No menu items!

இதுவும் கடந்து போகும் – எதை சொல்கிறார் ஹர்த்திக் பாண்டியா?

இதுவும் கடந்து போகும் – எதை சொல்கிறார் ஹர்த்திக் பாண்டியா?

இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ராக்கெட் வேகத்தில் உச்சத்துக்கு போனவர் ஹர்த்திக் பாண்டியா. சிறுவயதில் கஷ்டப்பட்டு முன்னேறிய ஹர்த்திக் பாண்டியா, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2016-ல் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் ஆல்ரவுண்ட் திறமையால் மிகக் குறுகிய காலத்திலேயே கேப்டனாக உயர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகி ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றினார்.

ஹர்த்திக்கின் இந்த அசுர வேக வளர்ச்சிக்கு கடந்த 2023-ம் ஆண்டு திடீரென்று பிரேக் விழுந்தது. ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரின் நடுவில் காயத்தால் வெளியேறினார் ஹர்த்திக் பாண்டியா. அதிலிருந்து அவர் மீள நீண்ட நாட்கள் அனது. இந்த சூழலில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தார். இது குஜராத் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஹர்த்திக்கை கேப்டனாக்கி அழகுபார்த்த குஜராத்துக்கு அவர் துரோகம் செய்துவிட்டதாக குஜராத் ரசிகர்கள் கருதினார்கள்.

குஜராத்தில்தான் இப்படி என்றால் ஹர்த்திக் திரும்பி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை முழுமையாக ஏற்கவில்லை. அதிலும் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, அவருக்கு பதில் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கியதை மும்பை ரசிகர்களால் கொஞ்சம்கூட ஜீரணிக்க முடியவில்லை. ஜூனியரான ஹர்த்திக் பாண்டியா, சீனியரான ரோஹித் சர்மாவை கட்டுப்படுத்துவதா என்று கோபப்பட்டனர்.

ஹர்த்திக் மீதான கோபத்தை தூண்டும் வகையில்தான் இந்த ஐபிஎல்லில் அவரது ஆட்டமும் இருந்தது. பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன்ஷிப்பிலும் இவர் சில தவறுகளை செய்ய, உள்ளூர் ரசிகர்களே இவருக்கு எதிராக மைதானத்தில் கோஷம் எழுப்பினர். ஹர்த்திக்கின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஐபிஎல்லில் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்த்து.

கிரிக்கெட் உலகில்தான் இப்படியென்றால், தனிப்பட்ட வாழ்விலும் ஹர்த்திக் பாண்டியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. அவரும் மனைவி நடாஷாவும் விவாகரத்து செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு இருவர் தரப்பிலும் இதுவரை உறுதியான பதில் ஏதும் வரவில்லை. ஆனால் அவர்களின் குழந்தையான அகஸ்தியா, ஹர்த்திகிகின் சகோதரருடன் இருப்பதாக மட்டும் செய்திகள் வருகின்றன.

ஐபிஎல்லில் சொதப்பினாலும், முந்தைய தொடர்களில் இந்தியாவுக்காக சிறப்பாக ஆடியதால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஹர்த்திக் பாண்டியா. இந்த சூழலில் பிரபல விளையாட்டு பத்திரிகையான ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கு ஹர்த்திக் பாண்டியா பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியில் ஹர்த்திக் பாண்டியா கூறியிருப்பதாவது:

’இதுவும் கடந்து போகும்’ என்ற மூத்தோர் மொழியை நான் நம்புகிறேன். இதுவரை நடந்ததைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என் ஆட்டத்தின் மீது மட்டும் தீவிர கவனம் செலுத்தினால் மீண்டும் பழைய ஃபார்முக்கு வரமுடியும் என்று உறுதியாக நம்புகிறேன். வாழ்க்கை ஒரு போர்க்களம் போன்றது. அதில் சிக்கலான தருணங்கள் அடிக்கடி வரும். அந்த சிக்கலான தருணங்களில் போர்க்களத்தை விட்டு ஓடக்கூடாது. கடுமையாக போராடவேண்டும் என்பதுதான் என் கொள்கை.

எனக்கு கஷ்டங்கள் வரும்போதெல்லாம் நான் 16 வயதில் இருந்த ஹர்த்திக் பாண்டியாவை நினைத்துக்கொள்வேன். 16 வயதில் இருந்த ஹர்த்திக் பாண்டியாவுக்கு வசதிகள் ஏதும் இருந்ததில்லை. இருந்தபோதிலும் கடுமையாக போராடி வெற்றிகளைச் சுவைத்தான். அந்த 16 வயது ஹர்த்திக் பாண்டியாவோடு ஒப்பிடும்போது இந்த 30 வயது ஹர்த்திக் பாண்டியாவுக்கு பல ப்ளஸ் பாயிண்டுகள் உள்ளன. பல விஷயங்கள் சாதகமாக உள்ளன. அதனால் கண்டிப்பாக மீண்டு வருவேன்.

இவ்வாறு ஹர்த்திக் பாண்டியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...