No menu items!

மேயர் பிரியாவிடம் அத்துமீறல்: ரெங்கநாதனுக்கு குவியும் கண்டனங்கள்

மேயர் பிரியாவிடம் அத்துமீறல்: ரெங்கநாதனுக்கு குவியும் கண்டனங்கள்

தீரன் சின்னமலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்வில், சென்னை மேயர் பிரியா ராஜன் கையைப் பிடித்து பலவந்தமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் இழுத்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் ரெங்கநாதனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில இங்கே…

முதல்வர் முன்னிலையில் இது நடந்துள்ளது கண்டிக்கதக்கது

திரைப்பட பாடலாசிரியை உமா தேவி

பொதுவெளியில் அதுவும் அதிகார மையங்களின் புழங்குவெளிகளில் பெண்கள் முதன்மைத்துவம் பெறுவது அரிது. அதிலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைப் பெண்கள் தமிழ்நாட்டு அரசியலில் அவ்விடத்தை அடைவது அரிதினும் அரிது என்பதற்கு சத்தியவாணி முத்து போன்றவர்களே சாட்சி.

அம்பேத்கரின் ‘அரசியல் சாசன இட ஒதுக்கீடு’ மட்டும் இல்லையென்றால் எல்லா சொகுசுகளும் வாய்த்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்த்து புரட்சி என்றும் புண்ணாக்கு என்றும் தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிபேசியே வாய்க்கரிசி போட்டிருப்பார்கள். தமிழகத்தில் இதனைக் குறைந்தபட்சமேனும் நடைமுறைப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு என்பதற்கு உதாரணம் பெண்களுக்குச் சென்னை மேயர் பதவியில் வகுத்திருக்கும் இட ஒதுக்கீடு எனலாம்.

நமது சென்னையின் மதிப்புமிக்க முதல் பெண் மேயரான ப்ரியா ராஜன் அவர்கள் தேர்வானபோது நமக்கெல்லாம் எந்த அளவிற்கு உணர்ச்சிப் பெருக்கும் உத்வேக நம்பிக்கையும் இருந்ததோ அதனினும் பண்மடங்கு அறுவறுக்கத்தக்கதாக உள்ளது முன்னால் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதனின் செயல்.

முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் ரெங்கநாதன் மேயர் ப்ரியாவிடம் ஆண் திமிரோடும் அதிகாரத் திமிரோடும் நடந்துகொண்ட விதம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒரு மனைவி – கணவன், தாய் – தந்தை, அக்கா – தம்பி, தங்கை – அண்ணன் போன்ற குடும்ப உறவுகளே பொது இடங்களில் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது ஒரு பொதுப்பண்பு. பெருந்திரளான சென்னை மக்களின் பிரதிநிதியான மேயர் ப்ரியா அவர்கள் முகம்சுளித்து சங்கடப்படும்படி அவரது இடது மேல்கையை வலுகட்டாயமாக அழுத்தித் திருப்பும் தைரியம் ரெங்கநாதனுக்கு எங்கிருந்து வந்தது? எதன்பொருட்டு வந்தது?

குடும்பம், சாதி, பொருளாதாரம், அரசியல் என்று பல்வேறு பின்புலங்களோடு இயங்கும் பிற பெண் ஆளுமைகளிடம் இப்படி நடந்துகொள்ள முடியுமா?

ஒருவரின் உடலைத் தொடுவதற்கும் உரசுவதற்கும் குறைந்தபட்ச நாகரீகமேனும் தெரிந்திருக்க வேண்டாமா?

நெரிசலான பேருந்து, இரயில்களில் பயணித்துவரும் சராசரி பெண்களின் அன்றாட வதை தான் மக்கள் மேயர் ப்ரியாவும் அன்று எதிர்க்கொண்டுள்ளார். எனில் இது அவர் பெண் என்பதிலிருந்தா அல்லது தலித் பெண் என்பதிலிருந்தா?

எதுவாயினும் பொதுவெளியில் மேயர் ப்ரியாராஜனிடம் திமுக. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

பொதுதளத்தில் பெண்களுக்கு பதவியுடன்கூடிய சுயமரியாதையும் முக்கியம் என்பதை அறிந்த இவ்வரசு பெண்களை மாண்புறச் செய்யும் விதம் இதுவேயாகும்.

இதில் நான்கு விஷயங்கள் உள்ளன

கவிஞர் சுகிர்தராணி

ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், பாலினச் சமத்துவமின்மை, கற்பு, தீட்டு, தீண்டாமை எல்லாவற்றிற்கும் காரணம் சாதியும் சாதிக்கு வேரான மதமும்தான். மதத்தை, குறிப்பாக மனுவின் மரு உருவமாக இருக்கக்கூடிய இந்துத்துவத்தைக் கேள்வி கேட்காமல் பேசப்படும் பெண் விடுதலையும் பெண்ணியமும் சாதி ஒழிப்பும் வீண்தான்.

பெண்ணை அடிமைப்படுத்துவதற்கு ‘பெண்’ என்னும் ஒரு காரணம் போதும். தலித் பெண் என்றால் கூடுதல் காரணம்.

சென்னையில் நடந்த விழா ஒன்றில், முதல்வர் இருக்கும்போதே, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரெங்கநாதன் என்பவர், மேயர் பிரியா ராஜன் அவர்களின் மேற்கையை இறுக்கமாகப் பிடித்து இழுக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன் கையை விடுவிக்க முயல்கிறார். அதிர்ச்சியும் அருவருப்பும் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால், ரெங்கநாதன் பிடியை விடுவதாக இல்லை.

நான்கு விஷயங்கள் இதில் உள்ளன.

பொது இடத்திலும் சரி, தனிப்பட்ட இடத்திலும் சரி, ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை வலுக்கட்டமாகத் தொடுதல், இழுத்தல், உடல்ரீதியான வன்முறை செய்தல் என்பதே சட்டப்படிக் குற்றம். ரெங்கநாதன் செய்தது தண்டனைக்குரிய குற்றம்.

சென்னை மாநகரின் மேயர். அவருக்கு உரிய மாண்பு அங்கு ரங்கநாதனால் மீறப்பட்டிருக்கிறது.

பெண் என்பதால் ஆணாதிக்கம் அங்கு செயல்பட்டிருக்கிறது. அவரின் பதவி, மாண்பு புறந்தள்ளப்பட்டு, ஆண்கள் நாங்கள் இருக்கும்போது நீ எப்படி முன்னால் நிற்கலாம் என்ற ஆணாதிக்கம் ரங்கநாதனை அப்படிச் செய்ய வைத்திருக்கிறது.

சென்னை மேயர் பதவி, பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்டதால், பிரியா ராஜன் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயர் பதவி என்பது ‘நாங்கள் உனக்குப் போட்ட பிச்சை’ என்னும் எண்ணமும், ‘நீயெல்லாம் எஸ்ஸி, போட்டோவுக்கு முன்னால் நிற்கிறாயா? பின்னால் வா!’ என்ணும் ஆளுங்கட்சித் திமிரும் சாதி ஆதிக்கமும் ரங்கநாதனை இப்படி ஒரு இழி செயலைச் செய்ய வைத்திருக்கலாம்.

திராவிடக் கொள்கைகளைப் பேசினால் மட்டும் போதாது. அவற்றைக் கடைபிடிக்கவும் வேண்டும்.

இன்றோ நாளையோ, அவர் என் அப்பா மாதிரி, நான் மகள் மாதிரி என்று மேயர் பிரியா ராஜனை சொல்ல வைக்கக் கூடும். என்றாலும் நாம் சொல்வதைச் சொல்வோம்.

தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள், ரெங்கநாதன் போன்ற ஆட்களுக்கு அறிவுரை கூற வேண்டும். ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் இவை போன்ற செயல்கள் தவிர்க்கப்பட நடவடிக்கை வேண்டும்.

பொது இடத்தில் சென்னை மேயர் ப்ரியா ராஜனிடம் அநாகரிகமாக, பண்பற்று நடந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். ரெங்கநாதன் தன் செயலுக்கு சென்னை மேயர் பிரியா ராஜனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரெங்கநாதனுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வருகிறது?

பேச்சாளர் வாசுகி பாஸ்கர்

ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவெளியில் ஒரு மாண்பு இருக்கிறது. தந்தை, கணவன் என்று யாராக இருந்தாலும் அந்த எல்லையை மீற முடியாது. கடந்த முறை அலட்சியமாக பேசிய கே.என். நேருவின் செயலுக்கு மேயர் பிரியாவை விட்டே உரிமை சார்ந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதே உரிமையை நேரு அதிகார மட்டத்தில் இருக்கும் மற்ற பெண்களிடம் எடுத்துக்கொள்ள முடியாது என்பதே யதார்த்தம்.

இம்முறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகத் துணிந்த பிரியாவை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுக்கிறார். அதற்கு முன் உரசிக் கொண்டிருந்தார்.

எங்கிருந்து இந்த தைரியம் வருகிறது? ரெங்கநாதன் எல்லோரிடமும் இப்படி செய்து விட முடியுமா?

ஒரு தலித்தை மேயர் ஆக்குவதை விட அவருக்கான மாண்புகளை உறுதி செய்வதும் முக்கியம். அதன் மூலமாக தான் பெண்கள், தலித்துகளுக்கான வாய்ப்பு என்பது வெறும் டோக்கனிசம் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையிலையே, ‘Diginty of Individual’ குறித்து பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். எந்தளவு தனி மனிதரின் மாண்பு குறித்து யோசித்து இருக்கிறார். அந்த அக்கறை ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

ரெங்கநாதன் மீது சட்டரீதியான நடவடிக்கை அவசியம்

எழுத்தாளர் கீதா நாராயணன்

பெரும் பதவிக்கு முதன்முறையாக வரும் இளம்பெண்களை கவர்ச்சிப் பொருளாகப் பாவிப்பது ஒரு மோசமான போக்கு.

முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கநாதன் இப்போது திமுகவில் இருப்பவர். இரண்டு சந்தர்ப்பங்களில் மேயர் பிரியா அவர்களைத் தவறாகத் தொடுகிறார். ஒன்று தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்த நிகழ்வு. இன்னொன்று ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது.

இதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திமுக நேரடியாகத் தலையிட வேண்டும். அவர் என் மகள்/ சகோதரி மாதிரி போன்ற வாதங்களை அனுமதிக்கக் கூடாது. மேயரின் மாண்பு குறித்த அக்கறை வேண்டும்.

பொது இடத்தில் பணிபுரியும் பெண்களைப் பற்றிய நமது கண்ணோட்டத்தில் இது நிறைய கேள்விகளை எழுப்புகிறது.

ரெங்கநாதன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்

கவிஞர் மாலதி மைத்ரி

இதென்ன கேவலம். தன் கண்ணெதிரே தன் கட்சி பெண் மேயர் அவமதிக்கப்பட்டதை தமிழக முதல்வர் கண்டிக்கவில்லையா? ரெங்கநாதன் தன் தகாத செயலுக்கு மேயர் பிரியா ராஜனிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

3 COMMENTS

  1. கனிமொழி அக்கா மணிப்பூர்ல அக்ரமம் நடந்தாதான் வீரமா போராட்டம் பண்ணுவாங்க.தன் கட்சிக்காரன் தமிழ்நாட்டில் அக்ரமம் செய்தால் கண் காது வாய் பொத்தி நிப்பாங்க..ஏன்னா தமிழ்பெண்களின் மானம் மரியாதை பொருட்டு கிடையாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...