No menu items!

விஜயகாந்தின் மற்றொரு முகம் -54 இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு

விஜயகாந்தின் மற்றொரு முகம் -54 இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு

ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பிரபல இயக்குநர்களின் படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இளம் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். அடுத்தடுத்து 54 இளம் இயக்குநர்களுக்கு அவர் வாழ்வளித்துள்ளார். தமிழ் திரையுலகில் இன்று இருக்கும் பல பிரபல இயக்குநர்கள் விஜயகாந்த்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளரும், சினிமா பிஆர்ஓ-வுமான சுரா, “இளம் இயக்குநர்களுக்கு விஜயகாந்த் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததால், அந்த இயக்குநர்கள் வாழ்வு பெற்றார்கள். அதே நேரம் அந்த இயக்குநர்களும் விஜயகாந்த்தின் சினிமா கிராஃபை உயத்தினார்கள்” என்கிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது…

‘ஊமை விழிகள்’ படம் வருவதற்கு முன்பு, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’, ‘நூறாவது நாள்’ போன்ற படங்கள் ஹிட் அடித்தாலும், சாதாரண படங்களே அவருக்கு பெரும்பாலும் அமைந்தன. கரிமேடு கருவாயன் போன்ற படங்களில் நடித்து ஏழை தயாரிப்பாளர்களின் ரஜினிகாந்த்தாக அவர் இருந்தார்.

இந்த நேரத்தில்தான் ஆபாவாணன், இயக்குநர் அரவிந்த்ராஜ் போன்றவர்கள் திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வந்தனர். ஊமை விழிகள் படத்துக்கான கதையை உருவாக்கி, அதை படமாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்களை திரையுலகினர் ஒதுக்கி வைத்திருந்தனர். அவர்கள் வசூல் ரீதியிலான வெற்றிப் படங்களை எடுக்க முடியாது. அவார்ட் படங்களை மட்டுமே எடுக்க முடியும் என்ற எண்ணம் திரையுலகில் இருந்தது. அதற்கு ஏற்றார்போல் அதற்கு முன்பு திரைப்பட கல்லூரி மாணவரான ருத்ரையா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும், வசூலில் தோல்வியடைந்தது.

இந்த சூழலில் ‘ஊமை விழிகள்’ படத்தை எடுக்க நினைத்த ஆபாவாணன் குழுவினர், அதில் டிஎஸ்பி தீனதயாளன் வேடத்தில் நடிக்க முதலில் சிவக்குமாரை அணுகி இருக்கிறார்கள். அவர் அப்படத்தில் நடிக்க மறுத்தார். அதன் பிறகுதான் அவர்கள் விஜயகாந்த்திடம் சென்றார்கள். விஜயகாந்த் அவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து கைகொடுத்தார்.

பதிலுக்கு ஊமை விழிகள் படத்தை பிரம்மாண்டமாக எடுத்து ஆபாவாணன் குழுவினர் மிரட்டினர். 35 எம்எம் படங்கள் வந்துகொண்டு இருந்த காலகட்டத்தில் ஊமை விழிகள் படத்தை 70 எம்எம்மில் அவர்கள் எடுத்தனர். அந்த காலகட்டத்தில் இளையராஜாதான் தமிழ் திரையுலகை ஆண்டுவந்தார். ஆனால் இந்த படத்திற்கு மனோஜ் கியானை இசையமைக்க வைத்தனர். இந்துஸ்தானி இசையை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு புதிய உணர்வை அளித்தன. ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாக எடுத்து விஜயகாந்த்துக்கு புதிய இமேஜை அளித்தனர். ஊமை விழிகள் படத்துக்குப் பிறகு போலீஸ் அதிகாரி வேடத்துக்கு பொருத்தமான நடிகர் விஜயகாந்த் என்ற இமேஜ் அவருக்கு கிடைத்தது.

இந்த படத்தின் வெற்றியால் விஜயகாந்த்துக்கு இளம் இயக்குநர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது. திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அடுத்ததாக அவர் உழவன் மகன் படத்தில் நடித்தார். இப்படமும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. அதில் வரும் ரேக்ளா ரேஸ் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.

அதற்கு அடுத்த்தாக எடுத்த செந்தூரப் பூவே படமும் ஹிட் அடிக்க, தொடர்ந்து இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்தார் விஜயகாந்த். பூந்தோட்ட காவல்காரன், புலன் விசாரணை, சின்னக் கவுண்டர் என்று இளம் இயக்குநர்களுடன் விஜயகாந்த் இணைந்த ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்த இடத்தை விஜயகாந்த் பிடித்தார். அந்த காலகட்ட்த்தில் கமல்கூட 3-வது இடத்தில்தான் இருந்தார்.

இப்படி இளம் இயக்குநர்களுக்கு விஜயகாந்த்தும், அவருக்கு இளம் இயக்குநர்களும் வாழ்வு அளித்தனர்.

இவ்வாறு சுரா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...