No menu items!

வாலிட்டி 69: கலைஞர் பேனா – சில சுவாரசிய தகவல்கள்

வாலிட்டி 69: கலைஞர் பேனா – சில சுவாரசிய தகவல்கள்

கலைஞர் கருணாநிதி ஒரு அதிதீவிர பேனா காதலர். எனவே, அதனை போற்றும் வகையில்,, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் அருகே நடுக்கடலில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவு சின்னத்தை மக்கள் பார்வையிட 650 மீட்டர் தூரத்திற்கு இரும்பு பாலம் அமைக்கவும், இந்த பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய பேனாக்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் இங்கே. தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு வரலாற்றை எழுதிய பேனாவின் வரலாறு இது.

  • சென்னை பாரிமுனை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உயர் நீதிமன்றம் எதிரே உள்ள ஜெம் & கோ பேனா கடை, கலைஞர் வழக்கமாக பேனா வாங்கும் இரண்டு கடைகளில் ஒன்று. 1920ஆம் ஆண்டு இந்த கடை தொடங்கப்பட்டது. மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிரதாப்குமார் இப்போதும் இந்தக் கடையை அதே பாரம்பரியம் மாறாமல் நிர்வகித்து வருகிறார்.
  • கலைஞர் வழக்கமாக பேனா வாங்கும் இன்னொரு கடை, மயிலாப்பூரில் உள்ள தாஜ் பென்ஸ். இந்த கடை 1947ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கலைஞர் மட்டுமல்லாமல் நடிகர் நாகேஷ், வி.எஸ். ராகவன், இசையமைப்பாளர் தேவா மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என பல விஐபிகள் இந்த கடையின் நிரந்த வாடிக்கையாளர்கள். நடிகர் நாகேஷ், தன் கடைசி காலம் வரை இந்த கடைக்கு நேரில் வந்து பேனா வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த கடையை இப்போது இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த முகமது மூசா நடத்தி வருகிறார்.
  • திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆரம்ப காலத்தில் இருந்து 1990கள் வரை ‘வாலிட்டி 69’ (Wality 69) என்ற வகை மாடல் பேனாவைத்தான் கலைஞர் பயன்படுத்தினார். ‘வாலிட்டி 69’ வகை மாடல் பேனாதான் தற்போது கலைஞர் நினைவாக அமைக்கப்படவும் உள்ளது. மும்பையில் இருக்கும் பழமையான ஏர்மெயில் பேனா கம்பெனியின் தயாரிப்பு இது. 1951இல் இந்த கம்பெனி தொடங்கப்பட்டது.
  • ‘வாலிட்டி 69’ மாடல் பேனாவின் மேல்மூடி மட்டும் பல நிறங்களில் வரும். கீழ்ப் பகுதி, எவ்வளவு மை உள்ளது என்பதை பார்க்கும் வகையில் கண்ணாடி மாதிரி டிரான்ஸ்பேரன்டாக இருக்கும். இந்த பேனாவின் நிப் முனையில் சிறிய அளவு இரிடியம் இருக்கும். நல்ல அடர்த்தியும் கனமும் கொண்டது. 15 செமீ நீளம் உடையது, 21.7 கிராம் எடை கொண்டது.
  • ஏர்மெயில் பேனா கம்பெனி, ‘வாலிட்டி 69’ மாடலில் நீண்ட காலம் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் இருந்தார்கள். ஆனால், இப்போது மாற்றங்கள் செய்து புது மாடலை வெளியிட்டுள்ளார்கள். 1950களில் வெளியான ஆரம்ப காலத்தில் 40 – 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது; இப்போது விலை ரூ. 500. ஆன்லைனில் கிடைக்கிறது. ஒரு பேனா குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு காலம் வரை உழைக்கக்கூடியது.
  • ‘வாலிட்டி 69’  பேனாவில் நிறைய மை பிடிக்கும். பேனாவின் முள் அவ்வளவு அழகாகவும் எளிதாகவும் தாளில் எழுதிச் செல்லக்கூடியது. ‘ஹீரோ’ பேனா உட்பட மற்ற வகை பேனாக்கள் சில தாள்களில் எழுதும் போது காகிதத்தைக் கிழிக்கும் அல்லது காகிதத்துண்டு அதில் ஒட்டிக் கொள்ளும். ‘வாலிட்டி 69’ மாடலில் அப்படி ஆனதாக இதுவரை யாரும் தெரிவித்ததில்லை.
  • ‘வாலிட்டி 69’ பேனாவால் எழுதும்போது பேனா மற்றும் பேப்பருக்கு இடையே ஒரு வகையான ஃபிரிக்‌ஷன் இருக்கும். கை விரல்களுக்கு ஒரு பிடிமானம் கிடைப்பதால் பேப்பரில் எழுதும்போது கையெழுத்தும் அழகாக இருக்கும். பேப்பரில் அச்சு பதியாது. எழுத்துக்களைப் பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
  • ‘வாலிட்டி 69’இன் பிடித்து எழுதும் பகுதி தடிமனாக இருப்பதால் நீண்ட நேரம் எழுதினாலும் கை வலிக்காது. மற்ற பேனாக்களுடன் ஒப்பிடும்போது இந்த வகை பேனாவால் வேகமாகவும் எழுத முடியும். பெரும்பாலும் அதிகம் எழுதுபவர்கள் அக்காலத்தில் இதுபோன்ற பேனாக்களைத்தான் விரும்பியிருக்கிறார்கள். கலைஞரும் நிறைய எழுதக்கூடியவர் என்பதால் இந்த பேனாவை தேர்வு செய்துள்ளார்.

‘வாலிட்டி 69’ பேனாவில் எழுதுவதை தான் எவ்வளவு விரும்பினார் என்பதை கலைஞர் நண்பர்கள் பலரிடம் கூறியுள்ளார். அதை அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். கலைஞர் தெளிவுடன் எழுதக்கூடியவர்; தனது ஸ்கிரிப்ட் எந்த மாற்றமும் அடித்தல் திருத்தலும் இல்லாமல் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவாராம். இந்த பேனாவில் எழுதும்போது தனது எண்ணங்கள் இயல்பாக ஒரு புதிய மனதுடன் பாயும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

  • கலைஞர் எப்போதும் மற்ற நிற மைகளை விட கருப்பு நிறத்தையே தேர்வு செய்துள்ளார். ‘முரசொலி’க்காக ‘வாலிட்டி 69’ பேனா மூலமே அவர் கேலி சித்திரங்களையும் வரைந்துள்ளார்.
  • கலைஞர் பொதுவாகக் கட்டுரைகள், திரைக்கதைகள் எழுதுவதற்கு மிகக் குறைந்த நேரத்தையே எடுத்துக்கொள்பவர். ‘பொன்னர் சங்கர்’ வரலாற்று நாவலை எழுதுவதற்கு சிறிது நேரமே எடுத்துக்கொண்டுள்ளார். அந்தளவு வேகமாக எழுதுவார்.
  • பொதுவாக நிறைய எழுதுபவர்களுக்கு மூளையின் வேகத்துக்கு பேனா ஈடுகொடுக்க வேண்டும். இடையில் பேனா சிக்கல் செய்தால் எழுத்து வேகம், சிந்தனை பாதிக்கப்படும். அந்த வகையில் ‘வாலிட்டி 69’  எங்கேயும் நிற்காமல் கலைஞரின் சிந்தனை வேகத்துக்கு ஒத்துழைத்ததால் தொடர்ந்து நீண்ட காலம் அதனையே பயன்படுத்தி வந்தார். இடையில் வேறு மாடல்களுக்கு மாறவே இல்லை.
  • கலைஞரின் கதை, வசனம், ‘உடன்பிறப்பே…’ என தொடங்கும் கடிதங்கள் உட்பட அரை நூற்றாண்டு காலம் அவருடைய அத்தனை எழுத்துகளையும் பதிவுசெய்த பெருமை ‘வாலிட்டி 69’  பேனாவையே சேரும்.
  • 1990களில் பேனாவைப் பிடிப்பது கடினமாக இருந்ததால் கலைஞர் கணினியில் தட்டச்சு செய்ய கற்றுக்கொள்ள முயன்றார். ஆனால், அதில் அவர் எதிர்பார்த்த வேகத்தை அடைய முடியவில்லை. எனவே, தொடர்ந்து ‘வாலிட்டி 69’ மாடல் பேனாவையே பயன்படுத்தி வந்தார். மிக பிற்காலத்தில் ‘பால்-பாயின்ட்’ பேனாக்களை தேர்ந்தெடுத்தார்.
  • கலைஞருக்காக வாங்கினாலும் அறிவாலயத்துக்கு என்று சொல்லித்தான் ஜெம் & கோ பேனா கடையில் நீண்ட காலமாக பேனா வாங்கி வந்திருக்கிறார்கள். பின்னாட்களில் செய்தித்தாள்களில் கலைஞர் புகைப்படம் பார்த்துதான் ஜெம் & கோ கடைக்காரர்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வருபவர்கள் கலைஞருக்குதான் பேனா வாங்கி செல்கிறார்கள் என்பதே தெரியுமாம். இப்போதும், “கலைஞர் பேனா இருக்கா?” எனக் கேட்டு இந்த கடைக்கு வருபவர்கள் இருக்கிறார்களாம். உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரும்கூட இந்தக் கடையில்தான் பேனா வாங்குவார்களாம். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் இந்த கடையில் இருந்துதான் பேனா வாங்குகிறார்களாம்.

கலைஞர் தினமும் காலையில் எழுந்ததும் முதலில் தேடுவது பேனாவைத்தான். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001 ஜூன் 30 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டபோது அத்தனை களேபரங்களுக்கும் நடுவே முதலில் பேனாவைத்தான் எடுத்து பாக்கெட்டில் சொருகிக் கொண்டிருக்கிறார். இரண்டாவதாகத்தான் வாட்சை எடுத்து அணிந்துள்ளார். கலைஞர் கைது புகைப்படங்களில் அவரது சட்டைப்பையில் இந்த உருளையான பேனா அழுத்தமாக அமர்ந்திருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

  • கே.எச்.எம். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான டாக்டர் கலாநிதி, 1976ஆம் ஆண்டு முதல் கலைஞருக்கு குடும்ப மருத்துவராக இருந்துள்ளார். அப்போது, பச்சை மற்றும் நீல மை நிரப்பப்பட்ட பேனாவினை ஜெம் & கோ பேனா கடையில் இருந்து வாங்கி கலைஞருக்கு பரிசளித்துள்ளார். அந்த பேனாவை கலைஞர் 1991ஆம் ஆண்டு வரை பயன்படுத்தியதாக டாக்டர் கலாநிதி பதிவு செய்துள்ளார். கலைஞரும் நிறைய பேருக்கு ‘வாலிட்டி 69’ மாடல் பேனாவை வாங்கி அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
  • கலைஞர் இறுதி ஊர்வலத்தின்போது அவருடன் அவர் பிரியத்துக்குரிய பொருள்கள் உடனிருக்க பேனா மட்டும் தவறி இருந்தது. இதை கவனித்த அவருடைய பேரன் ஆதித்யா, அங்கிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேனாவைக் கேட்டு வாங்கி, “தாத்தாவின் அடையாளம் பேனா. அது எப்போதும் அவருடன் இருக்க வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து கடைசியாக பேனாவும் கலைஞரிடம் சேர்க்கப்பட்டது.
  • தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பதவியேற்ற முதல்நாள் அதிரடியாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது அவர் பயன்படுத்திய பேனா கலைஞர் பயன்படுத்திய ‘வாலிட்டி 69T’ மாடல் பேனா என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...