ஒரு சின்ன முதலாளிக்கு நீண்ட நாள் எரிச்சல். தான் நிர்வகிக்கும் பத்திரிகையின் செய்தியாளர்கள் கவர் வாங்குகிறார்களோ என்ற சந்தேக எரிச்சல்.
அவருக்கு எப்போதும் வினோத வித்தியாச தீர்வுகள் மனதில் வரும்.
அப்படி வந்த தீர்வுகளில் ஒன்று. கவர் கொடுக்கும் சினிமாக்காரரிடம் கவர் வாங்கும் செய்தியாளர் சென்று ஏன் கவர் கொடுக்கிறீர்கள் என்று கேட்க வைப்பது.
இந்த விசித்திர தீர்வு ஒரு செய்தியாளரிடம் கொடுக்கப்பட்டது.
செய்தியாளர்களுக்கு அதிகம் கவர் கொடுக்கும் விஜயகாந்தை (அப்படியொரு பார்வை அப்போது உண்டு) சென்று இந்தக் கேள்வியை கேட்க வேண்டும். அவர் சொல்லும் பதிலை செய்தியாக எழுதித் தர வேண்டும். இதுதான் அசைன்மெண்ட்.
விஜயகாந்த் விஜிபியில் ஷூட்டிங்கில் இருந்தார்.
நம்ம நிருபர் அங்கே சென்றார். வழக்கம் போல் விருந்தோம்பல்.
‘என்ன இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க..வீட்டுக்கே வந்திருக்கலாமே..”
“இல்ல விஜி, ஒரு சின்ன கேள்வி”. என்று தயங்கியிருக்கிறார். நம்ம ஆள் விஜயகாந்த்தை விஜி என்றுதான் கூப்பிடுவார் கமலை கமல் என்றுதான் கூப்பிடுவார். அது அந்தக் கால சினிமாக்காரர்கள் – செய்தியாளர்கள் நட்பு. இன்று பல செய்தியாளர்கள் சினிமாக்காரர்களை நேரிலே சந்தித்திருக்க மாட்டார்கள். இது வேறு கதை. கவர் மேட்டருக்கு வருவோம்.
”என்ன சொல்லுங்க?”
“நீங்க பத்திரிகைகாரங்களுக்கு நிறைய கவர் கொடுக்கிறீங்களாம். ஏன் கொடுக்கிறீங்க?”
கேள்வியைக் கேட்டதும் விஜயகாந்துக்கு அதிர்ச்சி.
“என்னாச்சு, இப்படிலாம் கேக்குறிங்க?”
நம்ம நிருபர். அலுவலக உத்தரவை கூறியிருக்கிறார்.
“சரி, நீங்க எங்கருந்து வர்றீங்க?”
“நான் வளசரவாக்கத்துலருந்து வர்றேன்”
“எதுல வந்திருக்கிங்க?”
“டிவிஎஸ் ஃபிஃப்டி”
“வளசரவாக்கத்துலருந்து விஜிபி எவ்வளவு தூரம்?”
“20 கிலோமீட்டர் இருக்கும்”
“20 கிலோ மீட்டர் டிவிஎஸ் ஃப்ஃப்டில. சரி, ஆபீஸ்ல பெட்ரோல் காசு தருவாங்களா?”
“இல்லை”
“இவ்வளவு தூரம் வர்றதுக்கு கார் தருவாங்களா?”
“இல்லை”
“இதை எழுதிக் கொடுத்தா எவ்வளவு காசு தருவாங்க”
“300 ரூபாய்”
“மாச சம்பளம் உங்களுக்கு எவ்வளவு?”
“கம்மிதான்”
“சும்மா சொல்லுங்க”
”ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்”
“சொந்த வீடா வாடகை வீடா?”
“வாடகைதான். என்ன விஜி, ஒரு கேள்வி கேட்டேன். நீங்க என்ன இவ்வளவு கேள்வி கேக்குறிங்க”
விஜயகாந்த் கண்கள் சிவந்திருக்கிறது.
“சம்பளமும் நல்லா தரமாட்டாங்க. போயிட்டு வர வண்டியும் கொடுக்க மாட்டாங்க. எழுதிக் கொடுக்கிறதுக்கும் காசு கொடுக்க மாட்டாங்க. ஆனா நீங்க ஏன் கவர் வாங்குறிங்கனு கேப்பாங்களா?”
நிருபர் அமைதி காத்திருக்கிறார்.
“போங்க, போய் உங்க ஆபீஸ்ல நான் சொன்னதை அப்படியே சொல்லுங்க. இதையே எழுதி புக்ல போடுங்க”
அலுவலகம் வந்த நிருபர் விஷயத்தை என்னிடம் தனிப்பட்ட முறையில் ரகசியமாய் சொன்னார்.
விஜயகாந்த் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்று கட்டுரையை முடித்து கொடுத்தார். அந்தக் கட்டுரை பிரசுரமாகவில்லை.