நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவுக்கு சாதகமாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. பாஜக கூட்டணி 330 முதல் 400 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்று இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆந்திர சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இப்போது ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி மாநில முதல்வராக இருக்கிறார். இந்த தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியை எதிர்த்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியும் இங்கு களத்தில் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இங்கு தெலுங்கு தேசம் – பாஜக – ஜன சேனா ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் பாஜக – தெலுங்கு தேசம் – ஜன சேனா கூட்டணி 98 முதல் 120 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 77 இடங்கள் வரை கிடைக்கும் என்று அதில் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் ஆரா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 104 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. பாஜக – தெலுங்கு தேசம் – ஜன சேனா கூட்டணிக்கு இந்த கருத்துக் கணிப்பு 71 முதல் 81 இடங்கள் மட்டுமே வழங்கியுள்ளன.
சாணக்யா நிறுவனம் நடத்தியுள்ள மற்ரொரு கருத்துக் கணிப்பில் பாஜக – தெலுங்கு தேசம் – ஜன சேனா கூட்டணி 110 முதல் 120 தொகுதிகள் வரை வெல்லும் என்று கூறுகிறது. இந்த நிறுவனம் நட்த்திய கருத்துக் கணிப்பில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 65 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
The Centre for Politics and Policy Studies என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 95 முதல் 105 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. பாஜக – தெலுங்கு தேசம் – ஜன சேனா கூட்டணிக்கு இந்த கருத்துக் கணிப்பு 75 முதல் 85 இடங்கள் மட்டுமே வழங்கியுள்ளன. இந்த அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் எதையும் வழங்கவில்லை.
ஒவ்வொரு கருத்துக் கணிப்பும் ஒவ்வொரு வகையான முடிவுகளை தெரிவிப்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் ஆந்திர மக்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.