No menu items!

அண்ணாமலை எடுத்த 2 சர்வே – மிஸ் ரகசியா

அண்ணாமலை எடுத்த 2 சர்வே – மிஸ் ரகசியா

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு சர்வேக்களை நடத்தி இருக்கிறாராம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“என்ன சர்வே? யார் எடுத்தது? ஒபிஎஸ் மாதிரி புரியாத மாதிரி சொல்றியே”

“பாஜக அண்ணாமலைதான் இந்த இரண்டு சர்வேக்களையும் எடுத்திருக்கிறார். இந்த இடைத் தேர்தல்ல போட்டியிடுறதுக்கு அவருக்கு ஆசை. அதனால ரெண்டு சர்வே எடுத்துப் பார்த்திருக்கிறார். ஒரு சர்வேயை அவரோட வார் ரூம் ஆட்கள் எடுத்திருக்காங்க. இன்னொரு சர்வேயை பிரைவேட் கம்பெனி ஒண்ணு எடுத்திருக்கு.”

“சர்வேக்கள் என்ன சொல்கிறதாம்?”

“வார் ரூம் நடத்திய சர்வேயில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று முடிவு வந்திருக்கிறது”

“அப்படியா, அந்தப் பகுதில அண்ணாமலைக்கு அவ்வளவு செல்வாக்கா?”

”பொறுமையா கேளுங்க… தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால் அவருக்கு டெபாசிட் காலினு சொல்லியிருக்காங்க. இந்த 2 சர்வேக்களில் எந்த சர்வே உண்மைனு ஒரு சர்வே எடுக்கணும் போல” சிரித்தாள் ரகசியா.

“ டெபாசிட் காலினதும்தான் அதிமுக பெரிய கட்சினுலாம் அண்ணாமாலை பேசுனாரா?”

“இருக்கலாம். தனக்கு நெருக்கமானவர்கள்கிட்ட அண்ணாமலை பேசும்போது அதிமுக கூட்டணி இல்லாம தனியா நிக்கிறதுதான் பாஜகவுக்கு நல்லதுனு சொல்லியிருக்கிறார். ஆனால் தனியா நிக்கிறதுக்கு பாஜகவுல எதிர்ப்பு இருக்கு. கடலூர்ல மாநில செயற்குழு கூட்டத்தில இது பத்தி பேசியிருக்காங்க”

“செயற்குழு கூட்டத்தை ஏன் கடலூர்ல நடத்துனாங்க. ஏதாவது விசேஷம் உண்டா?”

“கரெக்டா கேக்குறிங்க. கடலூரை தேர்ந்தெடுத்ததற்கு அரசியல் காரணம் இருக்கு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஸ்ரீதர் வாண்டையார் இப்படி நிறைய பேரோட சொந்த மாவட்டம் கடலூர். இவங்க எல்லோருமே அண்ணாமலையையும் பாஜகவையும் கடுமையாக விமர்சிப்பவர்கள். அவங்களை டென்ஷன் படுத்தவே கடலூர்ல செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அண்ணாமலை. அவர் எதிர்பார்த்ததைப் போலவே அண்ணாமலைக்கு பெரிய அளவில் கட் அவுட் வைத்து அசத்தியிருக்கிறார்கள் அந்த ஊர் தொண்டர்கள். இதில் அண்ணாமலைக்கு ஏகக் குஷி.”

“சரி, செயற்குழுவுல என்ன நடந்தது…அதை சொல்லு”

“ஈரோடு இடைத் தேர்தல்தான் மெயின் டாபிக்கா இருந்துருக்கு. பெரும்பாலான தலைவர்கள் போட்டியிட வேண்டாம். அது விஷப்பரீட்சைனு சொல்லியிருக்காங்க. ஆனால் கேசவ விநாயகமும், கராத்தே தியாகராஜனும் போட்டியிட வேண்டும், அண்ணாமலை நிக்கணும்னு சொல்லியிருக்காங்க. அப்போ பேசிய கே.பி.ராமலிங்கம், ‘அந்தத் தொகுதி பற்றி எனக்கு நன்கு தெரியும். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய மூணு கட்சிகளுக்கும் அங்க வலுவான கட்டமைப்பு இருக்கு. பாஜகவுக்கு அங்கு எந்த கட்டமைப்பும் இல்லை. இன்னும் 50% பூத் கமிட்டி அமைக்கணும், இப்படி நிறைய வேலை இருக்கு. அதனால அங்க போட்டி போட வேண்டாம்னு சொல்லியிருக்கிறார். அப்போ கராத்தே தியாகராஜனுக்கும் அவருக்கும் வாக்குவாதம் வந்திருக்கு. அண்ணாமலைதான் சமாதானப்படுத்தியிருக்கிறார்”

“தமாகாவை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க முயற்சி நடந்ததா கேள்விப்பட்டோமே.”

“ஆமாம். இதைப்பற்றி அண்ணாமலையே வாசனிடம் பேசியதாக சொல்கிறார்கள். தாமரை சின்னத்தில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் தேர்தல் செலவைக்கூட பாஜக பார்த்துக்கொள்ளும் என்று சொன்னாராம். ஆனால் வாசனுக்கு இதில் விருப்பமில்லை. இந்த உள்குத்து அரசியல் தனக்கு வேண்டாம் என்று நினைத்த அவர் அவசர அவசரமாக இத்தேர்தலில் அதிமுக போட்டியிடும். அவர்களுக்கு தமாகா ஆதரவு அளிக்கும் என்று கூறியிருக்கிறார். அப்படியே அண்ணாமலை தனக்குச் சொன்ன யோசனையையும் அவர் எடப்பாடியிடம் கூறியிருக்கிறார்.”

“இவ்வளவு நடந்தும் அண்ணாமலையிடம் போய் எடப்பாடி தரப்பு ஆதரவு கேட்டிருக்கிறதே?”

“பாஜக… அதிலும் குறிப்பாக அண்ணாமலை தன்னை ஆதரிப்பது கடினம் என்பது எடப்பாடிக்குத் தெரியும். அண்ணாமலையை ஓபிஎஸ் சந்திக்கப் போவதும் எடப்பாடிக்கு முன்னதாகவே தெரியும். இருப்பினும் தாங்கள் ஆதரவு கேட்கவில்லை என்று அண்ணாமலை நினைக்கக்கூடாது என்பதற்காகவே கே.பி.முனுசாமி மற்றும் நிர்வாகிகளை அண்ணாமலையைச் சந்திக்க அனுப்பியிருக்கிறார் எடப்பாடி. தேர்தலுக்கு முன்பாக அதிமுக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும். அது தனக்கு சாதகமாக இருக்கும் என்று எடப்பாடி நம்புகிறாராம்”

“ஓபிஎஸ்ஸின் நிலை என்ன?”

“இந்த தேர்தலில் அவர் போடும் கணக்கே தனி. அதிமுகவைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருவரை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி ராஜினாமா செய்து விட்டார். நான் இன்னும் ஒருங்கிணைப்பாளாராக இருக்கிறேன். அதனால் நான் கையெழுத்திட்டாலே போதும். எனவே இரட்டை இலை எங்களுக்குத்தான் என்பது அவர் வாதம். பாஜக அங்கு போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்கவும் ஓபிஎஸ் தயாராக இருக்கிறார். அப்படி ஆதரித்தால் எதிர்காலத்தில் பாஜக தனக்கு ஆதரவாக செயல்படும் என்பது அவரது கணக்கு.”

“ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலில் தான் போட்டியிடவில்லை என்றுதானே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னார். மகனுக்காகத்தானே தொகுதியைக் கேட்டார். பிறகு எப்படி அவர் வேட்பாளர் ஆனார்?”

“அவருக்குப் போட்டியிட ஆர்வம் இல்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தான் அவர் போட்டியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். டெல்லி காங்கிரஸ் தலைமையிடமும் திமுக தலைவரின் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது”

“ஈவிகேஎஸ் போட்டியிடுவதில் திமுகவுக்கு என்ன லாபம்?”

“தேர்தல் வெற்றிதான். இந்தத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தங்கள் முழு பலத்தை இறக்குவார்கள் என்று திமுக நினைக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் போட்டியிட்டால் அவரால் இந்த அழுத்தத்தை தாங்க இயலாது. இளங்கோவன் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவர் போட்டியிட்டால்தான் களச் சூழலைப் புரிந்துக் கொண்டு சமாளிக்க இயலும் என்று திமுகவினர் கூறியிருக்கிறார்கள். ஈவிகேஎஸ் வென்றாலும் அவரது மகன் தான் தொகுதியை கவனித்துக் கொள்வார். அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம்னு முடிவ் பண்ணியிருக்காங்கலாம்.”

”ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதில் கே.எஸ்.அழகிரிக்கு சந்தோஷம்னு ஒரு பேச்சு இருக்கிறதே?”

“ஆமாம். அழகிரிக்கும் செல்வப்பெருந்தகைக்கும் ஆகவில்லை. கொஞ்ச நாள் முன்னாடி ரூபி மனோகரன் பிரச்சினை வந்துச்சுல. அதுக்கு காரணமே செல்வப்பெருந்தகைதான்னு அழகிரி நினைக்கிறார். இப்போ சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை இருக்கிறார். இளங்கோவன் வெற்றிப் பெற்று சட்டப் பேரவைக்கு சென்றால் மிக மூத்தவர் என்று அவரை தலைவராக்கி செல்வப்பெருந்தகையை ஓரங்கட்டிவிடலாம் என்று அழகிரி ஆதரவாளர்கள் கணக்கு போடுகிறார்கள்”

“ஈவிகேஎஸ்ஸுக்கு சீட் கொடுத்ததில் ஈரோடு கிழக்கு உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு கொஞ்சம் மனவருத்தம் இருப்பதாகச் சொல்கிறார்களே?

“உள்ளூர் காங்கிரஸ் பிரமுகரான மக்கள்ராஜன் என்பவர் பல தேர்தல்களாக வாய்ப்பு கேட்டு வந்தார். இடைத் தேர்தலிலாவது கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் கொஞ்சம் அப்செட். அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணி செய்வார்களா என்ற சந்தேகம் வந்திருக்கிறது”

”தமிழ்நாட்டுல காங்கிரஸ் அவங்க தொண்டர் உழைப்பால ஜெயிக்குது? கூட்டணிக் கட்சி தொண்டர்களின் உழைப்புதானே அதிகம். சரி, கமல் இம்முறை போட்டியிடுவாரா?”

“போட்டி போடல. ஆனா காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்னு சொல்றாங்க.அதாவது திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு கேக்கப் போறார்”

”காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்னு சும்மாவா சொல்றாங்க”

“கரெக்ட்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...