No menu items!

விஜய்க்கு தூது விட்ட எடப்பாடி – மிஸ் ரகசியா

விஜய்க்கு தூது விட்ட எடப்பாடி – மிஸ் ரகசியா

லியோ டீ ஷர்ட்டுடன் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“உன்னையும் விஜய் ஜுரம் விட்டுவைக்கவில்லையா? ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட்  ஷோ பார்க்கப் போயிட்டியா?”

”எனக்கு மட்டும்தான் விஜய் ஜுரம் பிடிச்சிருக்கா என்ன? நம்ம எடப்பாடிக்கும்தானே விஜய் ஜுரம் பிடிச்சிருக்கு?”

 “எடப்பாடிக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?”

 “நடிகர் விஜய்யைப் பார்த்து திமுக பயப்படுதுன்னு எடப்பாடி நினைக்கிறார். தனக்கு நெருக்கமான ஒருத்தர் மூலமா விஜய் தரப்புல  தூது விட்டிருக்கார். ‘நாடாளுமன்றத் தேர்தல்ல விஜய் அதிமுகவை ஆதரிக்கணும். அப்படி ஆதரிச்சா சட்டமன்றத் தேர்தல்ல விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் தருவோம். தேர்தல் செலவையும் அதிமுக பார்த்துக்கும்’னு தூதர் மூலமா தகவல் அனுப்பியிருக்கார் எடப்பாடி.”

 “இதுக்கு விஜய் தரப்பு பதில் என்ன?”

“நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள கூட்டணி பத்தி பேச வந்துட்டீங்களே… எனக்கு கொஞ்சம் அவகாசம் தாங்க.  யோசிச்சு சொல்றேன்னு விஜய் சொன்னாராம்.  தன்னுடைய தூது முயற்சிக்கு விஜய் நோ சொல்லலைங்கிறதுல எடப்பாடிக்கு ரொம்ப சந்தோஷமாம்.”

 “உதயநிதியும் லியோ படத்தைப் பார்த்து பாராட்டி இருக்காரே?”

 “ஏற்கெனவே லியோ இசை வெளியீட்டு விழா நடக்காததுக்கு உதயநிதிதான் காரணம்னு அவர் மேல சிலர் புகார் சொன்னாங்க.  பட ரிலீஸ் விஷயத்துலயும் தன் தலை உருண்டுடக் கூடாதேன்னுதான் ரிலீசுக்கு முதல் நாளே பார்த்து பாராட்டி இருக்கார் உதயநிதி.”

 “விஜய்யைப் பத்தி உளவுத் துறை ஏதோ சர்வே நடத்தினதா சொல்றாங்களே?”

‘விஜய்யை பத்தி சர்வே நடக்கல. எதிர்காலத்தில் திமுகவுக்கு சவாலாக இருக்கக்கூடிய தலைவர்கள் யார்னுதான் சர்வே நடத்தியிருக்காங்க.  அதுல பலரும்  விஜய் பெயரைச் சொல்லி இருக்காங்க. விஜய்யோட வளர்ச்சியை திமுக தீவிரமா கவனிச்சுட்டு வருது”

’எடப்பாடி முகத்துல சமீப காலமா கொஞ்சம் தெளிவு தெரியுதே.”

 “எஸ்.பி.வேலுமணி விவகாரம்தான் காரணம். பாஜக கூட்டணியை அதிமுக முறிச்ச நாள்ல இருந்தே, இந்த நடவடிக்கையில எஸ்.பி.வேலுமணிக்கு விருப்பம் இல்லைன்னு ஒரு தகவல் பரவிட்டு இருந்துச்சு.  எடப்பாடியோட இந்த நடவடிக்கை பிடிக்காம, எஸ்.பி.வேலுமணி அதிமுகவை உடைக்கப் போறார்னு ஒரு தகவலை சில பாஜக தலைவர்கள் பரப்பிட்டு இருந்தாங்க. வேலுமணிக்கு பாரதிய ஜனதா தலைவர்களோட நல்ல தொடர்பு இருக்குங்கிறது எடப்பாடிக்கும் தெரியும். அதனால அந்த தகவல் உண்மையா இருக்குமோங்கிற  சந்தேகம் அவருக்கும் இருந்திருக்கு. அதனால நேர்லயே கேட்டுட்டார்”

 “ஆமா, சந்தேகத்தை ஏன் வளர்க்கணும்?”

 “வேலுமணி வீட்டுக்கே போய் அவர்கிட்ட பேசியிருக்கார். ‘நான் முதல்வரா இருந்தப்ப நீங்க எனக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தந்தீங்கங்கிறதை நான் மறக்கல.  அதேசமயம் இப்ப நான் எந்த முடிவும் தன்னிச்சையா எடுக்கலை.  நீங்கள் உட்பட எல்லோரையும் கலந்து ஆலோசிச்சுதான் பாஜக கூட்டணி வேண்டாம்கிற முடிவை எடுத்தேன். அண்னாமலை நம்மளை பல விஷயத்தில் புண்படுத்தி இருக்கார். இந்த சூழல்ல பாரதிய ஜனதா கூட்டணி தொடரணும்னு நீங்க விரும்பறீங்களா’ன்னு கேட்டிருக்கார்”

 “அதுக்கு எஸ்.பி.வேலுமணி என்ன சொன்னாராம்?”

 “எடப்பாடியே வீட்டுக்கு வந்து தன்கிட்ட பேசினதும் எஸ்.பி.வேலுமணி நெகிழ்ந்து போயிருக்கார்.  உணர்ச்சிவசப்பட்ட அவர், ‘நீங்க எந்த வதந்திகளையும் நம்பாதீங்க. நான் உங்களுக்கு கட்டுப்பட்டு உங்கள் சொல்படித்தான் கேட்பேன். ஜெயலலிதா, சசிகலா மாதிரி நீங்க தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கலை. எல்லாரையும் கலந்து ஆலோசனை செஞ்சுதான் முடிவுகளை எடுக்கறீங்க. எந்த விஷயத்தையும் எல்லாரையும் கேட்டுதான் செய்யறீங்க. அதனால என்னைப் பற்றி உங்களுக்கு எந்த சந்தேகமும் வரத் தேவையில்லை. நான் என்னைக்கும் உங்க கூடத்தான் இருப்பேன்’ன்னு சொல்லி இருக்கார். இதைக் கேட்ட பிறகுதான் எடப்பாடிக்கு நிம்மதி வந்துச்சாம்.”

 “வேலுமணி தந்த நம்பிக்கையிலதான் இப்ப சாட்டையை சுழற்ற ஆரம்பிச்சு இருக்காரோ?”

 “ஆமாம். பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு தராட்டி அவங்க மேல  கடுமையான நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நடக்குதுன்னு  எனக்கு தெரியும் என்னை ஏமாத்த முயற்சி செய்ய வேண்டாம்னு பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்துல பேசியிருக்கார் எடப்பாடி.   கட்சியை தன் கட்டுக்குள் வைத்திருக்க தான் ஒரு ஆளுமை உள்ள தலைவராக இருக்கணும்னு அவர் விரும்பறதுதான் அதுக்கு காரணம்.”

 “செந்தில் பாலாஜிக்கு இந்த தடவையும் ஜாமீன் கிடைக்கலியே?”

 “உயர் நீதிமன்றத்தோட இந்த முடிவால திமுக அதிர்ச்சியில இருக்கு. ஜாமீன் மனு  தள்ளுபடியோட நிக்காம தலைமறைவா இருக்கிற செந்தில் பாலாஜியோட சகோதரர் அசோக்குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுங்கன்னு  நீதிமன்றம் சொனதுல இருந்து செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடிக்கு காரணம் அசோக்குமார்னு திமுக முடிவு செய்திருக்கு.  செந்தில்பாலாஜி குடும்பத்திடம் ஏற்கனவே சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறைக்கு சென்று விசாரணைக்கு ஒத்துழைக்கச் சொல்லுங்க.  நாளைக்கு இதையே காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமீன் மனுக்கு  பிரச்சனை ஏற்படும் என்று ஏற்கெனவே திமுக மேலிடம் சொல்லி இருக்கு. செந்தில்பாலாஜி குடும்பத்தினர்தான் அதைச் சரியா கேட்கலை.  இனியாவது கேட்குமான்னு தெரியலை. உயர் நீதிமன்றம் கைவிட்ட நிலையில உச்ச நீதிமன்றத்தில் எப்படியாவது செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வாங்க திமுக தலைமை முயற்சி செய்துட்டு வருது.”

“அமைச்சர் பதவியிலிருந்து எடுத்துட்டா ஜாமீன் கிடைக்கும்னு சொல்றாங்களே?”

”அதையும் வழக்கறிஞர்கள் சொல்லியிருக்காங்க. இது பத்தி கட்சி மேலிடத்துல இரண்டு விதமான கருத்து இருக்கு. செந்தில் பாலாஜியை நீக்கலாம்னும் நீக்கினால் அவர் அப்ரூவர் ஆயிடுவார்னும் சொல்றாங்க. ஸ்டாலின் தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கிறார். அவரை அமைச்சரவையிலருந்து எடுக்காம செந்தில் பாலாஜியே ராஜினாமா செய்யற மாதிரி கடிதம் வாங்கி அவரை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கலாம்னு கட்சிக்காரங்க சொல்றாங்க”

”சரி, கடைசியா ஒரு கேள்வி. லியோ ஹிட்டா?”

“ஹிட்டுனா நீங்க இந்த கேள்வியே கேட்டுருக்க மாட்டிங்களே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...