No menu items!

திருமண மண்டபங்களில் மது, 12 மணி நேர வேலை! –அரசின் குழப்பங்கள்!

திருமண மண்டபங்களில் மது, 12 மணி நேர வேலை! –அரசின் குழப்பங்கள்!

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம். இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்களும் வழங்குவார்கள். பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் – தமிழ்நாடு அரசு இதழில் அறிவிப்பு.

திருமண மண்டபங்களில் மதுபானங்களைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதியில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடுகள், ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலைக்கு அனுமதி – சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

12 மணி நேர புதிய மசோதா குறித்து முக்கிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை. நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரும், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வர் – தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு.

கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முரண்கள் தமிழ்நாட்டு அரசு செயல் திட்டத்தில்.

12 மணி நேர வேலை திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு வந்த நிலையில் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஆலோசனையை மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன்பு செய்யவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

12 மணி நேர வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை இடதுசாரிகளும் பிற கட்சிகளும் எதிர்த்தாலும் அதற்கான ஆதரவு குரல்களும் இருக்கின்றன.

’கவர்னராக மட்டுமல்லாமல் ஒரு டாக்டராகவும் இதனை நான் கூறுகிறேன். உலகம் முழுவதும், வேலை நேரத்தை அதிகப்படுத்தி, அதேநேரத்தில் ஓய்வு நேரத்தையும் அதிகப்படுத்திக்கொள்ளலாமா என்பது குறித்து மருத்துவ ரீதியாகவே ஒரு ஆராய்ச்சி நடக்கிறது. 12 மணி நேரம் வேலை செய்யும் போதும் ஒட்டுமொத்த வேலை நேரத்தை கூட்டவோ குறைக்கவோ இல்லை. வாரத்தின் மொத்தம் வேலை செய்யும் நேரத்தை எட்டாக பிரித்துக் கொள்ளலாமா? பன்னிரெண்டாகப் பிரித்துக் கொள்ளலாமா? என்பதே விஷயம். 12-ஆக பிரித்துக் கொண்டால் ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது’ என்று 12 மணி நேர வேலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

அவர் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் பல முனைகளிலிருந்து 12 மணி நேர வேலைக்கு ஆதரவு குரல்கள் எழுகின்றன. அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் 12 மணி நேர வேலை என்பது இருக்கிறது. முன்னேற விரும்பும் நாடுகள் அனைத்தும் 12 மணி நேர வேலை திட்டத்துக்குள் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

12 மணி நேர வேலை நேர திட்டத்தை கொண்டு வருவதற்கு முன் அதற்கான சாதக பாதக விளக்கத்தை அரசு கொடுத்திருக்க வேண்டும். மக்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும். திடீரென்று மசோதாவை நிறைவேற்றிவிட்டு பிறகு அதற்கான விளக்கத்தைக் கொடுப்பது சந்தேகத்தைதான் ஏற்படுத்தும்.

இப்போது திருமண மண்டபங்களில் மது திட்டமும் அரசின் குழப்பத்தைக் காட்டுகிறது.

அனுமதி பெற்று மது பரிமாறலாம் என்கிறது அரசாணை, ஆனால் அமைச்சர் அப்படியல்ல என்று மறுக்கிறார்.

எதிர்ப்புகள் வந்ததும் நிலைப்பாட்டை மாற்றுவதாகதானே புரிந்துக் கொள்ளப்படும்?

இது குழப்பமாகதானே பார்க்கப்படும்?

அரசாணை வெளியிடுவது அமைச்சருக்கு தெரியாதா?

அவர் ஆலோசனை இல்லாமல் அரசாணை வருகிறதா?

இத்தனை கேள்விகள்.

திராவிட மாடல் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆட்சியில் இவையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதை தமிழ்நாடு அரசு புரிந்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...