறேன். அவர் மறையவில்லை, எங்கும் நிறைந்து விட்டார்” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜேஷ்குமார் அனுபவம் போல் அடிகளார் அருள்வாக்கு பெரும்பான்மையும் அப்படியே நிகழ்ந்துவிடவே, அவரது பெயர் பிரபலமடையத் தொடங்கியது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தாண்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மேல்மருவத்தூர் நோக்கி குவியத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, 1970-களில் ஆதிபராசக்தி சக்தி பீடத்தை நிறுவினார். ஒரு கட்டத்தில் ஆதிபராசக்தி பக்தர்கள் அடிகளாரையே கடவுளாக கருதி ‘அம்மா’ என்று அழைத்தனர்.

1978-இல், மேல்மருத்துவருக்கு வெளியே, முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார், பங்காரு அடிகளார். இது தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து இன்று 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும் 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களுமாக வளர்ச்சியடைந்துள்ளன.

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் இந்த வளர்ச்சிக்கு பங்காரு அடிகளார் ஆன்மிகத்தில் ஏற்படுத்திய புரட்சி முக்கிய காரணம். அதாவது கடவுள் வழிபாட்டில் பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்தவற்றை நீக்கியது. இது தொடர்பாக பேராசிரியர் அ. ராமசாமி, “தமிழ்நாட்டு ஆண்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு குழுவாகச் சேர்ந்து விரதம் இருப்பது, பாடுவது, ஆடுவது, பயணம் செய்வது என்ற செயல்பாட்டில் பெண்களை நீக்கம் செய்தல் முக்கியமான ஒன்று. அதன் மறுதலையாக ஆதிபராசக்தி வழிபாட்டை விவரிக்கலாம். ஆண்களை நீக்கிவிட்டுப் பெண்கள் குழுவாகச் சேர்தல், விரதம் இருத்தல், பாடுவது, ஆடுவது, தனி வாகனங்களில் பயணித்தல் என அதன் இயங்குநிலைகள் இருந்தன. இதனால் எண்பதுகளில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள் சினிமா ரசிகர் மன்றங்களைவிடத் தீவிரமாக இருந்தன. வைதீக மரபு வழிபாட்டு முறைக்கு மாற்று முறைகளை முன்வைத்த ‘அம்மா’ வழிபாடு கன்னட வீரசைவத்திலிருந்து பல கூறுகளை உள்வாங்கிய ஒன்று” என்கிறார்.

பங்காரு அடிகளார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் இதனை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அஞ்சலியில், “அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “கிருபானந்த வாரியார் மறைவிற்கு பிறகு தமிழ் வழிபாட்டு முறையில் மாபெரும் புரட்சி செய்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்” என்கிறார்.

“கருவறைக்குள் சாதாரணமானவர்கள் நுழையக்கூடாது; சில நாட்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையவே கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு இருந்த காலத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்பே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை நிறுவி, அதில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம்; அவர்கள் கருவறைக்கே சென்று வழிபாடு செய்யலாம் என்ற நடைமுறையை ஏற்படுத்தியவர்” என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

அடிகளாரின் இந்த ஆன்மிக புரட்சி இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளில் வாழும் இந்து பக்தர்களையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு வெளியே பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள் செயல்படுகின்றன.

இலங்கையைச் சேர்ந்த நடேசபிள்ளை சிவேந்திரன், “பால் வேறுபாடு, சாதி வேறுபாடுகளைப் புறந்தள்ளி தனது வழிபாட்டு முறைகளில் எல்லோருக்கும் சமனான வாய்ப்புகளை வழங்கியவர் அடிகளார். இதனால் இலங்கையிலும் அவருக்கு அடியார்கள் இருக்கின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள்கூட அவரின் பக்தர்களாக மேல்மருவத்தூருக்கு சென்று வருகின்றனர்” என்கிறார்.

அதேநேரம் அடிகளாரை சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளன. மேல்மருத்தூர் பகுதியில் படையாச்சி சமூகத்தினர் அதிகம் வசிப்பதால் அடிகளார் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சிலரும், அவர் கவுண்டர் சமூகத்தவர் என்று சிலரும், வேறு சிலர் அவர் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான முத்துநாகு, “பங்காரு அடிகளின் தாத்தா பெயர் பங்காரு நாயக்கர். இவர் பிறந்தது கண்டமனூர் ஜமீன் எல்லையில் உள்ள நல்லிடைசேரி என்ற பாலசமுத்திரம். வேளாண்மை உற்பத்தி பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்த பங்காரு நாயக்கர், அதில் பெரும் நட்டமடைந்த நிலையில், வடக்கு நோக்கி பயணப்பட்டு படையாச்சிகளுடன் நட்பு ஏற்படுத்தி பிழைப்பு நடத்தினார். அப்படித்தான் அடிகளார் குடும்பம் மேல்மருவத்தூரில் நிலைகொண்டது” என்கிறார்.

சாதியைவிட, அடிகளார் அறக்கட்டளை மூலமாக, மேல்மருவத்தூர் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகளை இவரது குடும்பத்தினர் தொடங்கியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த கல்வி நிறுவனங்களில் அதிக அளவு சேர்க்கை கட்டணம் (capitation fee) வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தீவிர வருமான வரி சோதனைகள் 2010இல் நடைபெற்றன. அப்போது, பங்காரு அடிகளாரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள், அவரது படுக்கை அறை உள்பட அவரின் வீட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்பது கோடி ரூபாய் பணத்தை மீட்டதாக செய்திகள் வெளியாகின. அவரது கல்வி நிறுவனத்திலும் கணக்கு காட்டப்படாத பணம் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பங்காரு அடிகளார் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்ட மருத்துவக் கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை மீறியதாக மத்தியப் புலனாய்வுத் துறையும் வழக்கு ஒன்றை ஜூலை 2010இல் பதிவு செய்தது.

தொடர்ந்து, 2012இல் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மனைவி லஷ்மி ஆகியோர் நிர்வகிக்கும் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழக அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. அதில், கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் கைதாகினர்.

இந்த சர்ச்சைகள் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா உட்பட பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், ‘பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவரது இறுதி சடங்கு நடைபெறும்’ என தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளதும் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

விமர்சனங்கள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக கடவுள் வழிபாட்டில் பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்தவற்றை உடைத்து, ஆலயத்தை அவர்களுக்கு திறந்து விட்டதற்காக, நிச்சயம் இன்னும் பல்லாண்டுகள் பங்காரு அடிகளார் பேசப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...