No menu items!

மீண்டும் மோடி..ஆனால் டென்ஷனில் பாஜக – மிஸ் ரகசியா

மீண்டும் மோடி..ஆனால் டென்ஷனில் பாஜக – மிஸ் ரகசியா

”ஓணம் அன்னைக்கும் ஆபிசுக்கு வரச் சொல்றிங்களேஎ.உங்களுக்கே நியாயமா என்று கேட்டுக் கொண்டே அலுவலகத்துக்குள் வந்தாள் ரகசியா.

‘நீ தமிழ்ப் பொண்ணாச்சே…ஓணம் புடவையெல்லாம் கட்டியிருக்க.”

“சிஎம் ஸ்டாலின் மலையாளத்துல வாழ்த்து சொல்லும்போது நான் மலையாளப் புடவை கட்டக் கூடாதா?”

“அதுவும் சரிதான்…ஆமா என்ன திடீர்னு சிஎம் மலையாளத்துல வாழ்த்து சொல்லியிருக்கிறாரு? ஹோலி பண்டிகைக்கு இந்தில வாழ்த்து சொல்லுவாரா?”

“சொன்னாலும் சொல்லுவார். இப்போது அவர் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்காக ஒரு பிஆர் நிறுவனம் வேலை செய்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் கொடுத்த ஐடியாதான் மலையாளத்தில் வாழ்த்து சொல்வது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இது போன்று நிறைய காட்சிகளை நீங்கள் பார்க்கலாம்”

’நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் மீண்டும் பாஜகதான்னு இந்தியா டுடே சர்வே சொல்லுதே..பாஜகவினர் ஹேப்பியா இருப்பாங்களே?”

“இல்லை. அவங்க கொஞ்சம் டென்ஷன்லதான் இருக்காங்க. 2019ல 303 சீட் தனியாவே ஜெயிச்சாங்க. ஆனா இந்த முறை 287 சீட்தான் ஜெயிப்பாங்கனு சர்வே சொல்லுது. அது மட்டுமில்லாம காங்கிரஸோட செல்வாக்கும் ராகுல் காந்தியின் செல்வாக்கும் அதிகமாகிட்டே வருது, இது அவங்களுக்கு டென்ஷனைக் கொடுத்துருக்கு. அதனால சீக்கிரமாவே தேர்தலை வச்சிரலாம்னு ஆலோசனை கூறப்பட்டிருக்கு. அதனால டிசம்பர்லயே நாடாளுமன்றத் தேர்தல் வரலாம்”

“காங்கிரஸ் செல்வாக்கு அப்படி ஒண்ணும் ஜாஸ்தியாகலேயே..லேசாதான் அதிகரிச்சுருக்கு?”

“அடுத்த வருஷம் மே மாதம் எலெக்‌ஷன் வச்சா எதிர்க் கட்சிகள் நல்லா ஸ்பீட் எடுத்துரும்னு நினைக்கிறாங்க. இப்ப சிஏஜி அறிக்கைல பல லட்சம் கோடி இழப்புனு வந்துருக்கு. அதெல்லாம் எதிரணிக்கு சாதகமா இருக்கும்னு நினைக்கிறாங்க. அதனால தேர்தல் சீக்கிரமே வரலாம்”

“தேர்தலுக்கு தமிழ்நாட்டு கட்சிகள் தயாராகியிருக்கா?”

“திமுகவுல வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. முதல் தலைமுறை வாக்களர்கள் கிட்ட திமுக தொடர்பு இல்லாம இருக்கு. அவங்களை திமுக பக்கம் திருப்பணும்னும் முதல்வர் கட்சிக்காரங்ககிட்ட உத்தரவு போட்டிருக்கிறார். அதனால மாணவரணியை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கல்லூரி தேர்தல்கள், விழாக்கள்ல திமுகவினரோட பங்களிப்பு இருக்கணும்னு சொல்லியிருக்கிறார். அந்தக் காலத்துல திமுகவோட மாணவரனிதான் ரொம்ப பலமா இருக்கும்னு உதாரணங்களையும் சொன்னாராம் திமுக தலைவர். இந்த முயற்சிகளுக்குப் பின்னணில உதயநிதி இருப்பார் என்கின்றனர் கட்சியினர்”

“திமுக அதே கூட்டணிதானா?”

“அதே கூட்டணிதான். என்னதான் மெகா கூட்டணினு சொல்லிக்கிட்டாலும் நம்ம கூட்டணில இருக்கிற கட்சிகளுக்கு ரொம்ப குறைந்த வாக்கு சதவீதம்தான் இருக்கு, அதனால அவங்களுக்கு சீட்டை குறைச்சுக்கலாம்னும் திமுகவுல ஒரு பேச்சு இருக்கு. ஆனா முதல்வர் அதற்கு தயங்குகிறாராம். டிசம்பர் 17 திமுக இளைஞரணி மாநாட்டுல திமுகவோட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்”

“வேகமா போறாங்க போல…சரி, அதிமுக நிலவரம் எப்படியிருக்கு?”

“மாநாடு நடத்தினாலும் அதிமுகவுல அத்தனை உற்சாகம் இல்லை. எடப்பாடி தன்னோட சக்தியை காட்டினாலும் பாஜக என்ன செய்யப் போகுதுனு தெரியலனு எடப்பாடி கவலைப்படுறாராம். மீடியாவுல அண்ணாமலை பத்தின செய்திகள்தான் அதிகம் வருது, அதிமுக பத்தின செய்திகளை காணோம்னு வருத்தப்பட்டிருக்கிறார்”

“கட்சிக்காரங்க என்ன சொன்னாங்களாம்?”

“மீடியாவையெல்லாம் வளைச்சுப் போட்டுருக்காங்க. ஆனா மக்கள் நம்ம பக்கம்தான் அதனால தைரியமா பாஜக கூட்டணி இல்லாமலே போட்டியிடலாம்னு சொல்லியிருக்காங்க. ஆனா எடப்பாடி எந்த பதிலும் சொல்லல”

“தமிழ்நாட்டுல பாஜக தயாரா இருக்கா?”

“அதிமுகவை கழட்டிவிட்டுட்டு ஓபிஎஸ், சசிகலா, தினகரன், தேமுதிக, பாமக, புதிய தமிழகம் இவங்களையெல்லாம் கூட்டணிக்கு வச்சுக்கிட்டு தேர்தல்ல போட்டியிடலாம்னு டெல்லி தலைமைக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பியிருக்காங்க அண்ணாமலை தரப்பு. இப்படி நின்னா எப்படி ஜெயிக்க முடியும்னு எதிர் கேள்வி அங்கருந்து வந்துருக்கு. அதிமுகவோட கூட்டணி அமைச்சு நின்னாலும் பெருசா வெற்றி கிடைக்காது. ஆனா, தனியா ஒரு கூட்டணி அமைச்சு நின்னா நாம பலம் பெருவோம்னு ஒரு லாஜிக் சொல்லியிருக்காங்க. ஆனா மேலிடத்துலருந்து பதில் வரல”

“அப்போ அதிமுகவோடதான் கூட்டணி. சரி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் முன்னிலைலயே அண்ணாநகர் டவர் பார்க்ல திமுககாரங்க பப்ளிக்கா கமிஷன் கேட்டிருக்காங்களே?”

“ஆமாம். அது இப்போ திமுகவுல பிரச்சினையா மாறியிருக்கு. ராதாகிருஷ்ணன் தான் அதை பெரிதாக்கிட்டார்னு அவர் மேல திமுககாரங்க குற்றச்சாட்டு வச்சிருக்காங்க”

“அப்போ அவர் பதவி மாறிடுமா?”

“இல்லை. ஏற்கனவே அவர் எல்லா இடத்துக்கும் போய் தன்னை முன்னிலைப்படுத்திக்கிறார்ன்ற குற்றச்சாட்டு அவர் மேல சொல்லியிருக்காங்க. ஆனா இந்த சம்பவத்துல திமுக மேலிடம் கட்சிக்காரங்களைதான் கண்டிச்சிருக்காம். அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன் ஆட்கள்தான் இவங்கனு பாஜகவினர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கெல்லாம் ஏன் இடம் கொடுக்குறிங்கனு மேலிடம் கோவிச்சுருக்கு.”

“நடவடிக்கை எடுப்பாங்களா?”

“நடவடிக்கை வராதுனு திமுகவுல பேச்சு. ஆனா திமுகவில் இப்ப ஒரு புகைச்சல் இருக்கு. டெண்டர், காண்ட்ராக்ட்னு அமைச்சர்களே பணம் பார்க்கிறாங்க. எம்.எல்.ஏ.க்கள் அதுக்கு அடுத்து இருக்கிறவங்களுக்கெல்லாம் எந்த வரவும் இல்லை. கட்சித் தலைமையும் அவங்களுக்குதான் சப்போர்ட் பண்ணுது. அதிகாரிகள் கூட பிரச்சினைனா அதிகாரிகளைதான் தலைமை சப்போர்ட் பண்ணுதுனு எரிச்சல்ல இருக்காங்க. தொண்டர்கள் எப்படி பிழைக்கிறதுனு கேக்குறாங்க. இது பத்தி டீடெய்லா கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்காங்களாம் சில கட்சி பிரமுகர்கள்”

”அதுக்கு ஏதாவது ரியாக்‌ஷன் இருக்கா?”

“அமைச்சர்களே எல்லா டெண்டர்களையும் முடிவு செய்யக் கூடாது, கட்சியினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்னு தலைமை மாவட்டச் செயலாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு போட்டிருக்கிறது”

”திமுகவுக்கு உட்கட்சிப் பிரச்சினைகளை தீர்க்கிறதே பெரிய பிரச்சினையா இருக்கும்போல”

“ஆமாம். நிறைய பிரச்சினைகள் திமுகவுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சைலேந்திரபாபு நாடார் என்பதால்தான் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்; பழைய திமுகவாக நாங்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா’ என்றெல்லாம் ஆர்.எஸ். பாரதி பேட்டி தந்ததை மூத்த திமுக தலைவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லையாம். இத மூத்த தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தலைவர் சொல்லி தான் பேசினேன் என்கிறாராம் ஆர்.எஸ். பாரதி.”

”ஆர்.எஸ்.பாரதினாலே எப்போதும் சர்ச்சைதான். இத்தனை பிரச்சினைகள் வைத்துக் கொண்டு தேர்தலை வெற்றிகரமா சந்திக்க முடியுமா?”

“திமுக பலமாதான் இருக்கு. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் இதெல்லாம் பப்ளிக் மத்தில நல்ல பேரைத் தரும்னு முதல்வர் நம்புறார்”

“‘ஜெய் பீம்’ படத்துக்கு விருது தராதது பற்றி பிரகாஷ்ராஜ் பேசுகிறார், பி.சி. ஸ்ரீராம் பேசுகிறார். ஆனால், சூர்யா அமைதி காக்கிறாரே?”

“அவரைப் பொறுத்தவரை, ‘மத்திய அரசையும் மத்திய அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்த போதும் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு 5 விருதுகள் கிடைத்தது. அது மட்டுமிலாமல் தேசிய விருதுகளை தேர்வு செய்தது திரைப்பட பிரபலங்கள்தான். அப்படியிருக்கும்போது விருது தேர்வை விமர்சனம் செய்தால் அவர்களை குறை சொல்வது போல இருக்கும். ரொம்ப முக்கியமா, நாமும் சினிமா தயாரிக்கிறோம். அதற்கு எந்த வில்லங்கமும் வரக்கூடாது என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறார் சூர்யா.”

“விஜய் பத்தி எதுவும் நியூஸ் இல்லையா…அவரும் அரசியல்லதானே இருக்கார்?”

“அவர் நியூஸ் இல்லாமலயா? விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் ஐ டி விங் செயல்பாடு பற்றி விரிவாக பேசியிருக்காங்க. ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் சண்டையைப் பத்திதான் அதிகம் பேசியிருக்காங்க. ரஜினியை யாரும் விமர்சிக்கக் கூடாது இது விஜய்யண்ணா உத்தரவுனு சொல்லியிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்”

”அப்போ இனிம ரஜினி – விஜய் சண்டை இருக்காதா?”

”சோஷியல் மீடியாவுல ரசிகர்களுக்கு அதுதானே பொழுதுபோக்கு..அதை நிறுத்துவாங்களா?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...