No menu items!

சினிமா நட்சத்திரங்களின் ஆடம்பர சொகுசு வேன்கள்!

சினிமா நட்சத்திரங்களின் ஆடம்பர சொகுசு வேன்கள்!

வெளியில் இருந்து பார்ப்பதற்கு அது ஒரு வேன் மட்டுமே. ஆனால் அதன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், ஆச்சர்யமூட்டுகிறது. உள்ளே ஒரு பிரம்மாண்டமான மாளிகையின் மினியேச்சர் போல பிரமிக்க வைக்கிறது.

யோகா செய்வதற்கான ஒரு யோகா டெக்.

உடற்பயிற்சி செய்வதற்கான லேட்டஸ்ட் கருவிகளுடன் ஒரு ஜிம்.

கூந்தலை பாரமரிக்க உதவும் ஹேர் வாஷ் ஸ்டேஷன்.

அழகிய அம்சங்களுடனான கழிப்பறை.

ஆழ்ந்து யோசித்தபடியே மனதை ரிலாக்ஸ் ஆக்க ஒரு அசத்தல் பார்.

உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஹோம் தியேட்டர்.

வீட்டின் உள்புற அழகை அப்படியே பிரதிபலிக்கும் போஹோ தீம், மஸ்லின் கர்டெய்ன்கள்.

சொகுசாக இருந்தபடியே அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட பிரத்தியேக சாஃப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர்.

இதெல்லாம் சினிமா நட்சத்திரங்களின் வேனிட்டி வேன்கள் என்று இப்பொழுது அழைக்கப்படும் கேராவேனுக்குள் இருக்கும் லட்சங்களில் செலவு வைக்கும் சமாச்சாரங்கள். சினிமா நட்சத்திரங்கள் ஒய்வெடுக்க இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்றால் ஆமாம் தேவைதான். காரணம், இந்த சொகுசு அம்சங்கள் எல்லாம் ஒரு சினிமா நட்சத்திரத்தின் சமூக அந்தஸ்து, சமூக்கத்தில் அவர்களுக்கு இருக்கும் மரியாதை, ரசிகர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இருக்கும் மவுசு, சக நட்சத்திரங்களைவிட தான் எந்தளவிற்கு மாறுப்பட்டு இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லும் பகட்டான லைஃப் ஸ்டைல் இவற்றின் அடையாளமாக இன்று கேராவேன் மாறி இருக்கிறது.

முன்பெல்லாம் ஸ்டூடியோக்களில்தான் திரைப்படங்களுக்கான ஷூட்டிங் நடந்தன. அந்த ஸ்டூடியோவுக்கு உள்ளேயே சினிமா நட்சத்திரங்கள் ஒய்வெடுக்க தனி அறைகள் இருந்தன. அவர்கள் ஷூட்டிங் ப்ரேக் நேரத்தில் அதில் ஏஸியை போட்டுகொண்டு, வியர்வை வராமல் பார்த்து கொள்வார்கள். மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு குட்டித்தூக்கம் போடுவார்கள். தன்னை சந்திக்க வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை அந்த அறைக்கு வரவழைத்து பேசுவார்கள்.

பின் நாட்களில் ஷூட்டிங்குகள் ஸ்டூடியோக்களிலிருந்து வெளிவந்து, வெளிப்புற பகுதிகளில், இயற்கையின் அழகைப் படம்பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டன. அப்போதுதான் இந்த கேராவேன் என்ற ஒரு அவசியம் உருவானது.

ஒரு பழைய பஸ்ஸை அங்கே இங்கே டிங்கரிங் செய்து, உள்ளே சின்ன சின்ன வேலைகள் பார்த்து அதை கேராவேனாக மாற்றினார்கள். அதை ஒரு சிலர் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஷூட்டிங் நாட்களில் இந்த கேராவேன்களை வாடகைக்கு எடுத்து, நட்சத்திரங்கள் தங்குவதற்கு தயார் பண்ணுவார்கள். நாளொன்றுக்கு 50,000 ரூபாய் 30,000 ரூபாய் என வாடகை பில்களை தீட்டுவார்கள். இதில் ப்ரொடக்‌ஷன் மேனேஜர்களுக்கு ஒரு ஷேர் வரும். இந்த கேராவேனுக்கு டீசல் போடுவதிலும் கூட ஷேர் இருக்கும். இதனால் தயாரிப்பாளர்கள் புலம்பிக்கொண்டே கேராவேனை வாடகைக்கு எடுப்பார்கள்.

இன்று நிலைமை ரொம்பவே மாறியிருக்கிறது.

கேராவேன் என்பது ஒரு ஸ்டேட்டஸாக பார்க்கப்படுவதால், கோடிகளைக் கொட்டி தங்களுக்கென பிரத்தியேகமாக ஒரு கேராவேனை வாங்கி விடுகிறார்கள் கோடிகளில் புரளும் நடிகைகளும், நடிகர்களும்.
தங்களுக்கென சொந்தமாக வேனிட்டி வேன் ஒன்று வேண்டுமென்றால், பல லட்சங்கள் கொடுத்து ஒரு மினி பஸ் அல்லது பெரிய சைஸ் வேன் ஒன்றை வாங்குவர்கள். அதை வேனிட்டி வேன்கள் டிசைன் செய்யும் நிறுவனம் ஒன்றில் கொடுத்துவிடுவார்கள் என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து சொல்லிவிட்டு, நடிக்க கிளம்பி விடுவார்கள்.

ஆனால் இன்றைய தலைமுறை நட்சத்திரங்கள். தங்களுடைய வேனிட்டி வேன் எப்படி இருக்கவேண்டுமென ஒரு ஸ்லைட் ஷோ போட்டு காட்டி, எப்படி இருக்கவேண்டும், என்ன நிறம் வேண்டும், எந்த தீம் வேண்டுமென குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு வேனிட்டி வேன்களுக்கான மவுசு மாறியிருக்கிறது.

இந்தவகையில் இப்பொழுது அதிநவீன சொகுசு கேராவேன்கள் வைத்திருக்கும் பட்டியலில் ‘புஷ்பா’ புகழ் அல்லு அர்ஜூன், பாலிவுட்டின் டார்லிங் ஷாரூக்கான், அசத்தல் ஆலியா பட், முரட்டு சிங்கம் ரன்வீர், மெல்லிடை ஷில்பா ஷெட்டி இவர்களின் கேராவேன்கள் ரொம்பவே பாப்புலராகி இருக்கின்றன.

இவர்களின் கேராவேனில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்.

அல்லு அர்ஜூன்.

இந்த புஷ்பா தனக்கு எது வேண்டுமோ அதை சாதிப்பதில் ஃபயர்தான். கொஞ்சம் கெடுப்பிடியான பார்ட்டி. தன்னுடைய வேனிட்டி வேன் எப்படி இருக்கவேண்டுமென சொல்வதற்கே வேன்களை டிசைன் செய்யும் நிறுவனத்துடன் நாலைந்து சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்.

அதேபோல் அந்த வேனிட்டி வேனின் வேலைகள் ஒவ்வொன்றாக முடிய முடிய, ஃபாலோ அப் மீட்டிங்குகளையும் வைத்து அவரே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். இவரது வேனிட்டி வேன் அதிநவீன மயமானது. அல்லுவின் வேனிட்டி வேனுக்குள் நுழைந்தால், எல்லாமே தொழில்நுட்ப கொண்டாட்டமாக இருக்கிறது.


ஷாரூக் கான்

2009-ம் ஆண்டிலேயே தனது முதல் வேனிட்டி வேனை வாங்கிவிட்டார் ஷாரூக்கான். ரொமாண்டிக் கதைகளில் கைகளை விரித்து நீட்டியபடி ஜாலியாக ஆட்டம் போடும் ஷாரூக்கான், தொழில்நுட்ப அம்சங்களில் ரொம்பவே சிரீயஸான பேர்வழி. தன்னுடைய வேனிட்டி வேன் லேட்டஸ்ட் தொழில்நுட்ப அம்சங்களுடன் இருக்கவேண்டுமென பிடிவாதம் பிடிப்பவர்.

இவருடைய வேனிட்டி வேனில் எல்லாமே ட்யூயல் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்று மக்கர் செய்தால், உடனடியாக இரண்டாவதை பயன்படுத்தும் வகையில் எல்லாமும் தயார் நிலையில் இருக்கும். இவருடைய வேனிட்டி வேன் செயல்படுவதற்காகவே ஒரு சாஃப்ட்வேரை உருவாக்க சொல்லிவிட்டார் ஷாரூக்கான். இந்த சாஃப்ட் வேர் உருவாக்கப்பட்டு, ஒரு கம்ப்யூட்டருடன் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கிறது என்றால் ஷாரூக்கின் வேனிட்டி வேன் எந்தளவிற்கு மாடர்னாக இருக்குமென புரிந்து கொள்ளலாம். வேனுக்குள் ஸ்விட்ச்கள் எல்லாமே இப்பொழுத் டச் ஸ்கிரீனுக்கு மாறிவிட்டன. இது ஒரு சாம்பிள் மட்டுமே. ஷாரூக்கின் வேனிட்டி வேன் ஒரு நடமாடும் டெக்னாலஜி மாளிகை.


ரன்வீர்

திபீகா படுகோனை காதலித்து கரம் பிடித்திருக்கும் ரன்வீர், ஒரு ஃபிட்னெஸ் பிஸ்தா. எப்பொழுது பார்த்தாலும், உடம்பை சிக்கென்று வைத்து கொள்வதில் அதிக அக்கறை காட்டும் ஒரு ஆசாமி.

வேனிட்டி வேனுக்குள் அதிநவீன ஜிம் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் ரன்வீர். இதன் மதிப்பு மட்டுமே 80 லட்சமாம்.

ஜிம்மில் இருக்கும் உடற்பயிற்சி கருவிகளை எப்படி ஒரு வேனுக்குள் வைப்பது, எவ்வளவு எடையை அந்த வேன் தாங்கும், எடை அதிகமானால் வேன் ஓடும் போது முன்னால் தூக்குமா அல்லது பின்னால் தூக்கியப்படியே ஓடுமா இப்படி ஏராளமான கேள்விகள், சவால்களுடன் இந்த வேனை ஒருவழியாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்த வேனை வடிவமைப்பதற்குள் அந்த டிசைனர் ஒரு தேர்ந்த இன்ஜினியர் ஆகியிருப்பார் என்று சிரிக்கிறார் ரன்வீர்.


ஆலியா பட்

இந்திய நடிகைகளில் இன்றைக்கு நம்பர் ஒன், நம்பர் டு என்ற இரண்டு ஸ்பாட்களில் இருப்பவர் ஆலியா பட்.

ஏனோதானோ என்று நடிக்கிறார் என்று ட்ரோல் செய்யப்பட்டவரின் நடிப்பைப் பார்த்து இன்று கமெண்ட் அடித்தவர்கள் கலங்கிப் போய் கிடக்கிறார்கள்.

இவர் தன்னுடைய வேனிட்டி வேன் தனது ரசனையை அப்படியே க்ளோனிங் செய்தது போல இருக்கும்படி வேண்டுமென கேட்டிருக்கிறார்.

இதனால் பல்வேறு காலக்கட்டங்கள், பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து தேர்ந்தெடுத்த அழகியல் அம்சங்களுடன் Boho style -ல் இவரது வேனிட்டி வேன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியே ஆலியாவின் வீட்டை இது பிரதிபலிக்கிறதாம். இதற்கு 48 லட்சம் செலவு.

ஆலியாவுக்கு இப்பொழுது மற்றுமொரு வேனிட்டி வேன் இருக்கிறது. இது முற்றிலும் ப்ரெஞ்ச் பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது 75 லட்சம் ரூபாயில் அசத்துகிறது.


ஷில்பா ஷெட்டி

சினிமாவுக்கு அறிமுமானதில் இருந்து, திருமணமான பின்பும் கூட அதே மெல்லிடை, அதே ஸ்லிம் உடல்வாக்கு என அசர வைக்கும் ஷில்பா ஷெட்டி தன்னுடைய 47-வது பிறந்த நாளில் தனக்கு தானே பிறந்த நாள் பரிசாக வேனிட்டி வேன் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

இந்த வேனிட்டிவேன் ஒரு மாடர்ன் யோகா ஜிம் மாதிரி இருக்கிறது. ஃபிட்னெஸ்ஸில் அக்கறை காட்டும் ஷில்பா, தன்னுடைய அழகை அப்படியே வைத்திருக்க ஒரு யோகா டெக்கை வடிவமைக்க சொல்லியிருக்கிறார்.

அவரது இடையைப் போலவே, அலைப்பாயும் அவரது கூந்தலுக்கும் ரசிகர்கள் அதிகம். இதனால் தனது கூந்தலை பராமரிப்பதற்காகவே ஒரு ஹேர் வாஷ் ஸ்டேஷனை உள்ளே நிறுவியிருக்கிறார் ஷில்பா.

இப்படி வேனிட்டி வேன்களை பற்றி படிக்கும் போது கற்பனை ஓடவிட்டபடியே அவற்றை காட்சிப்படுத்தி பார்க்கும் உணர்வு நன்றாக இருந்தாலும், கூடவே கொஞ்சம் பொறாமையும், பேராசையும் எழுந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் பொறுப்பல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...