No menu items!

அவனுக்கு மூட நம்பிக்கைகள்தான் எதிரி, கடவுள் அல்ல: நடிகர் விவேக் சகோதரி டாக்டர் விஜயலஷ்மி

அவனுக்கு மூட நம்பிக்கைகள்தான் எதிரி, கடவுள் அல்ல: நடிகர் விவேக் சகோதரி டாக்டர் விஜயலஷ்மி

நடிகர் விவேக் பிறந்த நாள் ஸ்பெஷலாக, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவரது அக்கா டாக்டர் விஜயலஷ்மி பகிர்ந்த விவேக் நினைவுகள் இங்கே…

‘விவேக் கடைசியாக நடித்த படம் ‘லெஜண்ட்’. அவன் மறைவுக்கு பிறகு வெளியானது. பார்த்தால் மனம் உடைந்து போய்விடுவேன் என்பதால் அந்த படத்தை பார்ப்பதை நான் தவிர்த்துவிட்டேன். தற்செயலாக டிவியில் அவன் நடித்த படங்களை பார்க்க நேர்ந்தால், இப்படி திடீரென்று விட்டுட்டு போய்விட்டானே என்று மனம் சோர்ந்துவிடும்.

படங்கள் இயக்குவது உட்பட நிறைய திட்டங்கள் வைத்திருந்தான், விவேக். இரண்டு கதைகள் தயார் செய்து வைத்திருந்தான். அதை என்னுடன் டிஸ்கஸ் செய்துள்ளான். கதை, நடிப்பு மட்டுமல்லாமல் எல்லா விஷயங்கள் பற்றியும் என்னுடன் டிஸ்கஸ் செய்வான். நடிக்கிற கதாபாத்திரங்கள் பற்றி ஆலோசனைகள் கேட்பான். ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டால் எல்லா நேரமும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பான்.

எங்கள் வீட்டில் நானும் அவனும்தான் கலைத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். என் தங்கைக்கு இதில் அதிக ஆர்வம் இல்லை. வீட்டில் அவனை ராஜி என்றுதான் கூப்பிடுவோம். சிறு வயதில் என்னுடன்தான் பரத நாட்டியம் படித்தான். அப்போது நாங்கள் திருநெல்வேலியில் இருந்தோம். நான் 6-ம் அவன் 5-ம் படித்துக்கொண்டிருந்த நேரம் அது. வயலினும் அப்போதே படித்தான். சொல்லிக் கொடுப்பதை அப்படியே பிடித்துக்கொள்வான். அந்தளவு கலை மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு. மாண்டலின், பியானோ கூட வாசிப்பான்.

படிப்பிலும் அக்காலத்தில் அவன் சுட்டி. நாங்கள் எல்லாம் இரவு முழித்திருந்து படிப்போம். அவன் அப்படி விழுந்து விழுந்து படிக்கமாட்டான். ஆனால், வகுப்பில் டீச்சர்ஸ் சொல்லி கொடுப்பதை நன்றாக கவனிப்பான்; சந்தேகங்களை உடனுடன் கேட்டு தெரிந்துகொள்வான். மனப்பாடம் செய்வது கிடையாது. பள்ளிக்கூடத்தில் தொடங்கி எம்.காம். வரைக்கும் அவன் படிப்பு இப்படித்தான். ஆசிரியைகளே சொல்வாங்க, “எல்லோரையும் சிரிப்பு காட்டிகிட்டே இருப்பான். ஆனால், அவன் பாஸாகிவிடுவான், நீங்கள் ஃபெயிலாகிவிடுவீங்க” என்று.

Dr. Vijayalakshmi
டாக்டர் விஜயலஷ்மி

நல்ல மார்க் எடுத்திருந்தான். ஆனாலும், சயின்ஸ் குரூப் வேண்டாம் என்று காமர்ஸ் எடுத்தான். அமெரிக்கன் கல்லூரி முதல்வர்கூட இவ்வளவு மார்க் எடுத்திருக்கியே, ஏன் சயின்ஸ் குரூப் எடுக்கவில்லை; உங்க அக்காவை மாதிரி உனக்கும் டாக்டர் ஆக வாய்ப்புள்ளது என்று சொன்னார். ஆனாலும், முடியவே முடியாது என்றுவிட்டான்.

அந்த காலத்தில் நாங்கள் இருந்த பகுதியிலும் யார் என்ன சாதி என்று உன்னிப்பாக கவனிப்பார்கள். எங்கள் வீட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினரை வீட்டுக்குள் அனுமதிக்கமாட்டார்கள். தள்ளி நின்றுதான் பேசுவார்கள். ஃபிரண்ட்ஸை வீட்டுக்கு அழைத்துவந்தால், எங்கள் பாட்டி பார்த்தே யார் என்ன சாதி என்று கண்டுபிடித்து, சிலரை மட்டும்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள். விவேக்குக்கு அது பிடிக்கவே பிடிக்காது. “என் ஃபிரண்ட்ஸ் வரக்கூடாதுன்னா என்னையும் வரக்கூடாதுன்னு சொல்லுங்க” என்று சண்டை போடுவான்.

அவன் படங்களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நிறைய பேசியிருப்பான். ஆனால், அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. காஞ்சி மகா பெரியவர் மீது அவனுக்கு மிகுந்த பக்தி உண்டு. சாய்பாபா, முருகனையும் மிகவும் பிடிக்கும். நிறைய படிப்பான்; வீட்டில் பெரிய லைப்ரரி வைத்திருந்தான். அவன் பிறந்த நாளுக்கு நாங்கள் புத்தகம்தான் பரிசு கொடுப்போம்.

அவன் உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; ஹெல்த்தியாகத்தான் இருந்தான். நானும் அவனை விடமாட்டேன். 6 – 8 மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வான். தினமும் உடற்பயிற்சி, சைக்கிளிங் என்றுதான் இருந்தான். பிரசர், சுகர், தைராய்டு, கொலஸ்ட்ரால் என எந்த பிரச்சினையும் கிடையாது. அவன் பையன் இறந்த பின்னர் ஆல்கஹால், அசைவம் எடுப்பதை எல்லாம் நிறுத்திவிட்டான். ஆனால், கார்டியாக் அரெஸ்ட் எல்லோருக்கும் வரும். அப்படித்தான் திடீரென்று அவனுக்கு நடந்துவிட்டது. அன்று காலையில்கூட என்னிடம் பேசினான். 

நம்மூரில் குழந்தைகள் கல்வி தரமாக இல்லை என்ற கவலை அவனுக்கு இருந்தது. படிப்பு என்கிற பெயரில் குழந்தைகள் சந்தோஷத்தை கெடுக்கிறோம் என்று எப்போதும் சொல்வான். எனவே, குழந்தைகள் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் உணர்த்துவது மாதிரி ஒரு ஸ்கூல் நடத்த வேண்டும் என்று ஆசை இருந்தது. குழந்தைகள் கல்வி பற்றிய படங்கள் இயக்கும் திட்டமும் வைத்திருந்தான்.

நிறைய குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருந்தான். அதுபோல் துணை நடிகர்கள் நிறைய பேருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தான். எங்கள் வருமானத்தில் அதை எல்லாம் தொடர்ந்து செய்யமுடியவில்லை. அந்த உதவிகள் அப்படியே நின்றுவிட்டது. அவனது இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்புதான்.

எல்லோரும் ஒருநாள் இந்த உலகத்தில் இருந்து போகத்தான் போகிறோம். ஆனால், அவன் கொஞ்சம் சீக்கிரமாகவே போய்விட்டான். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்” என்ற டாக்டர் விஜயலஷ்மியின் கண்களில் நீர் திரண்டு நிற்கிறது; குரல் தழுதழுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...