No menu items!

கட்சி ஆரம்பித்த விஜய் – திமுக போட்ட உத்தரவு – மிஸ் ரகசியா

கட்சி ஆரம்பித்த விஜய் – திமுக போட்ட உத்தரவு – மிஸ் ரகசியா

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்னபடி ஆபீசுக்குள் எண்ட்ரி ஆனாள் ரகசியா.

“என்ன புதுசா திருக்குறள் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட?”

“உங்களுக்கு இது திருக்குறளா தெரியலாம். ஆனா எங்களுக்கு இது விஜய்ணாவோட குரல். ‘தமிழக வெற்றிக் கழகம்’ங்கிற பேர்ல நடிகர் விஜய் ஆரம்பிச்சிருக்கற கட்சிக்கு இந்த வாசகம்தான் தாரக மந்திரம்.”

“தாரக மந்திரமெல்லாம் ஓகே. இந்த நாடாளுமன்ற தேர்தல்ல விஜய்யோட கட்சி யாரை ஆதரிக்கும்னு ஏதாவது தகவல் இருக்கா?”

“அதான் முன்ன ரஜினி சொன்ன மாதிரியே நாடாளுமன்ற தேர்தலுக்கு வரமாட்டோம்,. சட்டமன்ற தேர்தல்லதான் வருவோம்னு சொல்லிட்டாரே. அதனால இந்த நாடாளுமன்ற தேர்தல்ல யாருக்கும் அவர் ஆதரவு தரமாட்டார். நாடாளுமன்ற தேர்தல்ல யாரோட கை ஓங்குதுன்னு பார்த்து, அதுக்கு ஏத்த மாதிரி சட்டமன்ற தேர்தல்ல அவர் முடிவு எடுப்பார்னு விஜய்யோட தம்பிங்க சொல்றாங்க. அவரோட நகர்வுகளை திமுக உன்னிப்பா கவனிச்சுட்டு வருது. விஜய்யால எதிர்காலத்துல உதயநிதிக்கு பிரச்சினை வராம இருக்க என்ன செய்யறதுன்னு யோசிச்சுட்டு இருக்காங்க.”

“விஜய் அரசியல் பத்தி இன்னும் திமுககாரங்க யாரும் எதுவும் சொல்லலையே?”

“ அதுக்கு காரணம் திமுக தலைமை போட்டிருக்கும் உத்தரவு. விஜய் நம்மளைப் பத்தி ஏதும் விமர்சிக்காத வரைக்கும் நாமும் அவரைப் பத்தி வீணா கமெண்ட் அடிக்க வேணாம்னு கட்சி பேச்சாளர்களுக்கு திமுக மேலிடம் உத்தரவு போட்டிருக்காம். கமல் அரசியல் கட்சி ஆரம்பிச்சபோதும் ஆரம்பத்துல கமலை திமுக விமர்சிக்கல. அதே பாணியை கடைபிடிப்போம்னு சொன்னாங்களாம்”

”விஜய் அரசியல் பத்தி அறிவாலயத்துல என்ன பேச்சு இருக்கு?”

”2024 நாடாளுமன்றத் தேர்தல்ல விஜய் கட்சி போட்டியிடலனாலும் அவங்க யாருக்கு ஓட்டுப் போடுவாங்கன்றதுல திமுகவினருக்கு கவலை இருக்கு. பகிரங்கமா திமுகவை எதிர்க்கலனாலும் விஜய் திமுகவுக்கு எதிரானவர்ன்ற எண்ணம் அவர் ரசிகர்கள்கிட்ட இருக்கு. இது 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு எதிராக இருக்கும்கிற அச்சம் அவங்ககிட்ட இருக்கு”

“ரஜினி, கமல் அரசியலுக்கு வந்த போதும் இப்படிதான் சொன்னாங்க. ஆனா திமுக ஆட்சியை பிடிச்சது. ரஜினி, கமல் மாதிரி ஆகாம இருந்தா சரி.

அதிமுக கூட்டணிக்கு யாரும் வரலனு ஒரு நியூஸ் வருதே..என்ன நிலவரம்?”

“அதிமுக கூட்டணிக்கு கட்சிகளை சேர்க்கிற பொறுப்பை வேலுமணி, சி.வி.சண்முகம்கிட்ட எடப்பாடி கொடுத்திருக்கார். இதுல சி.வி.சண்முகம் பாமககிட்டயும், எஸ்.பி.வேலுமணி தேமுதிககிட்டயும் பேசிட்டு இருக்காராம். கூட்டணிக்காக ராமதாஸ்கிட்ட பேசற எஸ்.பி.வேலுமணி, ‘இப்ப நாம அமைக்கப் போற கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்துதான்’னு சொல்லி இருக்கார்.”

“அப்படின்னா இந்த தேர்தல்ல அதிமுகவோடதான் பாமக கூட்டணி இருக்குமா?”

“பாமக பொதுக்குழு சம்பவங்களை வச்சுப் பார்த்தா அப்படித்தான் தோணுது. பொதுக்குழு கூட்டத்துல பேசின அன்புமணி ராமதாஸ், ‘விஜய்காந்துக்கு பத்மபூஷண் பட்டம் கொடுத்தீங்களே… டாக்டர் ராமதாசுக்கு பாரத் ரத்னா தந்திருக்க வேணாமா’ன்னு கேள்வி எழுப்பி இருக்கார். அதேபோல், ‘டாக்டர் ஐயா ஒரு மாதத்திற்கு முன்பே முதல்வரை சந்திச்சு இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு பற்றி வலியுறுத்தினார் ஆனால் முதல்வர் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை’ன்னு திமுகவையும் விமர்சிச்சிருக்கார். இந்த கூட்டத்துல அதிமுகவை மட்டும் விமர்சிக்கலை. இதையெல்லாம் வச்சு பார்த்தா அவங்களோட ரூட் அதிமுக பக்கம் போகறது தெளிவா தெரியுது.”

“தேமுதிக நிலை என்ன?”

”பிரேமலதா, சுதீஷ்கிட்ட எஸ்.பி.வேலுமணி பேசிட்டு இருக்கார். விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 சீட் வேணும். ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் வேணும்னு பிரேமலதா சொல்லி இருக்காங்களாம்.”

“அதுக்கு அதிமுக பதில் என்ன?”

”வாங்க பாத்துக்கலாம்னு சொல்லியிருக்காங்க. இப்போதைக்கு கூட்டணிக்கு யாராவது வந்தா போதும்னுதான் இருக்காங்க. தேமுதிக மட்டும் இல்லாம இல்லாம டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், ஜி.கே.வாசன் கிட்டயும் பேசிட்டு இருக்காங்க.”

“ஜி.கே.வாசன் பாஜக கூடதானே நெருக்கமா இருக்கார்.”

“வாசனோட வீக் பாயிண்ட் எம்.பி பதவி. ஜி.கே.வாசனோட ராஜ்யசபா எம்.பி. பதவி இன்னும் சில காலத்துல முடியப் போகுது. திரும்பவும் இங்க இருந்து ராஜ்யசபா எம்பி ஆகணும்னா அவருக்கு அதிமுகவோட தயவு தேவை.”

“பாஜக கூட சேர்ந்தா, அவங்க தமாகாவுக்கு 3 சீட்டாவது கொடுப்பாங்களே…ராஜ்யசபா எம்.பி. சீட்டும் தருவாங்களே?”

“சீட் கொடுப்பாங்க. ஆனா தேர்தல்ல நின்னு ஜெயிக்க முடியுமாங்கிறது அவரோட யோசனையா இருக்கும். அதுவே அதிமுக கூட்டணியில சேர்ந்து போட்டியிட்டு தோத்தாலும், ராஜ்யசபா சீட் கிடைக்குமேன்னு அவர் நினைக்கலாம்.”

“நீ இப்படி சொல்ற. ஆனா எனக்கு என்னமோ அவர் பாஜக கூடத்தான் போவார்னு தோணுது. அவங்க நினைச்சா எந்த மாநிலத்துல இருந்து வேணும்னாலும் வாசனை ராஜ்யசபா எம்.பி. ஆக்கலாமே…”

“அதுவும் சரிதான்”

“ஒரு காலத்துல கூட்டணி கட்சிங்க அதிமுக ஆபீஸ் வாசல்ல காத்துட்டு இருப்பாங்க. ஆனா இப்ப அதிமுக தலைவர்கள் கூட்டணி கட்சிகளோட ஆபீசுக்கும், அந்த கட்சி தலைவர்களோட வீட்டுக்கும் நடையா நடந்துட்டு இருக்காங்க. இதைப் பார்த்தா பாவமா இருக்கு.”

“தன்மானத்தைப் பார்த்தா அரசியல்ல ஜெயிக்க முடியுமா?

தவழவேண்டிய இடத்துல தவழ்ந்தும், நிமிரவேண்டிய கட்டத்துல
நிமிர்ந்தும் எப்படி அரசியல் செய்யறதுன்னு எடப்பாடிக்கு தெரியாதா?”

”எடப்பாடியோட வியூகங்களுக்கு பாஜக எதிர் வியூகம் ஏதும் வகுக்கலையா?”

“இந்த நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுகவை தனிச்சு விடணும்கிறதுதான் பாஜகவோட ப்ளான். அதன் மூலமா பாஜகவை 2-வது இடத்துக்கு கொண்டுவர அவங்க திட்டம் போடராங்க. அதுக்காக மத்த கட்சிங்ககிட்ட அன்பாவும், மிரட்டலாவும் பேரம் பேசிட்டு இருக்காங்க. அண்ணாமலை நடைப்பயணத்தோட 200-வது தொகுதி நிகழ்ச்சியில பாஜக தேசிய தலைவர் நட்டா கலந்துக்கிறார். இந்த கூட்டத்துக்கு முன்னால கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க அண்ணாமலை துடிச்சுட்டு இருக்கார்”

“திமுக சைட் நிலவரம் எப்படி?”

“நாடாளுமன்ற தேர்தல் தொடர்பா மாவட்ட வாரியா நடக்கிற ஆலோசனைக் கூட்டத்தில் பல நிர்வாகிகள் தைரியமா தங்கள் கருத்தை சொல்றாங்களாம். ஒரு ஒன்றிய செயலாளர், ‘நம்ம கட்சியில மாவட்ட செயலாளர்கள் பலரும் 70 வயதைக் கடந்தவர்கள். இளம் தொண்டர்களோட அவங்களுக்கு தொடர்பே இல்லை. எத்தனை மாவட்ட செயலாளர் ஒன்றியச் செயலாளர்களோடயும், கிளைக் கழகச் செயலாளர்களோடயும் தொடர்பில் இருக்காங்கன்னு கேட்டுப் பாருங்க’ன்னு சொல்லி இருக்கார். அதைக் கேட்ட உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்களைப் பார்த்து, ‘என்ன அண்ணே இப்படி சொல்றாங்க’ன்னு கேட்டிருக்கார். அவங்களுக்கு தர்மசங்கடம் ஆகியிருக்கு.”

“விஜயகாந்த் வீட்டுக்கு கனிமொழி இரண்டாவது முறையா போயிருக்காரே?”

“இரண்டாவது முறை ராஜாத்தி அம்மாளுக்கு துணையா அவர் போனதா சொல்றாங்க. ஆனா உண்மை அது இல்லையாம். கூட்டணி பத்தி தன்னோட அண்ணன் சார்பா விஜய்காந்த்கிட்ட பேச அவர் போனதா சொல்றாங்க.”

“திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் எப்படி போயிட்டு இருக்கு?”

“தொகுதி பங்கீடு பத்தி பேசலாம்னு கூட்டணி கட்சிகளை கூப்பிடற டி.ஆர்.பாலு, அவங்க சொல்றதை எல்லாம் கேட்டுக்கிறார். பிறகு தளபதி எங்களை கேட்டுக்க மட்டும்தான் சொல்லி இருக்கார். நாங்களும் நீங்க சொன்னதை கேட்டுட்டோம். தளபதி வந்ததும் அவர்கிட்ட சொல்றோம். இறுதி முடிவை அவர்தான் எடுப்பார்’னு சொல்றார். அதனால அவங்க முதல்வர் என்ன சொல்வாரோங்கிற சஸ்பென்ஸ்ல இருக்காங்க.”

“நாடாளுமன்ற தேர்தல் முடியறவரைக்கும் பல சஸ்பென்ஸை பார்க்க வேண்டி இருக்கும்.”

“எல்லாத்துக்கும் மேல தேர்தல் முடிவுகள் அன்னைக்கு மக்கள் வைப்பாங்க பாருங்க. அதுதான் சூப்பர் சஸ்பென்ஸ்.” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...