சித்தா ( Chithha – தமிழ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் சித்தா. அருண்குமாரின் இயக்கத்தில் சித்தார்த் நடித்து கடந்த மாதம் திரைக்கு வந்த சித்தா, இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
அண்ணன் உயிரிழந்த பிறகு, அண்ணிக்கும், அவரது பெண் குழந்தைக்கும் ஆதரவாக இருந்து வருகிறார் சித்தார்த். அண்ணன் மகளுக்கு சித்தார்த்தான் எல்லாம். சித்தா (சித்தப்பா) என்று அழைத்து அவருடனேயே சுற்றுகிறார் அண்ணன் மகள். இந்த சூழலில் அவளது தோழி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார். இந்த பழி சித்தார்த் மீது விழுகிறது. அதிலிருந்து சித்தார்த் மீள்வதற்கு முன் அவரது அண்ணன் மகளையும் ஒருவர் கடத்திச் செல்கிறார். அண்ணன் மகளை சித்தார்த் மீட்டாரா? கடத்தியவனை என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கதை.
செண்டிமெண்ட், க்ரைம் ஆகிய இரண்டும் கலந்த கலவையாக இப்படம் இருக்கிறது.
பகவந்த் கேசரி ( Bhagavanth Kesari – தெலுங்கு) – அமேசான் ப்ரைம்
3 மணி நேரத்துக்கு உங்கள் கவலைகளை மறக்க நினைக்கிறீர்களா? பரபரப்பான ஆக்ஷன் படத்தை பார்க்க வேண்டும், அதேசமயம் அந்த படம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த வார இறுதியில் நீங்கள் ஓடிடியில் அவசியம் பார்த்தாக வேண்டிய படம் பகவந்த் கேசரி.
விஜய்யின் லியோ படம் வெளியானபோது அதற்கு டஃப் கொடுத்து ஆந்திர பூமியில் ரிலீஸான படம்தான் பகவந்த் கேசரி. இந்த படத்தில் பாலையாதான் பகவந்த் கேசரி. பொய்யான குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் பாலையா (பகவந்த் கேசரி), சிறையில் இருந்து விடுதலையாக உதவுகிறார் காவல்துறை அதிகாரியான சரத்குமார். பின்னர் ஒரு விபத்தில் சரத்குமார் இறக்கிறார். அதன் பிறகு சரத்குமாரின் விருப்பப்படி அவரது மகளை ராணுவ அதிகாரியாக்க பாடுபடுகிறார் பாலையா. அந்த நேரம் பார்த்து முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் பார்த்து பயப்படும் ஒரு தொழிலதிபரால் அந்த பெண்ணுக்கு ஆபத்து வர வெகுண்டு எழுகிறார். அதன்பிறகு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
இதில் காமெடி எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆக்ஷன் காட்சிகள்தான் காமெடி. ஒரே ஒரு வாளியை வைத்துக்கொண்டு சுமார் 50 பேரை பாலையா பிளப்பது, காஸ் சிலிண்டரை வைத்து நூற்றுக்கணக்கானவர்களை கொல்வது என்று பாலையா ஹீரோயிசம் காட்டும் காட்சிகள் அனைத்தும் நமக்கு நிச்சயம் கிச்சுகிச்சு மூட்டும்.
சத்திய சோதனை ( Sathiya Sothanai – தமிழ்) – சோனி லைவ்
முந்தைய படத்தில் இருந்து (பகவந்த் கேசரி) முற்றிலும் மாறுபட்ட, இயல்பான கதைக்களம் கொண்ட படம் சத்திய சோதனை.
வெட்டவெளியில் ஒருவர் 4 பேரால் வெட்டிக் கொல்லப்படுகிறார். அந்த வழியில் செல்லும் பிரேம்ஜி, வெயிலில் கிடக்கும் உடலை ஒரு ஓரமாய் நிழலில் போட்டுவிட்டு தகவல் சொல்ல காவல் நிலையம் செல்கிறார். கொல்லப்பட்டவரின் உடலில் கிடந்த வாட்ச், 1 சவரன் செயின், செல்போன் ஆகியவற்றையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார்.
இந்த நேரத்தில் கொலை செய்தவர்கள் பக்கத்து ஊர் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைகிறார்கள். தாங்கள் கொன்றவரின் உடலில் 30 சவரன் நகை இருந்த்தாக அவர்கள் சொல்கிறார்கள். அந்த நகையை பிரேம்ஜிதான் திருடியிருப்பார் என்று அவரை கஸ்ட்டியில் எடுத்து விசாரிக்கிறார்கள் போலீஸார்.
அந்த நகையை திருடியது யார்? பிரேம்ஜிக்கு என்ன நேர்ந்தது என்பதை இயல்பான நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.
மிஷன் ராணிகஞ்ச் (Mission Raniganj – இந்தி) – நெட்பிளிக்ஸ்
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் 17 நாட்கள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டனர். இதே போன்றதொரு சம்பவம் 1989-ம் ஆண்டும் நடந்தது. அந்த ஆண்டில் மேற்கு வங்கத்தில் இருந்த ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் 71 பேர் சிக்கிக்கொண்டனர். இதில் 6 பேர் பலியாக, 65 பேர் வெற்றிகரமாக சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டனர். அந்த உணமை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிஷன் ராணிகஞ்ச் படத்தை எடுத்துள்ளனர்.
இதில் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களைக் காப்பாற்றும் பொறியாளராக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருடன் பரிணீதி சோப்ரா, ரவி கிஷன், பவன் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரபரப்பான சர்வைவல் ஸ்டோரியை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
தமிழில் மொழிமாற்றம் செய்யாமல் இந்தியில் மட்டும் இப்படத்தை வெளியிட்டிருப்பதுதான் ஒரு குறை.