No menu items!

நாளை 2-வது டெஸ்ட் – குழப்பத்தில் இந்திய அணி?

நாளை 2-வது டெஸ்ட் – குழப்பத்தில் இந்திய அணி?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் ஏற்கெனவே தோற்ற நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெல்வதை கவுரவப் பிரச்சினையாக பார்க்கிறது இந்தியா. இந்த போட்டியிலும் தோற்றால், தாய் மண்ணில் பல ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இழக்கும் இக்கட்டான நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம்.

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் தோற்றது இந்தியாவுக்கு முதல் பின்னடைவு என்றால், அப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதம் விளாசியவர்களான கே.எல்.ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் காயத்தால் இப்போட்டியில் ஆடாதது மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சுப்மான் கில், ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரும் பேட்டிங்கில் சொதப்பி வர, ஓரளவு நன்றாக ஆடிக்கொண்டு இருந்த ராகுலும், ஜடேஜாவும் வெளியேறியது ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது.

குல்தீப்பா… வாஷிங்டன் சுந்தரா?

ஜடேஜா காயத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது டெஸ்ட்டில் யாரை ஆடவைப்பது என்று தீர்மானிப்பது ரோஹித் – டிராவிட் கூட்டணிக்கு புது தலைவலியாக மாறியிருக்கிறது. இதில் பந்துவீச்சை மட்டும் வைத்துப் பார்த்தால் குல்தீப் யாதவின் பெயரை எளிதாக டிக் அடித்து விடலாம். சர்வதேச போட்டிகள் பலவற்றில் விக்கெட்களை அள்ளி எடுத்த அனுபவம் வாய்ந்தவர் குல்தீப் யாதவ்.

ஆனால் ஜடேஜாவுக்கு பதில் குல்தீப்பை கொண்டுவருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் ஏற்கெனவே தடுமாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த போட்டியில் அப்படி டாப் ஆர்டர் தடுமாறியபோது ஜடேஜாவின் கடைசி நேர பேட்டிங் கைகொடுத்தது. ஆனால் குல்தீப்புக்கு அந்த அளவுக்கு பேட்டிங் வராது. அதனால் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங்கும் செய்யக் கூடிய வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்கலாம் என்றும் சில முன்னாள் வீர்ர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் குல்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் யாரை அணிக்கு தேர்ந்தெடுப்பது என்பதில் அணி நிர்வாகத்தினரிடையே மிகப்பெரிய குழப்பம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே போலவே கே.எல்.ராகுலுக்கு பதில் பட்டிதார் மற்றும் சர்பிராஸ் கான் ஆகிய இருவரில் யாரை அணிக்கு தேர்ந்தெடுப்பது என்பதும் இந்திய கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் பெரும் குழப்பம் உள்ளது.

உற்சாகத்தில் இங்கிலாந்து:

இந்திய அணி நிர்வாகம் குழம்பி இருக்கும் அதே நேரத்தில், இங்கிலாந்து அணி நிர்வாகம் எந்த குழப்பமும் இல்லாமல் உற்சாகமாக இருக்கிறது. தங்கள் சுழற்பந்து வீச்சை வைத்து முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி, விசாகபட்டினம் டெஸ்ட் போட்டியில் 4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாமா என்று யோசித்து வருகிறது. நாளை காலையில் ஆடுகளத்தை பார்வையிட்ட பிறகு இதுபற்றி இறுதி முடிவு எடுப்பதாக இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கூறியிருக்கிறார்.

மெக்கல்லம் 4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதாக இருந்தால், விசா பிரச்சினையால் கடந்த ஆட்டத்தில் ஆடமுடியாமல் போன ஷோயப் பஷீருக்கு இப்போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆடுகளம் எப்படி?

நாளை இந்தியா – இங்கிலாந்து அணிகளிடையே தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடக்கிறது. இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த பேட்டிங் பிட்ச்களில் ஒன்றாக இந்த ஆடுகளம் பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில்தான் ரோஹித் சர்மா தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 159 ரன்களை எடுத்துள்ளார்.

முதல் 3 நாட்களுக்கு பேட்டிங்குக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்றாலும், அதற்கடுத்த 2 நாட்களுக்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக விசாகபட்டினம் மைதானத்தின் ஆடுகளம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் அஸ்வின் ஏற்கெனவே நிறைய விக்கெட்களை எடுத்துள்ளார் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அஸ்வினும், ரோஹித் சர்மாவும் இந்தியாவை கரை சேர்ப்பார்களா பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...