No menu items!

துரத்தும் மக்கள் – ஓடும் ராஜபக்சே

துரத்தும் மக்கள் – ஓடும் ராஜபக்சே

மகிந்தா ராஜபக்சேவுக்கும் மே மாதத்துக்கும் ஒரு மிகப்பெரிய தொடர்பு உண்டு. 2009-ம் ஆண்டு, மே மாதத்தில்தான் விடுதலைப் புலிகளை தோற்கடித்து இலங்கையின் சிங்கள மக்களிடையே மிகப்பெரிய ஹீரோவானார் மகிந்தா ராஜபக்சே. இப்போது அதே மே மாதத்தில் நாட்டு மக்களால் – முக்கியமாய் அவரைக் கொண்டாடிய சிங்கள மக்களால் – வில்லனாக வெறுக்கப்படுகிறார் மகிந்தா. பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இப்போது அவரது ஆதரவு ராணுவத்தின் உதவியுடன் மக்களிடம் இருந்து தப்பித்து தமிழர்கள் அதிகம் வசிக்கும்  திரிகோணமலைக்கு தப்பிச் சென்றிருக்கிறார். அங்கிருக்கும் கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருக்கிறார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலைக்கு அவரைத் தள்ளியது அளவுக்கு மீறிய குடும்ப பாசம்தான் என்கிறார்கள் இலங்கை அரசியல் வல்லுநர்கள். முன்பு அதிபராக இருந்தபோது கோத்தபய ராஜபக்சேவை வளர்த்துவிட்ட மகிந்தா, விடுதலைப் புலிகளை வென்றபின், இலங்கையின் நிரந்தர ஹீரோவாக தான் இருப்பேன் என்று உறுதியாக நம்பினார். அத்துடன் தன் குடும்பத்தை விட்டு எந்த அதிகாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சமல் ராஜபக்சே, நமல் ராஜபக்சே, பசில் ராஜபக்‌ஷே, யோஷிதா ராஜபக்சே, ஷ்சீந்திர ராஜபக்சே என்று தம்பிகள் முதல் மகன்கள் வரை அனைவருக்கும் பதவிகளை வாரி வழங்கினார்.

இதில் மகிந்தாவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியவர் பசில் ராஜபக்சேதான். நாட்டின் நிதித்துறை அமைச்சராக அவருக்கு பதவி வழங்கினார் மகிந்தா ராஜபக்சே. ஆரம்பத்தில் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அதை மீட்டெடுக்க முடியாமல் விழித்தார் பசில்.

அதேநேரம் அந்த பதவியையும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக கூடுதல் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க உத்தரவிட்டால் இது இலங்கை ரூபாயின் மதிப்பை மேலும் சிதைக்க அதல பாதாளத்துக்கு சென்றது இலங்கையின் பொருளாதாரம். மறுபக்கம் சீனாவிடம் இருந்து வாங்கிய கடனும் கழுத்தை நெரிக்க, தத்தளித்தது இலங்கை.

விடுதலைப் புலிகளை வென்றவர் என்ற ஒரே காரணத்துக்காக எத்தனை காலத்துக்குத்தான் ராஜபக்சே குடும்பத்தின் செயலற்ற தன்மையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள் மக்கள்.

விலைவாசி உயர்ந்து, வாழ்க்கைத் தரம் பாதித்த நிலையில் கொதித்து எழுந்துவிட்டார்கள். ராஜபக்சே குடும்பம் ஒட்டுமொத்தமாக பதவியில் அரசு பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.

ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தை ராஜபக்சே சகோதரர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மக்கள் தாங்களாக சமாதனமடைந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல ஆன்மிகத் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பெரும் திரளாக கூடிப் போராட்டத்தில் குதித்தும் செய்வதறியாமல் திகைத்துப் போனார்கள்.

கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய போராட்டம் நேற்றுவரை அமைதியாகத்தான் நடந்தது. ஆனால், இந்த சூழலில் ஆர்பாட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் தாக்குதல் நடத்த, ஒட்டுமொத்த இலங்கையும் பற்றிக்கொண்டது.

ராஜபக்சேக்கள் வேண்டுமென்றே சிறையில் இருந்து கைதிகளை விடுவித்து, அவர்களை வைத்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் குற்ரம் சாட்டினர். இதனால் போராட்டத்தின் தீவிரத்தன்மை அதிகரித்தது.

அடுத்ததாக மகிந்தா ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே ஆகிய இருவரில் யாராவது ஒருவர் பதவி விலகினால் எல்லாம் சரியாகும் என்று நினைத்த மகிந்தா, தான் பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால், பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகிய பிறகும் போராட்டம் தீவிரமடைந்தது. ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக வீடு, எம்பிக்கள் வீடு என 35 வீடுகள் ஒரே இரவில் தீக்கிரையாக மிரண்டு போனார் மகிந்தா.

இந்தச் சூழலில் மகிந்தாவின் வீட்டை முற்றுகையிட்டும் தாக்குதல் நடத்த மக்கள் தயாராக, ராணுவத்தின் உதவியுடன் இன்று காலை திரிகோணமலைக்கு தப்பிச் சென்றார் ராஜக்பக்சே. தன் வாழ்க்கையில் எந்த தமிழர்களை எதிரியாக பார்த்தாரோ, அந்த தமிழர்களின் பகுதியில் இப்போது அடைக்கலமாகி இருக்கிறார் மகிந்தா. சிங்களர்களைவிட தமிழர்கள் நல்லவர்கள் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், திரிகோணமலையில் இருந்தும் ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்று கூறப்படுகிரது. தமிழர்களை இலங்கையை விட்டு விரட்ட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு ஒரு காலத்தில் செயல்பட்டார் மகிந்தா. ஆனால், இன்று அவரே இலங்கையைவிட்டு ஓடுகிறார். இதுதான் விதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...