’’லியோ முழுக்க முழுக்க விஜய் படமாகதான் இருக்கும். ஒருவேளை கதையை எழுதும் போது, ’கைதி’, ’மாஸ்டர்’, ’விக்ரம்’ படங்களில் வந்த கதாபாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமைந்தால், லியோ- டைட்டிலுக்கு கீழே மக்கள் சொல்கிற மாதிரி LCU இருக்கும்’ என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
டைட்டிலுக்கு கீழே LCU இல்லாததால் இது விஜய்க்கான ஆக்ஷன் க்ரைம் படமாக இருக்கும் என தெரியவந்திருக்கிறது.
லியோ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் யாரும் இப்படத்தின் கதையையோ, அல்லது தங்களது கேரக்டர்கள் பற்றியோ மீடியாவில் பேசக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் சில முக்கியமான காட்சிகள் காட்டுக்குள் நடப்பது போல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்தக் காட்சிகளை முதலில் கொடைக்கானலில் எடுக்க லோகி & டீம் திட்டமிட்டு இருந்தது.
லோகி & டீம் கொடைக்கானலுக்குப் போனப்பிறகுதான் அவர்களுக்கு ஒரு பிரச்சினை கிளம்பியது. காட்டுக்குள் ஷூட் செய்யலாம் என்று போனவர்களை வனத்துறை அதிகாரிகள் தடுத்து இருக்கிறார்கள். இங்கு ஷூட்டிங் செய்ய அனுமதி இல்லை என்று வனத்துறையினர் கறாராக கூறிவிட்டார்கள். ஷூட்டிங் அனுமதியை எப்படியாவது வாங்கிவிடலாம் என்று யோகி அண்ட் டீம் எவ்வளவோ முயற்சித்து முடியாமல் போனதால், பேக்கப் செய்து கொண்டு திரும்பிவிட்டார்கள்.
இதையடுத்துதான் இப்பொழுது காஷ்மீருக்கு லியோ டீம் கிளம்பியிருக்கிறது. இங்கு நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சத்யராஜ், சஞ்சய் தத் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
காஷ்மீர் ஷெட்யூல் முடிந்தப் பிறகு எடுக்க இருக்கும் காட்சிகளில் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன். அர்ஜூன், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படி பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருப்பதால் இவர்களுக்கான கேரக்டர்கள் என்னவாக இருக்கும் என்று சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விவாதிப்பதற்கான வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் லோகி.
லியோ படம் விஜய் – லோகி காம்பினேஷன் என்பதால் இப்பொழுதே பிஸினெஸ் களைக்கட்ட ஆரம்பித்திருக்கிறது.