No menu items!

மிஸ் ரகசியா – 7 லட்சம் இழந்த அரசியல்வாதி

மிஸ் ரகசியா – 7 லட்சம் இழந்த அரசியல்வாதி

உள்கட்சித் தேர்தல் பஞ்சாயத்துகள் முடிஞ்ச பிறகு அதிமுகவுல இப்ப ராஜயசபா எம்பி சீட் பஞ்சாயத்து நடக்குது” என்று கூறியபடி ஆபீசுக்குள் நுழைந்தார் ரகசியா.

“வந்தவுடனேயே செய்தியா?.. கொஞ்சம் இளைப்பாறிவிட்டு பேசலாமே” என்றவாறு பிரிட்ஜில் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த நுங்கு சர்பத்தை எடுத்து நீட்டினோம். ரிலாக்ஸாக குடித்தபடி பேச்சைத் தொடர்ந்தார் ரகசியா.

“தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியோட முடியுது. இந்த இடங்களை நிரப்பறதுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கு. இந்த 6 இடங்களில் அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும். அதைப் பிடிக்க பல அதிமுக தலைவர்கள் மோதறாங்களாம்.”

“யாரெல்லாம் மோதறாங்க?”

“இந்த 2 சீட்டுக்காக மட்டுமே 60 பேர் கட்சித் தலைமைகிட்ட நச்சரிச்சுட்டு இருக்காங்களாம். குறிப்பா முன்னாள் அமைச்சர் செம்மலை இந்த பதவியை ரொம்பவே எதிர்பார்த்திருக்கார். அதிமுக அமைப்புச் செயலாளரான அவருக்கு கடந்த சட்டசபை தேர்தல்லயே வாய்ப்பு கிடைக்கல. அதனால் இந்த தடவை தனக்கு எப்படியாவது எம்பி பதவி தரணும்னு அவர் கேட்கறாரு. அதே நேரத்துல உள்ளாட்சித் தேர்தல்ல கட்சிக்காக போராடி தான் சிறைக்குப் போனதைச் சொல்லி ஜெயக்குமார் சீட் கேட்கிறாரு. சி.வி சண்முகமும் கேட்கிறார். அதேநேரத்துல பெண்களுக்கு ஒரு எம்பி சீட்டையாவது கொடுக்கணும் அதையும் தனக்கே கொடுக்கணும்னு வளர்மதி, கோகுல இந்திரா போன்றவர்களும் கேட்டுட்டு வர்றாங்களாம்.”

“கட்சித் தலைமை யாருக்கு வாய்ப்பு கொடுக்கும்?”

“ஒருங்கிணைப்பாளர்கள் அதைப்பத்தி இன்னும் முடிவு எடுக்காம இருக்காங்க. இந்த நேரத்துல பாஜக வேற தங்களுக்கு ஒரு எம்பி சீட் வேணும்னு கேட்டு அவங்களை திணறடிக்கிறாங்களாம்.”

“கஷ்டம்தான்”

“இந்தக் கஷ்டம் போதாதுனு சசிகலா கஷ்டமும் அதிமுகவுக்கு சேர்ந்திருக்கு”
“சசிகலாவால அதிமுகவுக்கு கஷ்டமா? என்ன விஷயம்?”

“இந்த மாசம் பத்தாம் தேதிக்கு அப்புறம் மதுரையிலிருந்து இன்னொரு அரசியல் பயணத்தை தொடங்குறாங்களாம்”

“அது எப்பவும் செய்யறதுதானே. அரசியல் பயணத்தை துவக்குறேன்னு அவங்க அடிக்கடி சொல்றதுதானே?”

“இந்த முறை மாநாடு நடத்தப் போறாங்களாம். அது மட்டுமில்லாம அந்த மாநாட்டு மேடைல 34 அதிமுக எம்.எல்.ஏ.க்களை கொண்டு வரப் போறாங்களாம்”

“அது என்ன 34?”

“ராஜ்ய சபா உறுப்பினராக தேவைப்படும் சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் 34. சசிகலாவும் தனக்கு ஒரு ராஜ்யசபை எம்.பி.வேணும்னு ஆசைப்படறாங்களாம்”

“இதெல்லாம் நடக்கற காரியமா?”

“அரசியல்ல எல்லோருக்கும் கனவு காண உரிமை இருக்கு. சசிகலா வட்டாரத்துல என்ன பேசிக்கிறாங்கறதை உங்களுக்கு சொன்னேன். அது மாதிரி நடந்தா அதிமுகவுக்கு கஷ்டம்தானே?”

“கர்நாடகாவுல நடந்த ஒரு நிகழ்ச்சியில திருமாவளவனுக்கு எதிரா ஏதோ போராட்டம் நடந்ததா சேதி வந்துச்சே?”

“ஆமாம் ஆனா இது நடந்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால் இப்பத்தான் வெளிய தெரிஞ்சிருக்கு. கர்நாடகாவுல இருக்கிற சர்ஜாப்பூர்ல அம்பேத்கர் சேவா சமிதி சார்பா அம்பேத்கர் பத்தின நிகழ்ச்சி ஒண்ணு கடந்த மாதம் 24-ம் தேதி நடந்திருக்கு. இதுல சிறப்பு அழைப்பாளரா திருமாவளவன் கலந்துக்கிட்டார். மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி, ஆனேக்கல் காங்கிரஸ் எம்எல்ஏ சிவண்ணான்னு பல பேர் இதுல கலந்துக்கிட்டாங்க.

இந்த நிகழ்ச்சியில அம்பேத்கர் சிலையை திறந்துவச்சு பேசின திருமாவளவன், “நாட்டின் அரசியலமைப்பை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கரே நவீன இந்தியாவின் தேசத் தந்தை ஆவார். அவர் வடிவமைத்து கொடுத்ததைக் கொண்டே இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கிறார்கள். அந்தவகையில் அம்பேத்கர்தான் எப்போதும் ஹீரோ. அந்த காலத்தில் அவருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி. இந்த காலத்தில் வில்லனாக இருப்பவர் பிரதமர் மோடி” அப்படின்னு தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசி இருக்கார்

“ஓஹோ”

“அவர் இப்படி பேசினதும் கூட்டத்துல சலசலப்பு ஏற்பட்டிருக்கு. நிகழ்ச்சி முடிஞ்சு திருமாவளவன் கிளம்பும்போது மைக்கைப் பிடிச்ச அமைச்சர் ஏ.நாராயணசாமியின் ஆதரவாளரும் தலித் அமைப்பின் நிர்வாகியுமான படாபட் சீனிவாஸ், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக மேடையிலேயே திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவிச்சார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், விசிகவினரும் அதிர்ச்சி அடைஞ்சி திருமாவளவனை அங்கிருந்து அனுப்பி வச்சிருக்காங்க. அவருக்கு கொடுத்த நினைவுப் பரிசைக்கூட சிலர் பிடுங்கினதா சொல்றாங்க. உண்மையான்னு தெரியல”

“இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலரா விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டிருக்காரே?”

“இந்த பதவியில ஏற்கெனவே மு.ராமசாமி இருந்தார். அவருக்கும் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவரா இருந்த வாகை சந்திரசேகருக்கும் ஏற்கெனவே ஆகாம இருந்திருக்கு. சந்திரசேகர் எடுத்த பல முடிவுகளை மு.ராமசாமி ஒத்துக்கல. இதனால அவங்களுக்கு இடையில மோதல் இருந்தது. இந்த சூழல்ல இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகறதா மு.ராமசாமி கடிதம் அனுப்பியிருக்கார்.

அந்த கடிதத்தோட, இயல் இசை நாடக மன்றத்துல நடக்கிற ஊழல்களைப் பற்றியும் விரிவா எழுதி அனுப்பி இருக்கார். வாகை சந்திரசேகர் காருக்கு பெட்ரோல் போடறதுக்காக மட்டும் மாசம் 33 ஆயிரம் செலவுக்கணக்கு காட்டப்பட்டதா அதுல அவர் குறிப்பிட்டிருக்காராம். இந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா இல்லையான்னு அவருக்கு யாரும் சொல்லவே இல்லை. அவர்கிட்ட சொல்லாமலேயே மெம்பர் செகரட்டரியா விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டதா சொல்றாங்க.”

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை பத்தி ஏதும் செய்தி கேள்விப்பட்டியா?”

“இந்த விஷயத்துல பிரச்சினையை பெருசாக்க வேண்டாம்னு ஆளும் தரப்பு நினைக்குதாம். அதனால பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கான தடை நீங்கலாம்னு சொல்றாங்க”

“அரசு தேவையில்லாம இந்தப் பிரச்சினைல மாட்டிக்கிட்டதா?”

“அப்படிதான் ஆளும் கட்சி நினைக்கிறது. முக்கியமா இந்தப் பிரச்சினை பெரிதாகப் போகிறது என்று உளவுத் துறை சரியான தகவல்களை அரசுக்கு கொடுக்கவில்லை என்ற வருத்தமும் முதல்வருக்கு இருக்கிறதாம். இப்போது எப்படி சுமூகமாகவும் கௌரவமாகவும் பிரச்சினையைத் தீர்க்கிறது என்று யோசிக்கிறார்கள். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மூலம் தீர்வுப் பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.”

“அண்ணாமலை தானே போய் பல்லக்கு தூக்குவேன் என்று சொல்லியிருக்கிறாரே?”

“இதுதான் பாஜக அரசியல். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் அந்தப் பல்லக்கை தூக்குவார்கள். அண்ணாமலை அந்த சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. அதனால் அவரால் செய்ய இயலாது, அரசியலுக்காக பேசுகிறார் என்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினே அங்கே செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்”

“திமுகவிலயும் உள்கட்சித் தேர்தல் நடக்குதே?”

“ஆமாம். இந்த உள்கட்சித் தேர்தல்ல இளைஞர் அணியினருக்கு போதிய முக்கியத்துவம் தரணும்னு உதயநிதி கேட்டுட்டு இருக்காராம். அதனால இளைஞர்களுக்கு 50 சதவீதம், மற்றவர்களுக்கு 50 சதவீதம்னு பதவிகளை பிரிச்சுக் கொடுக்கலாம்னு சொல்லப்படுது.”

“உதயநிதி அமைச்சராவது என்னாச்சு?”

“அவருக்கு அமைச்சர் கார்லாம் ரெடியாகிடுச்சு. அவருடன் இன்னும் இரண்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.”

“உதயநிதிக்கு மட்டும் பதவி அளித்தால் அது விமர்சனங்களை கிளப்பும் என்பதால் இப்படி செய்கிறார்களா?”

“அதுவும் ஒரு காரணம். ஆனால் திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்ற கருத்து இருக்கிறது. அந்தக் கருத்தை உடைக்க இளைஞர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை திமுக செயல்படுத்த இருப்பதாக கூறுகிறார்கள். அமைச்சரவையில் மட்டுமில்லாமல், மாவட்டங்கள் அளவிலேயே இளைஞர்களுக்கான பதவிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.”

“திமுக செய்திகள் வேறு ஏதாவது இருக்குதா?”

“மூத்த அமைச்சர் துரைமுருகன் மேல மற்ற அமைச்சர்கள் கொஞ்சம் கோபமா இருக்காங்களாம். குறிப்பா கடந்த 5-ம் தேதி 3 துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு வந்தது. அப்ப அமைச்சர்கள் தங்கள் உரையை சீக்கிரமா முடிக்கணும்னு அவை முன்னவரான துரைமுருகன் சொல்லியிருக்கார். இதை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ரசிக்கலையாம். ஒரு அமைச்சர் வேணும்னே ஒரு மணி நேரத்துக்கு மேல பேசியிருக்கார். இது துரைமுருகனுக்கும் வருத்தத்தை கொடுத்திருக்காம். அவரை மாதிரியே இன்னொருத்தரும் வருத்தமா இருக்கார்”

“யார் அவர்?”

“அரசியல் கருத்துகளை அதிரடியாகப் பேசி எதிராளிகளை நக்கலடிக்கும் வைகோவின் முன்னாள் தோழர்தான் அவர். காலம் முழுக்க பேசிப் பேசி சம்பாதிச்ச பணத்துல கொஞ்சத்தை திருச்சியில இருக்கிற நிதி நிறுவனத்துல போட்டிருக்கார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அவர் முதலீடு செஞ்ச தொகை 7 லட்சம் வரை இருக்கும். ஆனால் அந்த நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்காம ஏமாத்திருச்சு. அரசியல்லதான் ஏமாற்றம்னா இங்கேயும் ஏமாற்றமா என்று வருத்ததில் இருக்கிறார் இந்த நாஞ்சில் நாட்டுக்காரர்” என்று கூறி நுங்கு சர்பத்தை முடித்துவிட்டு கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...