No menu items!

ஆசிய கோப்பை கிரிக்கெட் – இவர்களை கவனியுங்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் – இவர்களை கவனியுங்கள்!

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தானிலும், இலங்கையிலுமாக நடக்கவுள்ள இந்த கிரிக்கெட் தொடர், அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டித் தொடரில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த பல வீர்ர்கள் தயாராக இருக்கிறார்கள். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய வீர்ர்கள் யாரென்று பார்ப்போம்…

குல்தீப் யாதவ்:

குல்தீப்பின் கிரிக்கெட் பயணம் ரோலர் கோஸ்டரைப் போன்றது. ஒரு கட்டத்தில் இந்தியாவின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்த குல்தீப், பின்னர் அதே வேகத்தில் அணியில் இருந்து காணாமல் போனர். உள்ளூரில் நடந்த ஐபிஎல் போட்டியில்கூட தனது சொந்த அணியான கேகேஆர் அணியால் ஒதுக்கப்பட்டார். ஆனால் கடுமையான போராட்டத்துக்கு பிறகு அதிலிருந்து மீண்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மாறிய குல்தீப், அந்த அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராய் மாறினார். அந்த சக்சஸ் இந்திய அணிக்கு குல்தீப்பை மீண்டும் கொண்டுவந்தது. இப்போது சாஹல், அஸ்வின் ஆகிய இரு பெரும் பந்துவீச்சாளர்களை ஓரம் கட்டிவிட்டு குல்தீப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஒருநாள் தொடரில் 4 விக்கெட்களைக் கைப்பற்றிய குல்தீப், சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் 7 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் ஆசிய கோப்பை போட்டிகள் நடக்க இருப்பதால், இவரிடம் இருந்து சிறப்பான சுழற்பந்து வீச்சை இந்தியா எதிர்பார்க்கிறது.

ரஹ்மானுல்லா குர்பாஸ்:

நீங்கள் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து பார்ப்பவர் என்றால் ரஹ்மானுல்லா குர்பாஸை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரராக வந்து பல போட்டிகளில் சிக்சர்களையும், பவுண்டரிகளையும் தெறிக்கவிட்டவர் குர்பாஸ். இந்த ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முழு பேட்டிங் சுமையையும் இவர்தான் சுமக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த ஒருநாள் போட்டியில் குர்பாஸ் அதிரடியாக ஆடி 151 ரன்களைக் குவித்தது இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மட்டுமல்ல வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சதம் அடித்த குர்பாஸ், தனது அணி தொடரை வெல்ல காரணமாக இருந்திருக்கிறார். ஏற்கெனவே பந்துவீச்சில் வலிமையாக இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு, பேட்டிங்கில் குர்பாஸ் கொஞ்சம் கை கொடுத்தால் போதும். ஆசிய கோப்பை கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிடும்.

ஹாரிஸ் ராஃப்:

பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் புயல் போன்ற வேகப்பந்து வீச்சாளர் கிடைப்பார். அந்த வகையில் இப்போது பாகிஸ்தானில் ஹாரிஸ் ராஃபின் சீசன் நடக்கிறது. 23 ஒருநாள் போட்டிகளில் ஆடி 44 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ராஃப், பாகிஸ்தான் அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதில் பெரும் பங்கு வகித்துள்ளார். மணிக்கு 150 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீசுவது இவரது சிறப்பம்சம். இந்தியாவின் வலிமையான பேட்டிங் ஆர்டரை முறிக்க இவரைத்தான் மலைபோல நம்பியிருக்கிறது பாகிஸ்தான்.

மகேஷ் தீக்‌ஷணா

சிஎஸ்கேவின் சுழற்பந்து ஹீரோவான தீக்‌ஷணா, இந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணியின் பெரிய நம்பிக்கையாக இருக்கிறார். உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகளில் 8 ஆட்டங்களில் 21 விக்கெட்களை வீழ்த்திய தீக்‌ஷணா, இலங்கையை வெற்றிகரமாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெறச் செய்தார். இப்போது அதே வேகத்தில் ஆசிய கோப்பையை வெல்ல கைகளை சுழற்றுகிறார். தனது தாய்மண்ணான இலங்கையில் போட்டி நடப்பது தீக்‌ஷணாவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

டவ்ஹித் ஹிருதாய்:

வங்கதேச அணிக்கு சமீப காலத்தில் கிடைத்த இளம் நட்சத்திரம் டவ்ஹித் ஹிருதாய். 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் எடுத்திருக்கும் மொத்த ரன்கள் 338. சராசரியாக 48.28 ரன்களைக் குவித்திருக்கிறார். அந்த ரன்களையும் 97.68 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்திருப்பதால் இந்த ஆசிய கோப்பையில் அவரை துருப்புச் சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது வங்கதேசம். இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக அவேசம் காட்டிய ஹிருதயால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பந்துவீச்சாளர்களை எதிர்த்து நின்று சாகசம் செய்ய முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...