No menu items!

மூடப்பட்ட மோடி சாலை: ரூ. 777 கோடி வீணா?

மூடப்பட்ட மோடி சாலை: ரூ. 777 கோடி வீணா?

டில்லியில் ரூ.777 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசால் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிரகதி மைதானம் சுரங்க சாலை, இரண்டே ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு முற்றிலுமாக சேதமடைந்திருப்பது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் எல்லா பெருநகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் பெரும் சிக்கலாக மாறி வருகிறது. தலைநகர் டெல்லியில் நிலைமை இன்னும் மோசம். இந்நிலையில், டில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டெல்லியின் கிழக்கு பகுதிகளையும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் 1.3 கி.மீ நீளம் கொண்ட பிரகதி மைதானம் சுரங்க சாலை, ரூ.777 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசால் கட்டப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று பிரகதி மைதானம் சுரங்க சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

சுரங்க சாலையை திறந்து வைக்கும்போது, சுரங்க சாலைக்குள் இருந்த குப்பைகளை வெறும் கையால் அள்ளி சுத்தம் செய்தார், பிரதமர் நரேந்திர மோடி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சுரங்க சாலைக்குள் கையில் பயன்படுத்தப்பட்ட ஒரு தண்ணீர் பாட்டிலுடன் நரேந்திர மோடி நடந்து வரும் அந்தப் புகைப்படம் தற்போதும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஆனால், இம்முறை சாதனையாக அல்ல என்பதுதான் கவலை தரும் செய்தி.

இந்த சுரங்க சாலை திறந்து வைக்கப்படும்போது உலக தரத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களும் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதன் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் எனவும் கட்டுமான நிறுவனம் கூறியது.

ஆனால், ஒராண்டிலேயே, 2023 டெல்லி கனமழையின் போது தண்ணீர் தேங்கியதால் சுரங்க சாலை பலமுறை முற்றிலுமாக மூடப்பட்டது. பின்னர் கனரக மோட்டார்களைப் பயன்படுத்தி தண்ணீரை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால், நீர்கசிவு நிற்காததால் சுரங்க சாலை நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டு பயன்படுத்தப்படாமலேயே இருந்தது.

ஆனாலும், சிமெண்டில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து நீர் கசிவு அதிகரித்ததே தவிர குறையவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்னொரு பக்கம், மோசமான வடிகால் காரணமாகவும் நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது என்றும் இப்படி நீர் தேங்கி நிற்பது கட்டுமானத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீர் கசிவு, விரிசல் காரணமாக சாதனை சாலை இப்போது ஆபத்தான சாலையாக மாறியுள்ளது.

சுரங்க சாலையில் ஆய்வு செய்த டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள், “பல சுரங்க சாலைகளில் நீர் கசிவு சிறிதளவு இருக்கும். ஆனால், இங்குள்ள கசிவை கட்டுமான நிறுவனம் சரி செய்யாததால் அது பெரிய விரிசல்களாக மாறியிருக்கிறது. இது பயணிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. பழுது பார்த்தும் பயனிலை. முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து சுரங்க சாலை கட்டுமான நிறுவனமான எல்&டிக்கு டெல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “உரிய முறையில் சீரமைப்பு மேற்கொள்ளப்படாத காரணத்தால் பிரகதி மைதானம் சுரங்கச் சாலை சேதமடைந்துள்ளது. இதற்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

சுரங்க சாலை ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என கூறப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்குள் சேதமடைந்து விட்டது ஏன்? என்ன தவறு நடந்தது? ஏன் இத்தனை கசிவுகள்?

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, நகர்ப்புற திட்டமிடல் நிபுணர் அர்ச்சித் பிரதாப் சிங், ‘நிலத்தடி சுரங்க சாலையை உருவாக்குவதற்கு மண் மற்றும் பாறை நிலைமைகளைப் புரிந்துகொள்ள ஆழமான புவி தொழில்நுட்ப ஆய்வு தேவை. அது இந்த சுரங்க சாலையில் செய்யப்படவில்லை. மேலும், பிரகதி மைதானம் சுரங்க சாலையில் கசிவு பிரச்சினை, கட்டுமானத்தின் போது முறையான நீர்ப் புகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததை எடுத்துக்காட்டுகிறது. இது நீர் கசிவுக்கு வழிவகுக்கிறது. வடிகால் அமைப்புகளின் வடிவமைப்பு, சுரங்க சாலை திறக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட விரிசல்கள் நிச்சயம் கவலைக்குரியவை.

இனிமேலாவது கட்டமைப்பு, சிவில், நில அதிர்வு மற்றும் புவியியல் நிபுணர்கள் உட்பட ஒரு ஆய்வுக் குழு, நிலத்தின் இயக்கம், நீர் உட்புகுதல், மோசமான கட்டுமான நடைமுறைகள், அதிகப்படியான சுமைகள், சுற்றியுள்ள கட்டமைப்புகளின் தீர்வு, வலுவூட்டல் அரிப்பு, பராமரிப்பு இல்லாமை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, காரணங்களை முழுமையாக ஆராய வேண்டும். முறையற்ற கட்டுமானப் பொருட்கள், அல்லது நில அதிர்வு செயல்பாடு, விரிசல்களின் விரைவான வளர்ச்சியை பகுப்பாய்வு செய்வது, இந்த கட்டமைப்பு சிக்கலுக்குப் பின்னால் உள்ள குறிப்பிட்ட காரணங்களைக் கண்டறிய உதவும்” என்று அவர் கூறியுள்ளார்.

அர்ச்சித் பிரதாப் சிங்  கூறுவது போல் எந்தவொரு பெரிய திட்டத்துக்கும் முறையான பல குழு பாதுகாப்பு தணிக்கை தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், டில்லி சுரங்க சாலை வேகமாக கட்டவேண்டும் என்ற நோக்கத்தில் அதுபோல் தணிக்கைகள் இல்லாமல் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ரூ. 777 கோடி சுரங்க சாலை இரண்டே ஆண்டில் பயன்படுத்த முடியாமல் நிரந்தரமாக மூடும் நிலைக்கு வந்துள்ளது அந்த சாலையை பயன்படுத்திய மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது ஒரு பக்கம் இருக்க, பொதுப்பணித்துறை நோட்டீஸால் தங்கள் நிறுவனம் பெயர் பாதிக்கப்படுவதாக, 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு எல்&டி நிறுவனம் டெல்லி பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது எப்படி இருக்கு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...