உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் 5 முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரென்று பார்ப்போம்…
சுப்மான் கில் (இந்தியா)
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு 1,000 ரன்களைக் கடந்த ஒரே வீரர் சுப்மான் கில். இந்த ஆண்டில் இதுவரை ஆடிய 20 போட்டிகளில் மட்டும் 1,230 ரன்களைக் குவித்திருக்கிறார். அதனாலேயே இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அனைவராலும் கவனிக்கப்படும் நட்சத்திர வீரராக மாறியிருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ள வீரர் சுப்மான் கில் என்று கிரிக்கெட் பண்டிட்கள் பலரும் கணித்திருக்கிறார்கள்.
இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சுப்மான் கில், ஒரு இரட்டை சதம், 6 சதங்களுடன் சேர்த்து மொத்தமாக 1,917 ரன்களைக் குவித்துள்ளார். சராசரியாக 66.1 ரன்களை கொண்டுள்ள இவரது ஸ்டிரைக் ரேட் 102.84. ஒருநாள் போட்டிகளில் இப்போது 2-வது சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் சுப்மான் கில், இன்னும் ஒரு அரை சதத்தை அடித்தால் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. கில் தனது பேட்டிங் ஃபார்மை இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்தால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை நம் கையில் கோப்பை கிடைப்பது நிச்சயம்.
பாபர் ஆசம் (பாகிஸ்தான்)
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இப்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேன் இவர்தான். பேட்டிங்கில் பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கையான இவர், 108 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5,419 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி, ரோஹித் போன்று அதிரடியாக ரன்களைக் குவிப்பது இவரது ஸ்டைல் இல்லை. ராகுல் திராவிட்டைப் போல் நின்று நிதானமாகத்தான் அடிப்பார். ஸ்டிரைக் ரேட் 89-தான். ஆனால் அத்தனை சீக்கிரம் அவரை அவுட் ஆக்க முடியாது. அவரது இந்த ஆர்ப்பாட்டமில்லாத பேட்டிங்தான் கடந்த காலங்களில் பல போட்டிகளில் பாகிஸ்தானை கரை சேர்த்திருக்கிறது.
இந்திய ஆடுகளங்கள் பலவும் பாகிஸ்தான் ஆடுகளங்களைப் போல இருக்கும் என்பதால் இந்த உலகக் கோப்பையில் இவரது தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியும் இதைத்தான் எதிர்பார்க்கிறது.
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
கடந்த முறை இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றதில் பென் ஸ்டோக்ஸின் பங்கு மிகப்பெரியது. இடைக்காலத்தில் ஒருநாள் போட்டியில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு காலகட்டத்தில் ஒருநாள் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் உலகக் கோப்பை நெருங்கும் சமயத்தில் ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்று மீண்டும் ஆட வந்திருக்கிறார். அப்படி ஆடவந்த முதல் தொடரிலேயே ஒரே இன்னிங்ஸில் 182 ரன்களைக் குவித்து எல்லோருக்கும் பயம்காட்டி இருக்கிறார்.
40.50 ரன்களை சராசரியாகவும், 96 ரன்களுக்கு மேல் ஸ்டிரைக் ரேட்டையும் வைத்திருக்கும் பென் ஸ்டோக்ஸ், இந்த உலகக் கோப்பை தொடரின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பார் என்று கணிக்கப்படுகிறது. பேட்டிங்குடன் பந்துவீச்சிலும் சிறந்தவராக இருப்பதால், தனி நபராக இங்கிலாந்தை கரைசேர்க்கும் ஆற்றல் வாய்ந்தவராக இருக்கிறார்.
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
நியூஸிலாந்து அணியை தாங்கி நிற்கும் ஒற்ரைத்தூண் என்று கேன் வில்லியம்சனைச் சொல்லலாம். 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6,555 ரன்களைக் குவித்துள்ள கேன் வில்லியம்சன், பல போட்டிகளில் தனி நபராக இருந்து நியூஸிலாந்தைக் காத்துள்ளார். ஆனால் இப்போது முட்டி வலி காரணமாக முதல் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அடுத்த போட்டிகளில் அவர் நிச்சயம் ஆடுவார் என்று நம்பியிருக்கிறது நியூஸிலாந்து அணி.
ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடிவருதால், இங்குள்ள பிட்ச்கள் வில்லியம்சனுக்கு அத்துப்படி. அதனால் அவரது ஐபிஎல் அனுபவங்களை நம்பி களம் இறங்குகிறது நியூஸிலாந்து.
டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)
ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் அதிரடியான ஒரு தொடக்க ஆட்டக்காரர் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்ப்பார். அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியா நம்பி இருக்கும் தொடக்க ஆட்டக்கார்ர் டிராவிஸ் ஹெட்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா. இந்த வெற்றிக்கு பின்னணியாக இருந்தவர் டிராவிஸ் ஹெட். அதே ஃபார்மை உலகக் கோப்பையிலும் அவர் தொடர்வார் என்று ஆஸ்திரேலிய அணி நம்பியிருக்கிறது.