No menu items!

திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதல்ல: ஜி ஸ்கொயர் மறுப்பு

திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதல்ல: ஜி ஸ்கொயர் மறுப்பு

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த 14-ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில், ‘திமுகவினரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து’ இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் குற்றச்சட்டுகள் ஆதாரமற்றது என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தின் நற்பெயர்க்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு சில தனிநபர்கள் வெறுப்பு பிரசாரத்தில் இறங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தங்களது நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாபமீட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பல கட்டுக்கதைகளும், எந்த தரவுகளும் இல்லாத வதந்திகளும் பரப்பப்பட்டு வருவதாக சாடியுள்ளது.

திமுக ஆட்சியமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்களது நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் தங்களது சொத்து மதிப்பு 38 ஆயிரத்து 827 கோடி ரூபாய் என அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதை மறுப்பதாகவும், ஜி ஸ்கொயர் மற்றும் தங்களது பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்களை தவறான மதிப்புகளோடு அண்ணாமலை சித்தரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், அண்ணாமலையின் செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதியில்லை: அமைச்சர் மறுப்பு

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும் மதுபானம் பயன்படுத்தவும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று காலை அரசாணை வெளியிட்டது. மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும் பயன்படுத்தவும் அனுமதியில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். “திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. விளையாட்டு மைதானங்களில் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., பா.ஜ.க.வும் தங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்நிலையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர் திருத்த மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் சட்டத்துறைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேறிய மசோதாக்களை கவர்னருக்கு அனுப்பும் முன் திரும்பப் பெறும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியது. அந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 35 லட்சத்தை காசோலையாக அவர்கள் திருப்பி வழங்கினர். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. அதையடுத்து லிங்குசாமி, அவரது சகோதரர் மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு, கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் காசோலை தொகையில் 20% சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் தொகையை செலுத்த 6 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதி வி.சிவஞானம் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...