கண்களில் கூலிங் கிளாஸ், கைகளில் கையுறை, முகத்தைச் சுற்றி ஸ்கார்ஃப், கைகளை முழுவதுமாக மறைக்கும் முழுக்கை சட்டை என்று வெயிலில் இருந்து காக்கும் சகல அம்சங்களுடனும் தலிபான் தீவிரவாதிபோல் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“அசானி புயல் புண்ணியத்துல சென்னை ஒரு வாரம் கூலா இருந்துச்சு இப்ப மீண்டும் வெயில் வாட்டுது. வெளியில் தலைகாட்ட முடியவில்லை” என்று புலம்பிக்கொண்டே வந்தவளுக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்து கூல் செய்தோம்.
”முதல்ல ஒரு கூல் ஊர்லருந்து வந்த நியூசை சொல்லிடுறேன்”
“அது என்ன கூல் ஊரு?”
“ஊட்டிதான். முதல்வர் அங்கதான இருந்தாரு. அவர் ஊட்டில இருந்தபோது அங்க குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் இருந்தார். இரண்டு பேரும் அடிக்கடி பேசிக்கிட்டாங்கனு ஊட்டிலருந்து செய்தி வந்துருக்கு. மத்திய அரசுடன் மோதல் போக்கு வேண்டாம், மத்திய அரசும் திமுக அரசை எதிர்ப்பா பார்க்காதுனு முதல்வருக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறதாம். முதல்வர் ஸ்டாலின் எல்லா விஷயங்களையும் மென்மையா, பொறுமையா கையாள்றது பிரதமர் மோடிக்கு ரொம்பவே பிடிச்சிருக்காம். அதனால மோதல் வேண்டாம்னு டெல்லிலருந்து செய்தி சொல்லியிருக்காங்க, முதல்வர் கிட்ட”
“முதல்வர் என்ன சொன்னாராம்”
“வழக்கம்போல் புன்னகையுடன் பொறுமையாக கேட்டுக்கிட்டாராம்”
“ஆனா அண்ணாமலை அதிரடியா திமுக அரசை விமர்சித்துல அரசியல் பண்றார்?”
“உண்மைதான். அதுக்கும் சீக்கிரம் முடிவு வரும்னு சொல்றாங்க. ஊட்டில குடியரசுத் தலைவர் தேர்தல் பத்தியும் பேசியிருக்காங்க”
”பாஜகவுக்குதான் மெஜாரிட்டி இருக்கே. ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கு?”
“அது ஒரு பிம்பம்தான். ஜனாதிபதி தேர்தல்ல வெற்றி பெறுகிற அளவுக்கு மெஜாரிட்டிலாம் பாஜக கூட்டணிக்கு இல்ல. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரை 48.9 சதவீத ஓட்டுகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டும் இதர கட்சிகளுக்கு 51.1 சதவீத வாக்குகள் உள்ளன. இந்த சூழலில் தன்னுடன் உள்ள கூட்டணி கட்சிகள் வெளியே போய்விடக் கூடாது என்பதில் பாஜக தலைமை தெளிவாக உள்ளது. தற்போது கொஞ்சம் முரண்டு பிடித்துவரும் நதீஷ் குமாரை சரிகட்டக்கூட ஏற்பாடு செய்து வருகிறார்கள். எதிரணிலருந்தும் ஆட்களை இழுக்க முயற்சிகள் நடக்குது. எந்தப் பக்கமும் சாயாமல் அமைதியாக இருக்கும் பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளை வளைக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது”
“26-ம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறாரே… வழக்கம்போல் ‘கோ பேக் மோடி’ முழக்கங்கள் இருக்குமா?”
“அவரது பயணம் சுமுகமாக இருக்க வேண்டும். அதில் எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருக்கிறாராம். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார். பிரதமர் வரும்போது விமான நிலையம் முதல் விழா நடக்கும் நேரு இன்டோர் ஸ்டாடியம் வரை அலங்கார வளைவுகள் மற்றும் கட்சிக் கொடிக்கம்பங்களை நட அண்ணாமலை முதலில் திட்டமிட்டாராம். ஆனால் பாதுகாப்பு காரணங்களை சொல்லி காவல்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பயணத் திட்டத்தை மாற்றுமாறு கேட்டுக் கொண்டது. ஆரம்பத்தில் அண்ணாமலை தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்தது. பின்னர் காவல்துரை அதிகாரிகளின் நீண்ட போராட்டத்தால் பிரதமரின் பயணத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.”
“அப்படி என்ன மாற்றம் செய்துவிட்டார்கள்?”
“முதலில் பிரதமர் காலை 11 மணிக்கு வருவதாக இருந்தது. ஆனால் இப்போது பயணத் திட்டம் மாறிவிட்டது. மாலை 5.10-க்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடலில் உள்ள கப்பற்படை தளத்தில் இறங்குகிறார். பின்னர் தீவுத்திடலில் இருந்து அண்ணா சமாதி, வாலாஜா சாலை, அண்ணா சிலை, சிம்சன் வழியாக நேரு ஸ்டேடியத்துக்கு செல்கிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு 7.40க்கு பிரதமர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரத்தில் இந்த நிகழ்ச்சியில் முதல்வரும் கலந்துகொள்கிறார். மொத்தத்தில் ‘கோ பேக் மோடி’ ஸ்லோகம் மாறி ‘வெல்கம் மோடி’ ஸ்லோகனாகி வருகிறது. இதனால் பாஜகவுடன் திமுக நெருக்கமாகி வருகிறதோ என்ற வருத்தம் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது”
“நியாயமான வருத்தம்தான்…”
“தமிழ்நாட்டுல கட்சியை வளர்க்க பாஜக அதிரடியா பல திட்டங்களை வச்சிருக்கு. ஆனாலும் திமுக அதை கவனிக்க மறுக்கிறாங்காளேனு கூட்டணிக் கட்சிக்காரர்கள் சொல்றாங்க”
“என்ன திட்டம் வச்சிருந்தாலும் இது திராவிட பூமி இங்க தாமரை மலராதுனுதானே சொல்வாங்க. இப்ப ஏன் கவலைப்படுறாங்க?”
“பாஜக இவ்வளவு அதிரடியா செயல்படும்னு அவங்க நினைக்கல. உதாரணமா இப்ப ஒரு புது வியூகத்தை பாஜக போட்டு வைத்திருக்கிறது. அதன்படி மத்திய அரசின் திட்டங்களினால் உதவி பெறும் மக்களை கண்டுபிடித்து அவர்களிடம் நேரடியாக சென்று பேசி, மத்திய அரசு திட்டத்தினால்தான் உதவி கிடைச்சிருக்குனு புரிய வைக்கப் போறாங்களாம். அந்த மக்களை பாஜகவுக்கு ஓட்டுப் போடவும் வைக்கப் போறாங்களாம். இதற்காக பல ஆயிரம் இளைஞர்களை பணியில் அமர்த்தி மக்களை சந்திக்க வைக்கப் போறாங்களாம்”
”இதெல்லாம் நடக்கிற காரியமா? சரி அதிமுகவுல இன்னும் ராஜ்யசபை வேட்பாளர் யாருனு முடிவு செய்யாம இருக்காங்களே?”
“இரு தரப்பினருக்கும் தலா ஒரு சீட் என்று பிரித்துக்கொண்டாலும், வேட்பாளர்கள் விஷயத்தில் இன்னும் தீர்மானமாகவில்லை. வன்னியர்களின் வாக்குகளைக் கவர சி.வி.சண்முகத்துக்கு ஒரு சீட் வழங்கப்படலாம் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. அதேபோல் ராஜன் செல்லப்பாவின் மகனுக்கும் சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். ஜெயக்குமாருக்கு நிச்சயம் என்றும் சொல்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஓபிஎஸ்க்கு பவர் இல்லனுங்கறது இப்போ தெரிஞ்சு போயிருச்சு. அவருக்கு ஆதரவு கொடுக்க யாரும் முன் வரலையாம்”
“காங்கிரஸ் கட்சியிலாவதுசீட் விவகாரம் முடிந்துவிட்டதா?”
“ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் ஆகியோரில் யாருக்கு எம்பி பதவி என்பது இன்னும் முடிவாகவில்லை”
“டி.ராஜேந்தர் எப்படி இருக்கார். உன் காதுக்கு எதாவது செய்தி வந்ததா?”
“மாயவரத்தில் இருந்து தருமபுரம் ஆதீனத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ சியாமளாதேவி கோயில் உள்ளது. டி.ராஜேந்தருக்கு மிகவும் ராசியான கோயில் இது. தனது படங்களோ, சிம்புவின் படங்களோ வெளிவரும்போது இந்த கோயிலில் வழிபட்டு கரகம் எடுப்பது டி.ராஜேந்தரின் வழக்கம். இந்தக் கோயிலுக்கு வரும் ஜூன் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கோயில் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆஜராகும் டி.ஆரை, கும்பாபிஷேகத்துக்கு அழைத்தபோது, ‘பார்ப்போம்.. உடம்பு ஒத்துழைச்சா வர்றேன்’ என்றாராம். கோயில் நிர்வாகிகள் இதைச் சொல்லி ரொம்பவே வருத்தப்படுகிறார்கள்”
“பாவம்”
“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம். அதனால் குஷ்பு தற்போது கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பது குஷ்புவின் வருத்தம். தமிழ் நாட்டில் பாஜக என்றால் அண்ணாமலை மட்டும்தான் என்பது மாதிரி அண்ணாமலை செயல்படுகிறார் என்று தனது நெருங்கிய வட்டாரங்களில் வருத்தத்துடன் கூறியிருக்கிறாராம்”
”தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் என்னாச்சு?”
“இன்னும் உயிருடன் தான் இருக்கு. விரைவில் மாற்றம் இருக்கு. அதுக்கு முன்னால அதிகாரிகள் மட்டத்துல பெரிய மாற்றங்களை செய்யப் போறாங்களாம். அமைச்சர்களை தவறாக வழி நடத்தும் அதிகாரிகளின் பட்டியலை எடுத்து வைத்திருக்கிறார்களாம். அவர்கள் மாற்றப்படுவார்கள் என்று தலைமைச் செயலகத்தில் கிசுகிசுக்கிறார்கள்” என்று கிளம்பினால் ரகசியா.