“தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளைப் பார்த்து பாஜக தலைமை டென்ஷன்ல இருக்காம்” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக ஆட்சிக்கு வரும்னுதானே சொல்லுது. பிறகு பாஜக தலைமை ஏன் டென்ஷன் ஆகணும்?”
“தேசிய அளவுல பாஜக பெரிய வெற்றி பெறும்னு சொன்ன கருத்துக் கணிப்புகள், தமிழ்நாட்ல பாஜக படுதோல்வி அடையும்னு சொல்லியிருக்கே… அதனால்தான் இந்த டென்ஷன். அண்ணாமலை சும்மா இருந்திருந்தா, தமிழ்நாட்ல பாஜக – அதிமுக கூட்டணி தொடர்ந்திருக்கும். இங்க 10 சீட்களையாவது ஜெயிச்சிருக்கலாம்னு பாஜக மேலிடத் தலைவர்கள் யோசிக்கறாங்களாம்.”
“இது சம்பந்தமாத்தான் எடப்பாடியை ஜி.கே.வாசன் சந்திச்சிருக்காரே?”
“அது கருத்துக் கணிப்புகள் வர்றதுக்கு முன்ன. அப்பவே பாஜக தலைமை அதிமுகவுக்காக அண்ணாமலையை விட்டுக் கொடுக்க தயாராத்தான் இருந்துச்சு. அப்ப எடப்பாடிகிட்ட பேசின ஜி.கே.வாசன், ‘நீங்க கூட்டணிக்கு சம்மதிச்சா, தமிழக தலைவர் பதவியில இருந்து அண்ணாமலையை ஒதுக்கி வைக்க பாஜக தலைமை தயாரா இருக்கு’ன்னு சொல்லி இருக்காரு. ஆனா அப்ப அதுக்கு எடப்பாடி பிடி கொடுக்கல. ‘இது என்னோட தனிப்பட்ட முடிவு இல்லை. கட்சியோட முடிவு. அதனால நான் ஏதும் சொல்ல முடியாது’ன்னு சொல்லி இருக்கார். இப்ப கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்த பிறகு பாஜக தலைமை அந்த முயற்சியை இன்னும் தீவிரப்படுத்தி இருக்கு.”
“அடிமேல அடி அடிச்சா அம்மியே நகரும்னு சொல்வாங்க. எடப்பாடி நகர மாட்டாரா என்ன?”
“எடப்பாடி நகர்ந்தாலும் கட்சிக்காரங்க நகரணுமே? டி.ஜெயக்குமார், கே.பி.முனுசாமின்னு அதிமுக தலைவர்கள் பலரும் எது நடந்தாலும் பாஜக கூட்டணி வேண்டாம்னு பிடிவாதமா இருக்காங்களாம்”
“ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்காங்க?”
“அதுக்கு காரணம் இருக்கு. எடப்பாடி சமீபத்துல பாஜக கூட்டணி பத்தி முக்கிய தலைவர்கள்கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்கிறார். அதிமுக தலைவர்கள் பயம் 2024 தேர்தல் இல்லை. 2026 சட்டப் பேரவைத் தேர்தல். 2024 தேர்தல்ல கூட்டணி வச்சு பாஜக நிறைய வாக்குகளை எடுத்து இரண்டு மூணு சீட் ஜெயிச்சிருச்சுனா பாஜகவை அடக்க முடியாது. 2026 சட்டப் பேரவைத் தேர்தல்ல பாஜக முதல்வர்னு பேசுவாங்க. கட்சியையும் பலப்படுத்திடுவாங்க. அதுக்கு நாம இடம் கொடுத்திடக் கூடாதுனு பேசியிருக்காங்களாம்.”
“மத்தியில திருப்பியும் பாஜக வந்தா இவங்களுக்கு கஷ்டமாச்சே. தொந்திரவு கொடுப்பாங்களே?”
”ஆமா, அதையும் பேசியிருக்காங்க. பயப்படுறவங்க பாஜகவுக்கு போயிறலாம்னு ஓப்பனாகவே எடப்பாடி சொல்லியிருக்கிறார்”
“அப்ப இந்தத் தேர்தல்ல பாஜக கூட்டணி இருக்காதுனு சொல்ற”
“ஆமாம். இன்னைக்கு வரைக்கும் எடப்பாடி பழனிசாமியோட நிலைப்பாடு இதுதான்”
“பாமகவும், தேமுதிகவும் இன்னும் எந்தப் பக்கம்னு முடிவு எடுக்காம இருக்காங்களே?”
“பாமகவில் ராமதாஸ் அய்யாவுக்கு அதிமுககூட சேரத்தான் விருப்பம் அதிகமா இருக்கு. ராமதாஸ் கூப்ட்டுதான் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாவரம் தோட்டத்துக்கு போய் அவரை சந்திச்சிருக்காரு. அவங்க கூட்டணி பத்தி விவாதிச்சதா சொல்றாங்க. ஆனா அதே நேரத்துல அன்புமணியை ஜி.கே.வாசன் சந்திச்சிருக்கார். அப்ப, ‘நீங்க பாஜக கூட்டணிக்கு வந்தா உங்களுக்கு வேற மாநிலத்துல இருந்து ராஜ்யசபா எம்.பி பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்க நான் உத்தரவாதம்’னு சொல்லி ஆசை காட்டி இருக்கார். அதனால அன்புமணி பாஜக கூட்டணில நிக்க ஆசைப்படறார்.”
“ஒரே குடும்பத்துல ரெண்டு கோஷ்டியா?”
“கிட்டத்தட்ட அப்படித்தான். தேர்தல் கூட்டணி விஷயத்துல அப்பாவுக்கும், மகனுக்கும் பெரிய அளவுல சண்டையே வந்திருக்கு. டாக்டர் ராமதாஸ், ‘கூட்டணி பத்தி முடிவு எடுக்க கட்சி பொதுக்குழு எனக்குத்தான் அதிகாரம் கொடுத்திருக்கு. அதிமுகவைப் பொறுத்தவரை அவங்க அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து கூட்டணி பேச்சு நடத்தறாங்க. நீ ராஜ்யசபா எம்பி ஆகி மத்திய அமைச்சரானா போதுமா? என்னை நம்பி இருக்கற கட்சிக்காரங்க எம்.எல்.ஏ ஆக வேணாமா? அதுக்கு அதிமுக கூட்டணிதான் உதவும்’னு ஸ்டிரிக்டா அன்புமணிகிட்ட பேசி இருக்காராம்.”
“தேமுதிக நிலை என்ன?”
“14 எம்.பி. சீட் வேணும்னு வெளிப்படையா சொன்னாலும், 4 சீட் கொடுத்தா கூட்டணில சேர்ற நிலையிலதான் தேமுதிக இருக்கு. பிரேமலதாவோட ஆசை ராஜ்யசபா எம்.பி. ஆகிறதுதான் அதுக்கு தமிழ்நாட்ல அதிமுக ஆதரவு தேவை. அதனால அவரும் அதிமுக பக்கம் போகத்தான் ஆசைப்படறாரு. தேமுதிக நிர்வாகிகளும் அதிமுக கூட்டணியைத்தான் விரும்பறாங்க. இதை பொதுக்குழு கூட்டத்துலயும் சொல்லி இருக்காங்க.”
“பாமகவையும், தேமுதிகவையும் இழுக்க எடப்பாடி எதையும் செய்யலையா?
“அவரைப் பொறுத்தவரை ரெண்டு கட்சிகிட்டயும் பேசிட்டோம். இனி அவங்களாத்தான் ஒரு முடிவுக்கு வரணும்னு அமைதியா இதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்.”
”திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் பத்தி நியூஸ் ஏதும் இல்லையா?”
“காங்கிரஸ் கட்சிக்கு போன தடவை ஒதுக்கின 10 சீட்டை இந்த முறை திமுக ஒதுக்குமாங்கிறதுதான் இப்போதைக்கு இப்ப சஸ்பென்ஸ். சீட்டுக்கான பேச்சுவார்த்தை இழுத்துட்டே போகுது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 11 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஆனால் இப்ப அது தள்ளிப் போயிருக்கு. நடுவுல டெல்லியில பாலுவை சந்திச்ச காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘கடந்த தேர்தலில் என்ன நிலைப்பாடு இருந்ததோ அதையே இந்த தேர்தல்லயும் தொடரச் சொல்லி ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் சொன்னதா முதலவர்கிட்ட சொல்லுங்க’ன்னு சொல்லி இருக்கார். டி.ஆர்.பாலுவும் அப்படியே சொல்லி இருக்கார். முடிவு இப்ப முதல்வர் கையில இருக்கு.”
“கேரள, கர்நாடக அரசுகள் மத்திய அரசுக்கு எதிரா பெரிய அளவுல போராட்டத்துல ஈடுபட்டு இருக்காங்களே?”
“ராமர் கோயில் விஷயத்தை வாக்கு வங்கியா மாத்த பாஜக திட்டம் போடுது. அதே நேரத்தில் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சரியா நிதி ஒதுக்கறதில்லைன்னு ஒரு கோஷத்தை எழுப்பி, அதன்மூலமா வாக்குகளை திரட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருக்கு. பொதுவா இதுபோன்ற பிரச்சினைகளுக்காக மாநில முதல்வர்கள் அறிக்கைதான் விடுவாங்க. ஆனா கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் அமைச்சரவை சகாக்களோட டெல்லிக்கே போய் போராட்டம் நடத்தி இருக்கார். அதோட நிக்காம எல்லா ஆங்கில நாளிதழ்கள்லயும், ‘ஐந்தாண்டுகளில் கர்நாடக அரசுக்கு தர வேண்டிய நிதி ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தராமல் ஏமாற்றுகிறது’ன்னு பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்தார். அவர் நடத்தின போராட்டத்துல கலந்துக்க கர்நாடகால இருந்து எம்.பியா தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமனையும் அவர் கூப்டதுதான் ஹைலைட். கர்நாடக முதல்வர் மாதிரியே கேரள முதல்வர் பினாயிராய் விஜயனும் டெல்லியில போராட்டம் நடத்தி இருக்கார். இதுல டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர் கலந்துகிட்டாங்க. தமிழக முதல்வரும் வாழ்த்து அனுப்பி இருந்தார். இதையெல்லாம் பாஜகவை யோசிக்க வைச்சிருக்கு.”
“பிடிஆர் லைம்லைட்டுக்கு வர்றார்போல. டெல்லில நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்துல கலந்துக்கிட்டாரே?”
“ஆமாம். மத்திய அரசு நிதி தராம இருக்கிறதைப் பத்தி கர்நாடக, கேரள முதல்வர்கள் கலந்துக்கிற போராட்டத்துல நிதி பத்தி நல்லா பேசக் கூடியவர்னு பிடிஆரை போகச் சொல்லியிருக்கிறார் முதல்வர். இது கட்சிக்குள்ள சலசலப்பை உண்டு பண்ணியிருக்கு. இந்தாளை ஓரம் கட்டினா திரும்பியும் வராரே சில அமைச்சர்கள் முணுமுணுத்துருக்காங்க. ஆனா பிடிஆருக்கு சின்னவரோட ஆதரவும் மருமகனோட வழிகாட்டலும் இருக்குனு சொல்றாங்க”
“விஜய்யோட தமிழக வெற்றி கழகத்தைப் பத்தி எந்த நியூஸையும் சொல்லலையே?”
“இனி உங்களுக்கு அந்த கவலையே வேணாம். தன்னோட கட்சி நியூஸையும், கொள்கைகளையும் பரப்ப சொந்தமா ஒரு சேனல் தொடங்க விஜய் திட்டம் போட்டிருக்காராம். புது பேர்ல சேனல் தொடங்கறதா… இல்லை ஏற்கெனவே நஷ்டத்துல இயங்கிட்டு இருக்கிற ஏதாவது சேனலை வாங்கி அதை நடத்தறதான்னுதான் அவர் இப்ப யோசனை பண்ணிட்டு இருக்காராம்”