No menu items!

அட்டைப் பெட்டியில் குழந்தை உடல் – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

அட்டைப் பெட்டியில் குழந்தை உடல் – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவக்கிடங்கில் பணம் கொடுக்காததால் குழந்தையின் உடலை துணியில் சுற்றிக் கொடுக்காமல், ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மசூத். இவரது மனைவி சௌமியா. டிசம்பர் 5-ம் தேதி, மழைக்கு நடுவில் சௌமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் மழை வெள்ளம் காரணமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. இதைத்தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். மழை வெள்ளம் காரணமாக வேறு வாகனங்களிலும் சௌமியாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சௌமியாவுக்கு பிரசவம் ஆனது. ஆனால் அந்த பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து தொப்புள்கொடியை அறுக்காத நிலையில் மீன்பாடி வண்டி ஒன்றில் சௌமியாவையும், குழந்தையையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தனர். அங்கிருந்து ஜி3 அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த மருத்துவமனையின் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. மருத்துவமனையை திறக்க முடியாது என்று அங்கிருந்தவர்கள் கூறினர். பின்னர் பெண் போலீஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடந்தது. அதற்கு ரூ.2,500 செலவாகியுள்ளது.

பின்னர் சௌமியாவையும், குழந்தையையும் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு குழந்தையை பிணவறைக்கு எடுத்து சென்றதுடன் சௌமியாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அடுத்த நாள் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 2,500 ரூபாய் வேண்டும் என்று கூறியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்று மசூத் கூறியதால், அவர்கள் உடலை அடக்கம் செய்யவில்லை. குழந்தையின் உடலை எடுத்துச் செல்லுமாறு மசூத்திடம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். குழந்தையின் உடலை பணம் இல்லாத்தால் மசூதால் அடக்கம் செய்ய முடியவில்லை. 4 நாட்களுக்கு அவர் பல்வேறு இடங்களில் அலைந்துள்ளார்.

4 நாட்கள் அலைந்த நிலையில், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவியை நாடியுள்ளார் மசூத். இதன்பிறகே குழந்தையின் உடலை அடக்கம் செய்யக்கூடிய சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற மசூத் அங்கிருந்து குழந்தையின் உடலைப் பெற்றுள்ளார்.

மசூதிடம் குழந்தையை ஒப்படைக்கும்போது அதை முறையாக துணியில் சுற்றிக் கொடுக்காமல், ஒரு அட்டைப்பட்டியில் வைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அட்டைப் பெட்டியில் வைத்து குழந்தையை அடக்கம் செய்ய மசூத் எடுத்துச் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணம் கொடுக்காத்தால் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து குழந்தையின் உடலை கொடுப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் உடலை சரியான முறையில் ஒப்படைக்காத பிணவறை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிணவறை பணியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்ப்டடுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, பன்னீர்செல்வம் பணியிடை நீக்கத்தில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி கூறுகையில், “இறந்த குழந்தையை பிணவறையில் இருந்து கொடுப்பதற்கு லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இச்சம்பவம் தொடர்பாக, குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரிடமும் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. இறந்தே பிறக்கும் குழந்தைகளின் உடலை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொடுக்க வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக “வெளியாள் ஒருவர் 2,500 ரூபாய் கொடுத்தால், குழந்தையை துணியில் சுற்றித் தருவதாக கூறினார். மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் யாரும் என்னிடம் பணம் கொடுக்க வேண்டும் என கூறவில்லை. மஅந்த நபர் வெளியாள் என்று தெரிந்திருந்தால், இதுகுறித்து நான் கூறியிருக்கவே மாட்டேன். மற்றபடி மருத்துவமனை பணியாளர் மீது தவறு எதுவும் இல்லை” என்று குழந்தையின் தந்தை மசூத் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...