No menu items!

யாரெல்லாம் Miss? – World Cup Cricket

யாரெல்லாம் Miss? – World Cup Cricket

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. இந்த தொடருக்காக அணிகள் பலவும் வேகமாக தயாராகிக்கொண்டு இருக்க, இந்த கிரிக்கெட் திருவிழாவில் வாய்ப்பை இழந்த வீர்ர்கள் சிலரைப் பார்ப்போம்.

ரிஷப் பந்த் (இந்தியா)

தோனிக்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். தன் அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த ரிஷப் பந்த், ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருந்ததால் ரோஹித்துக்கு அடுத்து இந்தியாவின் கேப்டனாவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.

இந்த உலகக் கோப்பைக்கு இந்தியாவின் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், யார் கண் பட்டதோ, சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் ரிஷப் பந்த். காயத்தில் இருந்து மீண்டு இப்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள இவரது சேவையை இந்த உலகக் கோப்பையில் இழக்கிறோம். ரிஷப் பந்த் அணியில் இல்லாததால், வலுவான இடதுகை பேட்ஸ்மேன் இல்லை என்ற குறை இந்தியாவை பெரிதாக பாதிக்கிறது.

ஜேசன் ராய் (இங்கிலாந்து)

இங்கிலாந்து அணி கடந்த முறை உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீரர் ஜேசன் ராய். கடந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்த ஜேசன் ராய் எடுத்த மொத்த ரன்கள் 443. இந்த உலகக் கோப்பையில் 63.28 ரன்களை சராசரியாகவும், 115.36-ஐ ஸ்டிரைக் ரேட்டாகவும் வைத்திருந்த ஜேசன் ராய், பல அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

ஆனால் அப்படி முக்கிய வீர்ராக இருந்த ஜேசன் ராயை இந்த உலகக் கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கவில்லை இங்கிலாந்து தேர்வுக்குழு. சில போட்டிகளில் சிறப்பாக ஆடாததால் அவருக்கு பதிலாக ஹாரி புரூக் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இருப்பினும் கடைசிநேர மாற்றங்களின்போது தனக்கு இந்த உலகக் கோப்பையில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் ஜேசன் ராய்.

நசீம் ஷா (பாகிஸ்தான்)

இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் நம்பியிருந்த துருப்புச் சீட்டு நசீம் ஷா. 20 வயதே ஆன இவரது அசுர வேக பந்து வீச்சு, பல பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை எகிர வைத்துள்ளது. 14 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள இந்த இளம் சிங்கம் மொத்தம் 32 விக்கெட்களை சாய்த்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில்கூட இந்தியாவின் ரோஹித் சர்மா – கில் கூட்டணியின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினார்.

ஆனால் இந்த தொடரில் அடுத்த ஆட்டத்தை இந்தியாவுடன் ஆடிக்கொண்டு இருக்கும்போதே காயமடைந்தார், நசீம் ஷா இல்லாததால் இப்போது ஷாஹின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் ஆகியோரை மட்டுமே நம்பி உலகக் கோப்பையில் களம் இறங்குகிறது பாகிஸ்தான்.

டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் டிராவிஸ் ஹெட்.

58 ஒருநாள் போட்டிகளில் 2,064 ரன்களைக் குவித்துள்ள இவரது சராசரி ரன்கள் 40.47. ஸ்டிரைக் ரேட் 99 ரன்கள். எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருக்கும் நேரத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின்போது இவரது கையில் பிராக்சர் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் தற்போது ஓய்வில் இருக்கும் அவரை உலகக் கோப்பைக்கான முதல் கட்ட அணியில் சேர்க்கவில்லை ஆஸ்திரேலியா.

சஞ்சு சாம்சன் (இந்தியா)

இந்திய கிரிக்கெட் வீர்ர்களில் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சஞ்சு சாம்சனைச் சொல்லலாம். இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவரது சராசரி ரன்கள் 55.7. ஆனாலும் இவர்மீது நம்பிக்கை வைக்காமல் விக்கெட் கீப்பிங்குக்கு இஷான் கிஷனையும், கே.எல்.ராகுலையுமே நம்புகிறது இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு.

ஆசிய கோப்பை தொடரின்போது ஸ்ரேயஸ் ஐயருக்கு மாற்று வீர்ராக இவரை கொண்டு சென்றார்கள். ஆனால் ஸ்ரேயர் ஐயர் காயத்தில் இருந்து மீண்டதால், வாய்ப்பு கொடுக்காமலேயே அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். 50 ரன்களுக்கும் கீழ் சராசரி ரன்களை வைத்துள்ள பல வீர்ர்கள் அணியில் இருக்கும்போது, 55 ரன்களுக்கு மேல் வைத்துள்ள இவர் இந்திய அணியில் இல்லாதது அவரது துரதிருஷ்டமா இல்லை அணியின் துரதிருஷ்டமா என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...