இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் விசேஷம். அவரது மகள் கதீஜாவுக்கு திருமணம் நடந்திருக்கிறது.
நேற்றிரவு ட்விட்டரில் மகள் கதீஜா – மருமகன் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுடன் குடும்பத்தினர் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். எல்லாம் வல்ல இறைவன் இந்த ஜோடியை ஆதரிக்கட்டும். உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் என் முன்கூட்டிய நன்றிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வருடம் டிசம்பர் 29ஆம் தேதி கதீஜாவுக்கும் ரீயாஸ்தீனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த செய்தியை ஜனவரி 2ஆம் தேதி தனது சமூக வலைதளப் பக்கங்களில் கதீஜா அறிவித்திருந்தார்.
ரஹ்மான் மகல் கதீஜா திருமணம் செய்திருக்கும் ரியாஸ்தீன் ஒலிப்பதிவு பொறியாளர். ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதியுடன் பணி புரிந்திருக்கிறார். அவர்களின் இசைப் பயணங்களின் போது அவர்களுடன் பயணித்திருக்கிறார். அவருடைய திறமை ரஹ்மானை வெகுவாக கவர்ந்திருக்கிறது. கதீஜாவும் ரியாஸ்தீன் திறமையை ‘wiz kid’ என்று காதலுடன் வியந்திருக்கிறார்.
ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். கதீஜா மூத்தவர். இஸ்லாமிய மரபுகளில் மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் உடையவர். இளைய மகள் ரஹிமா. மகன் அமீன் தற்போது ரஹ்மான் இசையில் பாடி வருகிறார்.
இந்த திருமணம் காதல் திருமணமா என்று ரஹ்மானுக்கு நெருங்கியவர்களிடம் விசாரித்தோம்.
இது காதல் கலந்த பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்று கூறுகிறார்கள் அவர்கள்.
ரஹ்மான் எப்போதுமே தனது பிள்ளைகளின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துக் கொள்பவர். மூத்த மகள் முழுமையான இஸ்லாமிய மரபுகளின்படி உடைகள் அணிபவராக இருந்தாலும் இளைய மகள் பலவித உடைகளை அணிபவராக இருக்கிறார். அவர்கள் விருப்பங்களில் அவர் குறுக்கிடவில்லை. அது போல் கதீஜாவின் விருப்பத்தையும் அவர் மறுக்கவில்லை என்கிறார்கள்.
இந்தத் திருமண நிகழ்வில் மிக மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனராம்.
திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு இது வரை ரஹ்மான் தரப்பிலிருந்து பதில் இல்லை.
மண மக்களுக்கு வாழ்த்துக்கள்.