No menu items!

மிஸ் ரகசியா – பதவி இழக்கும் 2 அமைச்சர்கள்

மிஸ் ரகசியா – பதவி இழக்கும் 2 அமைச்சர்கள்

திடீரென்று பெய்த பெருமழையால் தொப்பலாக நனைந்துபோய் ஆபீசுக்குள் நுழைந்தார் ரகசியா. உடைகளில் படிந்துள்ள ஈரம் போக ஃபேனைப் போட்டவர், கர்ச்சீப்பால் தலையை துவட்டிக்கொண்டார்

“மழைல நனைஞ்சாச்சா….வித்தியாசமா மே மாசம் புயல் வந்துருக்கு”

’‘மே மாசம் புயல்ன்றதுல இன்னொரு விஷயம் இருக்கு. ‘அசானி’ங்கிற இலங்கைப் பெயரை வச்சிருக்காங்க. அசானின்னா சிங்கள மொழியில ‘பெருஞ்சினம்’னு அர்த்தமாம். அந்த பெருஞ்சினம்தான் இப்போ இலங்கைல வீசிக்கிட்டு இருக்கு. ராஜபக்சே சகோதரர்களோட குடும்பமும், அவங்க கட்சி எம்பிக்களும் மக்களோட பெரும்சினத்தை சமாளிக்க முடியாம திணறராங்க. ராஜபக்சேவோட பரம்பரை வீடு உள்ளிட்ட பல வீடுகளை மக்கள் தீக்கிரையாக்கிட்டாங்க. அவரு வெளிநாடு செல்ல எஸ்கேப் ரூட் பாத்துக்கிட்டு இருக்காரு”

“2009-ம் வருஷம் இதே மே மாசம்தானே முள்ளிவாய்க்கால்ல தமிழர்கள் மேல ராஜபக்சே அரசு பாஸ்பரஸ் குண்டுகளை வீசினாங்க. இதுல எத்தனை பேரு எரிஞ்சு போயிருப்பாங்க. அவங்க சாபம் சும்மா விடுமா?”

“இதைத்தான் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’னு சொல்வாங்க போல”

“இந்த போராட்டத்துல தமிழர்கள் என்ன நிலையை எடுத்திருக்காங்களாம்?

“தமிழர்களைவிட சிங்களர்கள்தான் இப்ப ராஜபக்சேக்கு எதிரா இருக்காங்க. அதனாலதான் அவர் பயந்து போய் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதிக்குப் போய் பதுங்கி இருக்காரு.”

“சட்டசபை கூட்டத் தொடர் முடிஞ்சதும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி உறுதின்னு சொல்லிட்டு இருந்தியே. அது என்ன ஆச்சு?”

“கூடிய சீக்கிரம் தமிழக அமைச்சரவை மாற்றம் இருக்கும். அதுல உதயநிதிக்கு பதவி நிச்சயம்னு பேசிக்கறாங்க. உதயநிதியுடன் இளைஞர் அணியைச் சேர்ந்த மேலும் 2 பேரை அமைச்சர்கள் ஆக்கலாம்னு நினைக்கிறாராம் முதல்வர். அதனால உதயநிதியோட சேர்த்து தாயகம் கவி மற்றும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு லக் அடிக்கலாம்னு சொல்றாங்க.”

“புதியன சேர்ந்தால் சில பழையன கழியுமே?”

“அதுக்கும் வாய்ப்பு இருக்கு. அமைச்சரவை மாற்றத்துல தென்மாவட்டத்துக்காரர் ஒருவருக்கும், பெரிய அமைச்சர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படும்னு கட்சிக்காரங்க பேசிக்கிட்டு இருக்காங்க. தென் மாவட்டத்துக்காரர் மேல அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது அவரோட பதவி பறிப்புக்கு காரணமா இருக்கப்போகுதுன்னு பேசிக்கிறாங்க. கலைஞர் பிறந்த நாளுக்கு முன்னாடியே இந்த மாற்றங்கள் இருக்கலாம்னும் சொல்லப்படுது. இந்த அமைச்சரவை மாற்றத்துல கே.என்.நேருவுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கவும் வாய்ப்பு இருக்காம்.”

“திருச்சி சிவாவோட மகன் பாஜகவுல சேர்ந்திருக்காரே?”

“இந்த விஷயத்துல திருச்சி சிவா ரொம்பவே அப்செட்டாம். தனக்கு ஏதும் பதவி இல்லைன்னு புலம்பிட்டு இருந்த மகன்கிட்ட, கொஞ்சம் பொறுமையா இரு… தலைமைகிட்ட பேசி ஏதாவது பதவி வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கார் திருச்சி சிவா. ஆனா அவர் பொறுமை இழந்து போயிருக்கார். இதைப்பத்தி கேள்விப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘உங்களை மாதிரி இளம் ரத்தத்தைத்தான் தேடிட்டு இருக்கோம்’னு பேசி அலாக்கா தூக்கிட்டு வந்திருக்கார். முழுக்க முழுக்க இது அண்ணாமலையோட பிளான்னு பேசிக்கிறாங்க.”

“இதனால கட்சியில அண்ணாமலையோட இமேஜ் கூடியிருக்குமே?”

“அதுதான் இல்லை. கட்சி நிர்வாகிகள் நியமன விஷயத்தால இப்ப அவரோட இமேஜ் சரிஞ்சு கிடக்குது. புதிய நிர்வாகிகள் நியமனத்துல பல பேர் அதிருப்தியில இருக்காங்க. குறிப்பா அதிமுகவுல இருந்து வந்த சசிகலா புஷ்பாவுக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கினதை மூத்த தலைவர்கள் ரசிக்கலையாம். வினோஜ் பி செல்வத்தை இளைஞரணி தலைவர் பதவியில இருந்து மாத்தி செயலாளரா நியமிச்சு இருக்காங்க. அவருக்கு அதில அதிக விருப்பம் இல்லையாம். அதேபோல கட்சியோட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பதவியில இருந்து தான் நீக்கப்பட்டதுல காயத்ரி ரகுராமும் வருத்தத்துல இருக்காங்க. எல்லோருக்கும் அண்ணாமலை மீது கோபம்.”

“துக்ளக் விழாவுல ஆடிட்டர் குருமூர்த்திகூட அண்ணாமலையை விமர்சித்து பேசினாராமே?”

“முழுமையா விமர்சிக்கல, இந்தி எதிர்ப்புக்கு அண்ணாமலை ஆதரவுனு சொன்னது ஆடிட்டருக்குப் பிடிக்கல. இந்தி விஷயத்துல பாஜகவினர் அனைவரும் ஒரே கருத்தை சொல்லணும், அது இந்திக்கு ஆதரவா இருக்கணும்கிறதுதான் அவர் நிலைப்பாடு”

”அண்ணாமலை பரபரப்பா பண்றார்னு வெளில பேச்சு இருக்கு”

“வெளில அப்படி பேச்சு இருக்கு ஆனா உள்ள அப்படி இல்லை. அவர் பரபரப்பா பண்றதே பாஜகவினர் பலருக்கு பிடிக்கல. அதிமுக அரசியல்ல அவர் எடப்பாடி ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கார். எடப்பாடியைவிட சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் பெட்டர்ன்ற கருத்து பல பாஜகவினருக்கு உண்டு. அவங்களைதான் சப்போர்ட் பண்ணனும்னு சொல்றாங்க. ஆனா அண்ணாமலை அதை ஏற்கலைன்னு சொல்றாங்க.”
“ஏன்?”

“எடப்பாடிதான் அதிமுகனு அண்ணாமலை நினைக்கிறார். அதுக்கு உதாரணமா அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை சொல்றார். அதிமுகவில் நடந்த உட்கட்சித் தேர்தல்ல கிட்டத்தட்ட 90 சதவீத இடங்கள்ல எடப்பாடி ஆதரவாளர்கள்தான் ஜெயிச்சிருக்காங்கனு சொல்லியிருக்கார்”

“உட்கட்சித் தேர்தல்ல வெற்றி, பாஜக அண்ணாமலை ஆதரவு…..எடப்பாடி ஹேப்பியா இருப்பாரே?”

“அதுதான் இல்லை. கோடநாடு கொலை தொடர்பான விசாரணையில எடப்பாடிக்கு எதிரா பல விஷயங்களை சசிகாலா பேசி இருக்கிறதா சொல்லப்படுது. அதனால இந்த சட்டசபை கூட்டத் தொடருக்கு பிறகு தன் மீதான பிடி இறுகலாமோன்னு எடப்பாடி டென்ஷன்ல இருக்கிறாராம்.”

”திமுக கூட்டணிலயும் டென்ஷன்னு சொல்றாங்களே?”

“பட்டிணப் பிரவேச பல்லக்கு விவகாரத்துலயும், ஆக்கிரமிப்பு அகற்றிய சம்பவத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுகமீது கொஞ்சம் அதிருப்தினு சொல்றாங்க. பட்டிணப் பிரவேசத்துல அரசின் நிலைப்பாடு குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாம்னு அவங்க சொல்றாங்க. காங்கிரஸ், விசிக, இடதுசாரித் தலைவர்கள் இந்தப் பிரச்சினைகள் குறித்து சின்னதா மீட்டிங் நடத்திக்கிட்டதாகவும் பேச்சு இருக்கு”

“இதுக்கு திமுகவின் கருத்து என்ன?”

“திமுக தலைவர் ஸ்டாலின் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் செய்யணும்னு நினைக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிருப்தி வந்துவிடக் கூடாதுன்றதுல உறுதியா இருக்கார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஸ்டாலினோட அன்பு தெரியும் அதனால் கூட்டணில எந்த சிக்கலும் வராதுனு சொல்றாங்க”

“ராஜ்யசபா நியமன உறுப்பினரா கிரிக்கெட் வீரர் கங்குலியோட மனைவியை நியமிக்கப்போறதா பேச்சு இருக்கே?”

“தமிழ்நாட்டுல ரஜினிகாந்த் எப்படியோ, அப்படித்தான் மேற்கு வங்கத்துல சவுரவ் கங்குலி. அங்க இருக்கிற மக்கள் மத்தியில சவுரவ்க்கு இருக்கிற மவுசே தனி. அதனால அவரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமா முயற்சி செஞ்சுட்டு வருது. கடந்த சட்டசபை தேர்தலப்பகூட இதுக்கு முயற்சி செஞ்சாங்க. ஆனா கங்குலி அதுக்கு சம்மதிக்கல. இப்ப அவரோட மனைவிக்கு எம்.பி. பதவி கொடுத்து வளைக்கப் பார்க்கிறாங்க. சில நாட்கள் முன்னாடி அமித் ஷாவுக்கு கங்குலி விருந்து கொடுத்ததும் பெரிசா பேசப்பட்டு வருது”

”ராகுல் டிராவிடும் பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார்னு பேச்சு இருக்கே?”

“இல்லை தப்பு நியூஸ்னு ராகுல் டிராவிடே சொல்லியிருக்கார். இமாச்சல பிரதேசத்துல தர்மசாலாவுல நடக்கிற பாஜகவுடைய இளைஞர் அமைப்பு நிகழ்ச்சில ராகுல் டிராவிட் பங்கு பெற போவதாக செய்திகள் வந்தது. ஆனால் அவர் அதை மறுத்திருக்கார். அப்படி எந்த நிகழ்ச்சிலேயும் தான் கலந்துக்கலனு கூறியிருக்கிறார். இப்போதைக்கு அவர் பாஜக பக்கம் சாய்ற மாதிரி தெரியல”

“அவர்தான் ‘சுவர்’ ஆச்சே. நேராதான் நிற்பார்”

சிரித்துக் கொண்டே கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...