No menu items!

ரஜினி to மம்மூட்டி – விஜயகாந்துக்காக உருகும் நட்சத்திரங்கள்

ரஜினி to மம்மூட்டி – விஜயகாந்துக்காக உருகும் நட்சத்திரங்கள்

நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உட்பட பல்வேறு திரைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அன்பு நண்பர் விஜயகாந்த் இழப்பு மிகப் பெரிய துரதிருஷ்டம். அவர் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர். எப்படியும் உடல்நிலை தேறி வருவார் என எல்லாரும் நினைத்தோம்.  ஆனால் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அவரை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை குறைவாகிவிட்டது. அவர் இன்னும் ஆரோக்கியமாக இருந்து இருந்தால் தமிழ் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்து இருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்து இருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்து இருப்போம்.

இயக்குநர் பார்த்திபன்

பிறப்பு என்பது இரு உயிர்களால் இன்னொன்றை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது. இறப்பு என்பது அவ்வுயிர் இன்னபிற உயிர்களுக்கு உதவி, பிரிகையில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒரு உலகமே அவ்வுயிருக்காக கண்ணீரோடு வழியனுப்புவதன் மூலம் இம்மானுடம் மேன்மையுற விட்டுச் சென்ற செய்தி!

மறைந்த விஜயகாந்த் அவர்களின் மறைவில் ‘மனிதம்’ கற்று கொள்வோம். இதைமட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்நேரத்தில் இச்சோகத்தில் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது மனைவியை மீறி கணவனையே சுமக்கும் தாயாகி, நீண்ட போராட்டத்திற்கு பின் இறக்கி வைத்திருக்கும் ‘பெண் விஜயகாந்த்’ திருமதி பிரேமலதா அவர்கள்! நாலு பக்கம் தண்ணீர். இன்றைய தீவுத்திடல் கண்ணீரோடு-செல்கிறேன்!

இயக்குநர் மிஷ்கின்

ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில், தமிழர்களின் மனதில் ஒரு பெரும் ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிழற் கொடுத்து, கனி கொடுத்து, அருள் கொடுத்து, அன்பு கொடுத்து, இன்று இந்த மண்ணிலே சாய்ந்து விட்டீர்களே ஐயா! நீங்கள் சாய்ந்தாலும் இந்தத் தமிழ் பூமி தவம் என உங்களைச் சுமக்கும். உங்கள் வேர்கள் எங்கள் இதயங்களில் பயணிக்கும், நீங்கள் விட்டுச் சென்ற விழுதுகள் இந்த பூமியில் மரங்களாய் வளரும். சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே உங்களுக்காக ஒரு மாளிகை திறந்திருக்கும்… ஓய்வெடுங்கள் ஐயா! என்றும் சிரித்த உங்கள் கன்னங்களில் நான் முத்தமிடுகிறேன்.

மலையாள நடிகர் மம்முட்டி

விஜயகாந்த் நம்மோடு இல்லை. அவர் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். அவரது இழப்பை திரையுலகினர், திரையுலக ஆர்வலர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் நானும் ஆழமாக உணர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மலையாள நடிகர் மோகன்லால்

சிறந்த நடிகரும்  நேர்மையான அரசியல்வாதியும்  கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இதயஞ்சலியைப் பகிர்கிறேன்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி

நமது புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் இப்போது இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர், வெகுஜன மக்களின் நாயகன், ஒரு பன்முக ஆளுமை மற்றும் ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதி. அவர் நேரடி தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர். எங்களின் அன்பான ‘கேப்டன்’ நம்மை விட்டு வெகு சீக்கிரத்தில் சென்றது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஏராளமான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரு உண்மையான அதிகார மையமாக இருந்தவர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இருக்கும்.

பாலிவுட் நடிகர் சோனு சூட்

“கள்ளழகர்” என்னுடைய முதல் படம். லெஜண்ட் “விஜயகாந்த்” சார் கொடுத்த பரிசு அது. என்னுடைய இந்த ஸ்டில் அவர் கண்ணில்பட்டது. அடுத்த கொஞ்ச நேரத்தில் நான் அவருடன் படப்பிடிப்பில் இருந்தேன். என் கேரியருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் உங்களை மிஸ் செய்வேன். ஆழ்ந்த இரங்கல் கேப்டன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...