அதிர்ச்சியாகதான் இருக்கிறது. ஆகஸ்ட் 17 முடிந்து 21ஆம் தேதிக்குள் 41 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன தமிழ்நாட்டில். குறிப்பாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில். இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு.
ஆடி மாதம் இந்த ஆகஸ்ட் 16ல் முடிந்தது. ஆடி முடிந்தது ஆவணி வந்ததும் பழைய பஞ்சாங்கங்களின்படி சுப காரியங்களுக்கான நாட்கள் தொடங்கிவிட்டன. தொடங்கிய இந்த நான்கு நாட்களில் இத்தனை குழந்தை திருமணங்கள்.
என்ன காரணம்?
இந்தக் குழந்தைத் திருமணங்களில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெண் குழந்தைகள் பருவத்துக்கு வந்து 14லிருந்து 16 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இதற்கு பெற்றோர் சொல்லும் காரணம். வயசுப் பெண்ணை எப்படி வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது என்று.
பெண் குழந்தைகள் யாரையாவது காதலித்து குடும்பத்துக்கு கெட்டப் பெயர் வாங்கித் தந்துவிடும் என்று பெற்றொர் அஞ்சுவதால் அவசர அவசரமாய் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க முயலுகிறார்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.
விசாரித்த வரையில் இந்த பருவ வயது பெண் குழந்தைகள் யாரும் காதல் வயப்பட்டு அவசரமாய் திருமணத்துக்கு ஆர்வப்பட்டவர்கள் அல்ல என்பது தெரிய வந்திருக்கிறது. பெற்றொர் தங்கள் அச்சத்தின் காரணமாக திருமணம் செய்து வைக்க முயன்றிருக்கிறார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்தக் குழந்தைகளின் வயதைவிட மிக அதிக வயதையுடைய ஆண்களை மாப்பிள்ளைகளாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
’படிப்பு வரலங்க, அதான் கல்யாணம் பண்ணி கொடுத்துடுறோம்’ என்பது பெற்றொரின் மற்றொரு வாதமாக இருக்கிறது.
இந்த மாவட்டங்கள் தமிழ்நாட்டின் வளமான மாவட்டங்கள் அல்ல, சற்று பின் தங்கிய மாவட்டங்கள். இங்கு ஏழ்மை அதிகம். கல்வியறிவு குறைவு இவையும் குழந்தைத் திருமணங்களுக்கு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஒரு ஊரில் திருமண வயதை அடையாத பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து வைக்க முயலும்போது தகவல் அறிந்து அதிகாரிகள் அங்கு செல்கிறார்கள். திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார்கள். அது மட்டுமில்லாமல், அந்த குழந்தைக்கும் பெற்றோருக்கும் ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குகிறார்கள். குழந்தைகள் படிப்புக்கான வசதிகளை செய்து தருகிறார்கள். இது அரசு தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகள்.