இன்றைய நிலையில் உலகில் மிகவும் பாவப்பட்ட பகுதி என்றால் அது பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாதான். சின்னதாய் கோவணம் அளவில் இஸ்ரேலை ஒட்டி இருக்கிறது. இஸ்ரேலால் இறுக்கப்பட்டு மூச்சை விடும் நிலையில் இருக்கிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் பல வருடங்கள் நீண்டது. சமீபத்திய சில வருடங்கள் லேசாய் அமைதி எட்டிப் பார்த்திருந்ததது. அதாவது மாதத்துக்கு சில தாக்குதல்கள் சில மரணங்கள் என்று பழகிப் போன அமைதியாய் மாறியிருந்தது. ஆனால் கடந்த வார பாலஸ்தீன ஹமாஸ் செய்த அதிரடி தாக்குதலில் ஒட்டிக்கொண்டிருந்த அமைதி ஓடிப் போய் விட்டது. இதுவரை இருபுறமும் சேர்த்து நாலாயிரம் பேர் இறந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மிக நீண்ட இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் காசா பகுதி இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் வந்தது 1967ல். அதற்கு முன் அது எகிப்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1967ல் நடந்த 6 நாள் போரில் காசா பகுதியைக் கைப்பற்றியது இஸ்ரேல். 1967லிருந்து 2005 வரை காசா பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பாலஸ்தீனியர்கள் மிக அதிகமாக வாழும் காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் ராண்டும் 2005ல் வெளியேறியது. 2007ல் பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் தீவிர இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்பு யாசர் அராஃபாத்தான் பாலஸ்தீனத்தின் தலைவராக இருந்தார். 2004ல் அவர் மறைவுக்குப் பிறகு ஹமாஸ்க்கு பெரிய வளர்ச்சி. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.
பாலஸ்தீனத்தை ஆட்சி செய்கிறோம் என்ற சொல்லாமே தவிர காசா பகுதி என்பது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போன்றதுதான். இஸ்ரேல் ராணுவத்தினர் உள்ளே இல்லை என்றாலும் எல்லையைச் சுற்றி நின்றுக் கொண்டிருந்தார்கள். 360 சதுர கிலோமீட்டர் பரப்பு. 24 லட்சம் மக்கள். ஒரு பக்கம் மத்திய தரைக்கடல் மற்றொரு பக்கம் எகிப்து. மற்ற இரண்டு பக்கமும் இஸ்ரேல். இதுதான் காசா பகுதியின் அமைப்பு.
இந்தப் பகுதியைதான் இப்போது இஸ்ரேல் முற்றுகையிட்டிருக்கிறது. மக்களை வெளியேறச் சொல்கிறது. வெளியேறும் மக்கள் எங்கே செல்வார்களா? கடலுக்குள்ளா? இஸ்ரேலுக்குள்ளா? எகிப்துக்குள்ளா?. காசாவிலேயே ஒரு மூலைக்கு செல்ல வேண்டும். அதாவது வடக்கு காசாவில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவுக்குள் சென்று பதுங்க வேண்டும்.
ஏற்கனவே அகதி வாழ்க்கையைதான் காசா பகுதி மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கெ எந்தத் தொழிலும் இல்லை. 80 சதவீத மக்களுக்கு வேலை கிடையாது. இஸ்ரேல் நாட்டில் 18 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பணிபுரிகிறார்கள்.
எகிப்தையும் இஸ்ரேலையும் நம்பிதான் அவர்கள் வாழ்க்கை. இஸ்ரேலின் முற்றுகையாலும் தாக்குதலாலும் காசா முடங்கிக் கிடக்கிறது. இப்போது காசா பகுதியில் மின்சாரம் கிடையாது. மருத்துவமனைகள் இயங்க முடியவில்லை. உணவுப் பற்றாக்குறை. பட்டினியிலும் பயத்திலும் மக்கள் காசா நகரத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை பிரச்சினைகள் வரும் என்று தெரிந்தும் ஹமாஸ் ஏன் இஸ்ரேலைத கொடூரமாக தாக்கியது?
அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
மிக முக்கியமாக இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினை கடந்த சில வருடங்களாக உலகின் கவனத்திலிருந்து விலகிக் கொண்டே வருகிறது. உலக அளவில் இஸ்ரேலின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சமீப காலமாய் அரபு நாடுகளுடன் இஸ்ரேல் பல ஒப்பந்தங்களை செய்து வருகிறது. பாலஸ்தீனர்களின் பலமே அரபு நாடுகளின் நட்பும் அன்பும்தான். அவை இஸ்ரேலுடன் கைகோர்ப்பதை ஹமாஸ் விரும்பவில்லை.
உள்நாட்டில் குழப்பங்கள் இல்லாமல் எல்லாம் சுமூகமாய் சென்று கொண்டிருப்பதால்தான் இஸ்ரேலால் முன்னேற முடிகிறது, அதன் சிந்தனையை மாற்றினால்தான் அதன் ஏறும் பலத்தை குறைக்க முடியும் என்று ஹமாஸ் கருதுகிறது.
போர் இப்போது தீவிரமடைந்து மக்கள் பாதிக்கப்பட்டாலும் சீக்கிரமே உலக நாடுகள் தலையிட்டு போரை நிறுத்திவிடும் என்று ஹமாஸ் நம்புகிறது.
இப்படி பல கணக்குகள்தான் ஹமாஸ் அட்டாக்கின் அடிப்படை.