No menu items!

ICU, CPU தெரியும். அது என்ன LCU?

ICU, CPU தெரியும். அது என்ன LCU?

’மாநகரம்’
’கைதி’
‘மாஸ்டர்’
விக்ரம்’

லோகேஷ் கனகராஜ் இயக்கியது இந்த 4 படங்கள் மட்டும்தான்.

ஆனால் இன்று தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்படும் இளம் இயக்குநராக முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.

லோகேஷின் படங்களின் கொஞ்சம் நெருக்கமாகப் பார்த்தால், இவரது கதை, திரைக்கதையில் போதைப்பொருள், மாஃபியா, க்ரைம் என 3 களங்கள் மட்டுமே ஆக்ரமித்து இருக்கின்றன.

லோகேஷூக்கு மேக்கிங்கில் இப்படியொரு டெம்ப்லேட் இருந்தாலும், அதில் வெற்றிப் பெற்றதற்கான காரணங்கள் 2.

பல முன்னணி நட்சத்திரங்களைக் ஒரே படத்தில் நடிக்க வைக்கும் மல்ட்டி ஸ்டார் படமாக எடுப்பது, மல்ட்டி ஸ்டார் படமாக இருந்தாலும் அப்படத்தில் ஹீரோயிஸத்தின் உச்சத்தைக் காட்டுவது. இந்த இரண்டையும் திரைக்கதையில் பக்காவாக பார்சல் செய்துவிடுகிறார்.

இந்த ஹிட்களையெல்லாம் தாண்டி, இன்று எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதற்காக இப்பொழுது அவர் கையிலெடுத்திருக்கும் விஷயம் 1.

அதுதான் ‘எல்சியூ’ [LCU] என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘லோகி சினிமாட்டிக் யூனிவர்ஸ்’. / ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ [LCU- The Lokesh Cinematic Universe].

கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் என பெரிய தலைகளை வளைத்துப் போட்டிருக்கும் இந்த லோகேஷ் கனகராஜ் யார்?

குசும்புக்குப் பெயர் பெற்ற கோயம்புத்தூர் தயாரிப்புதான் இந்த லோகேஷ் கனகராஜ். ஒரு முன்னாள் வங்கி ஊழியர். எவ்வளவு நாட்கள்தான் வங்கிக்கு வரும் மற்றவர்களின் கரன்சிகளை எண்ணிப் பார்ப்பது, இதே வங்கி என்னுடைய சம்பாத்தியத்தை என்னைப் போல் ஒருவரை வைத்து எண்ணிப் பார்க்கட்டும் என நினைத்தவர் நுழைய ஆசைப்பட்டது சினிமாவில்.

ஆனால் சினிமா வாடையே இல்லாத குடும்பம். சினிமா சம்பந்தமே இல்லாத பட்டப்படிப்பு.

கார்பொரேட் வேலையைப் பார்த்த போது எடுத்தது ஒரு குறும்படம். அதன் பெயர் ‘அவியல்’. அதற்கு கிடைத்த ஒரு விருது. இதுதான் சினிமாவில் இவருக்கு இருந்த ஒரே பிஸினெஸ் கார்ட்.

இப்படி தொடங்கிய லோகியின் பயணம் இன்று LCU வரை வந்திருக்கிறது.

அது சரி சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்றால் என்ன?

அயர்ன் மேன், சூப்பர் மேன், ப்ளாக் பாந்தர், வொண்டர் வுமன், கேப்டன் அமெரிக்கா, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், பேட் மேன், ஆன்ட் மேன், ப்ளாக் விடோ, ஹல்க், தோர், லோகி இந்த சூப்பர் ஹீரோக்களின் படங்களைப் பார்த்திருப்பீர்கள்.

ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து கொண்டு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் நினைத்து கூட பார்க்க முடியாத ஹீரோயிஸத்தை காட்டினார்கள். 90 களில் இதுதான் பிரபலம்.

ஆனால் சினிமா உலகளாவிய சந்தையாக விரிவாகி கொண்டே போக, தொழில்நுட்ப அம்சங்களும் அடுத்தக்கட்டத்திற்கு சினிமாவை அழைத்து செல்ல, சினிமா பிஸினெஸ்ஸூக்கு வாய்ப்புகள் அதிகமானது.

இந்த வாய்ப்புகளுக்கேற்ற படங்களை எப்படி உருவாக்குவது. படத்திற்கு செலவு செய்யும் பல நூறு கோடி பணத்தை எப்படி கல்லா கட்டுவது.

சூப்பர் மேன், அயர்ன் மேன், பேட் மேன், ஆன்ட் மேன் என வரிசையாக சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள். இவர்களில் யார் அடித்தால் ஒன்னரை டன் வெயிட் இறங்கியது போல இருக்கும் என்று யோசித்துப் பார்க்கும் போது, சூப்பர் மேனையும் பேட் மேனையும் ஏன் நேருக்கு நேர் மோதவிடக்கூடாது என்று உங்களுக்கே மனதிற்குள் தோன்றலாம்.

இதே லாஜிக்தான் மார்வல் ஸ்டூடியோஸூக்கும், டிஸ்னிக்கும் பல வருடங்களுக்கு முன்பே பொறியில் தட்டியது.

இதனாலேயே மார்வல் ஸ்டூடியோவும், டிஸ்னி தங்கள் வசமிருந்த சூப்பர் ஹீரோ கேரக்டர்களை ஒரே படத்தில் மோதவைத்தன. சில படங்களில் பவர்ஃபுல்லான வில்லனை எதிர்க்க சூப்பர் ஹீரோக்கள் கூட்டணியை ஆரம்பித்து வைத்தன.

2008-ல் வெளியான ‘அயர்ன் மேன்’ படத்திலிருந்துதான் மார்வல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஆரம்பித்தது.
ஆகமொத்தம் இதுதான் சினிமாட்டிக் யூனிவர்ஸ்.

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்

இந்திய சினிமாவிலும் இந்த சினிமாட்டிக் யூனிவர்ஸை வைத்து கல்லா கட்டுவதற்கு புள்ளி வைத்தது மார்வல் ஸ்டூடியோ, டிஸ்னியின் ஃபார்மூலா.

அதை முதன் முதலில் கமர்ஷியல் ஆக்கியது லோகேஜ் கனகராஜ். அவரது இந்த புத்திசாலித்தனம்தான் அவரைப் பற்றி இப்படியெல்லாம் எழுத வைத்திருக்கிறது.

இந்திய சினிமாவில் ‘லோகேஷ் சினிமாட்டி யூனிவர்ஸ்’ என்ற கான்செப்ட்டை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

லோகியின் இரண்டாவது படம், டில்லி கேரக்டரில் கார்த்தி நடித்த ‘கைதி’. இதில் நார்கோட்டிக்ஸ் மாஃபியா பற்றிய கதை. கார்த்தி இதில் தான் செய்த குற்றத்திற்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் மகளைப் பார்க்க கிளம்பும் போது, அவருக்கு போலீஸ் ஒரு கட்டாய பணியைக் கொடுக்கிறது. இதனால் காவல்துறை அதிகாரி பிஜாய் உடன் பயணிக்கிறார் டில்லி. அன்பு, [அர்ஜூன் தாஸ்] அடைக்கலம் [ஹரீஷ் உத்தமன்] என்ற கேங்க்ஸ்டர்களுடன் டில்லியும், பிஜாய்யும் மோதுகிறார்கள் க்ளைமாஸில் டில்லி அடுத்தப் பாகத்திற்கு பில்டப் கொடுப்பது போல் நடையைக் கட்டுக்கிறார்.

லோகேஷ் தனது மூன்றாவது படமாக கமலை வைத்து இயக்கிய ‘விக்ரமில்’,, தனது ‘கைதி’ வந்த பிஜாய் கேரக்டரை விக்ரமில் திரைக்கதையில் நுழைத்துவிட்டார்.

கைதி டில்லியுடன் நார்கோட்டிக் மாஃபியாவை பிடித்த பிஜாய், இதில் ஏஜெண்ட் விக்ரமுடன் சேர்ந்து சந்தானத்தை [விஜய் சேதுபதி] எதிராக களத்தில் புல்லட்களைத் தெறிக்கவிடுகிறார்.

’விக்ரம்’ ப்ளாக் பஸ்டராக பாக்ஸ் ஆபீஸ் தூள் கிளப்ப, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸூக்கு சட்டென்று எதிர்பார்பு உருவானது.

‘விக்ரம் 2’, ’கைதி 2’ என அடுத்த லோகேஷ் இயக்கவிருக்கும் இரண்டுப் படங்களிலும் எல்சியூ இருக்கும் என்று இப்பொழுதே பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார் லோகி.

கைதியில் எஸ்கேப்பான அன்பு, அடைக்கலம் இருவரும், விக்ரமில் திடீர் எண்ட்ரீ கொடுத்த ’ரோலக்ஸ்’ சூர்யாவின் ஆட்கள் தான் என்றும் திரைக்கதையை நகர்த்தலாம்.

விக்ரமை ரோலக்ஸ், அன்பு, அடைக்கலமுடன் மோதவிடலாம். இப்படி பல திரைக்கதையில் புகுந்து விளையான பல் வாய்ப்புகளை திறந்துவிட்டிருக்கிறது இந்த சினிமாட்டி யூனிவர்ஸ் கான்செப்ட்.

இதனால் இந்திய சினிமாவில் இந்த லேட்டஸ்ட் நகாசு முயற்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

அதிகரித்துவரும் சினிமாட்டிக் யூனிவர்ஸ் படங்கள்

லோகியின் ஸ்டைலை போலவே சமீபத்தில் வெளியான ஷாரூக்கான் – தீபிகா படுகோன் நடித்த ’பதான்’ படத்திலும் யாஷ் ராஜ் ஃப்லிம்ஸின் முந்தைய ஸ்பை த்ரில்லர் படங்களின் ஹீரோக்களான டைகர், கபீர் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த்.

இப்பொழுது கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்த ’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது ‘சலார்’ பட கதாப்பாத்திரங்களையும். கேஜிஎஃப் கேரக்டர்களையும் வைத்து ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸ்ஸை உருவாக்கி திட்டமிட்டு வருகிறாராம்.

பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி, ‘பிரம்மாஸ்திரா’ படம் மூலம் ஒரு ‘அஸ்ட்ராவெர்ஸ்’-ஐ உருவாக்கி இருக்கிறார். அடுத்தடுத்து வரும் 2 வது மற்றும் 3-வது பாகங்களிலும் இது தொடரும் என்று அறிவித்துவிட்டார்.

இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் சினிமாட்டிக் யூனிவர்ஸ் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆக இன்னும் 2 அல்லது 3 வருடங்களுக்கு நம்மூர் இயக்குநர்களுக்கு இந்த சினிமாட்டிக் யூனிவர்ஸ் போதை இருக்கும்.

நாம் வேடிக்கைப் பார்த்தால் போதுமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...