No menu items!

Happy Birth Day Sachin!

Happy Birth Day Sachin!

ஏப்ரல் 24-ம் தேதி கிரிக்கெட் கடவுளான சச்சின் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சச்சினைப் பற்றி சுவாரஸ்யமான 50 விஷயங்கள்:

சச்சினின் அப்பா, பிரபல இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் ரசிகர். அதனால் அவர் தனது மகனுக்கு சச்சின் என்று பெயர் வைத்தார்.

பேட்ஸ்மேன் ஆவதைவிட ஒரு வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதுதான் சச்சினின் சிறுவயது கனவு.

சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப். ஃபேஸ் பவுண்டேஷனில் வேகப்பந்து வீச்சாளராக பயிற்சி பெற விண்ணப்பித்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் அப்போது அங்கு பயிற்சி அளித்துக்கொண்டு இருந்த டென்னிஸ் லில்லி, சச்சினை மாணவராக சேர்க்கவில்லை. இதனால் சச்சின் பேட்டிங்கில் கவனம் செலுத்தினார்.

கிரிக்கெட் உலகில் அமைதியான நபரான சச்சின் டெண்டுல்கர், பள்ளியில் குறும்புத்தனமிக்க மாணவராக இருந்தார்.

சச்சின் குறும்புத்தனமான சிறுவர் என்பதால் அவரை சாந்தப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் அவரது அண்ணன் அஜித் டெண்டுல்கர் சேர்த்தார்.

சச்சின் டெண்டுல்கருக்கு பிடித்த டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ.

1998-ம் ஆண்டில் மட்டும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1,894 ரன்களை சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ளார்.

ஒரு பேட்ஸ்மேனாக களம் இறங்குவதற்கு முன்பே, 1987-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகளிடையேயான போட்டியின்போது பந்தை பொறுக்கிப் போடும் சிறுவனாக சச்சின் டெண்டுல்கர் பணியாற்றி உள்ளார்.

1988-ம் ஆண்டு நடந்த ஒரு காட்சி கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் பீல்டராக சச்சின் டெண்டுல்கர் ஆடியுள்ளார்.

வாசனை திரவியங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை சேகரிப்பதில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்வம் அதிகம்.

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் ஆடியவர் சச்சின் டெண்டுல்கர். தன் முதலாவது கவுண்டி கிரிக்கெட்டில் ஆடும்போது சச்சினின் வயது 19.

சச்சின் டெண்டுல்கர் முதலில் பேண்டெய்ட் விளம்பரத்தில் நடித்தார்.

சச்சினை தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்திய முதலாவது மிகப்பெரிய பிராண்ட் ‘பூஸ்ட்’.

இந்தியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளான ரஞ்சி கோப்பை, இரானி கோப்பை மற்றும் துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தனது அறிமுக ஆட்டங்களிலேயே சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்துள்ளார்.

மிகவும் கனமான பேட்களை பயன்படுத்துவது சச்சின் டெண்டுல்கரின் வழக்கம்.

சச்சின் டெண்டுல்கருக்கு மிகவும் பிடித்த உணவு வடா பாவ்.

சுனில் கவாஸ்கர் பரிசளித்த பேட்களை அணிந்து சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

ஒரே ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு. 1998-ம் ஆண்டில் அவர் 9 சதங்களை அடித்துள்ளார்.

பிரபல டென்னிஸ் வீரரான பீட் சாம்ப்ராஸ், சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர்.

சச்சின் டெண்டுல்கருக்கு கிஷோர் குமாரின் பாடல்களைக் கேட்க மிகவும் பிடிக்கும்.

சச்சின் டெண்டுல்கர் வாங்கிய முதல் கார் மாருதி 800.

3-வது அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். 1992-ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது.

சச்சினுக்கு தனது ஃபெராரி காரை மிகவும் பிடிக்கும். அதை தான் மட்டுமே ஓட்டுவார். தனது மனைவியைக்கூட ஓட்ட விடமாட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டு இருக்கும்போதே ராஜ்யசபாவின் எம்பியாக நியமிக்கப்பட்டவர் சச்சின்.

1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது சச்சின் டெண்டுல்கரின் வயது 10.

சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டுகள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் மிக அதிகபட்சமாக 6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் எடுத்த மொத்த ரன்கள் 2,278.

200 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு அடுத்ததாக ஸ்டீவ் வாஹ் 168 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஓட்டலில் இருந்து மைதானத்துக்கு பேருந்தில் செல்லும்போது, பேருந்தின் இடதுபுறத்தில் உள்ள முதல் வரிசையின் ஜன்னலோர இருக்கையில்தான் அமர்ந்து செல்வார் சச்சின். இதுவும் அவரது நம்பிக்கைகளில் ஒன்றாக இருந்தது.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். அவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவருகிறார்.

சவுரவ் கங்குலியை செல்லமாக ‘பாபு மொஷாய்’ என்று சச்சின் டெண்டுல்கர் அழைப்பார்.

சச்சின் டெண்டுல்கரை செல்லமாக ’சோட்டா பாபு என்று சவுரவ் கங்குலி அழைப்பார்.

தனது முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் ரன் எதையும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

வலது கையால் பேட்டிங் செய்யும் சச்சின் டெண்டுல்கர், எழுதுவதற்கு இடது கையைப் பயன்படுத்துவார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ அதிகபட்சமாக 14 முறை சச்சினை அவுட் ஆக்கியுள்ளார்.

சச்சினின் பயிற்சியாளரின் பெயர் ரமாகாந்த் அச்சரேக்கர்.

பாரதரத்னா விருது வென்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்.

1988-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வினோத் காம்பிளி – சச்சின் டெண்டுல்கர் ஜோடி 664 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 326 ரன்களைக் குவித்தார்.

1989-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான் சச்சினின் முதலாவது டெஸ்ட் போட்டி.

1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது முதல் சதத்தை அடித்தார். இந்த சதத்தை அடிக்கும்போது சச்சினின் வயது 17.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினுக்கு உள்ளது.

1994-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக சச்சின் களம் இறங்கினார்.

சச்சின் டெண்டுல்கர் ஒரு கேப்டனாக 1997-ம் ஆண்டில் சஹாரா கோப்பையை வென்றார். இதன் நினைவாக அவர் தன் மகளுக்கு ‘சாரா’ என்று பெயர் வைத்தார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலியின் முதல் சந்திப்பு மும்பை விமான நிலையத்தில் நடந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்.

பேட்டிங் செய்யப் போகும்போது முதலில் இடது காலில் பேடைக் கட்டுவது சச்சினின் வழக்கம்.

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மற்றவர்கள் பேட்டிங் செய்யும்போது சச்சின் ஆட்டத்தை பார்க்க வெளியே வரவில்லை. மாறாக டிரஸ்ஸிங் ரூமில் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தார்.

200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களையும், 463 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 18,426 ரன்களையும் சச்சின் அடித்துள்ளார்.

2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...