கோவிட் வைரஸ் தனது கொண்டாட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வர, கடந்த இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த இந்திய சினிமா ஒரு வழியாக எழுந்து உட்கார்ந்திருக்கிறது.
இப்பொழுது இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனும் கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. வசூலில் களமிறங்கி வேட்டையாடிய படங்களில் நான்கு படங்கள் தென்னிந்தியப் படங்கள்தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுடன், குறிப்பாக ஹிந்தியிலும் வெளியான பான் – இந்தியா படங்களான கே.ஜி.எஃப்-2, ஆர்.ஆர்.ஆர். புஷ்பா மற்றும் விக்ரம், இந்திய சினிமாவிற்கு நம்பிக்கை அளித்திருப்பதோடு, பாலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.
2022-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியான படங்களில் மக்களின் வரவேற்பை பெற்ற படங்களும், அவற்றின் வசூலும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தாண்டின் ஜூன் மாதம் வரையில் வெளியான படங்களில் மக்களிடையே ஆதரவைப் பெற்ற படங்களில் எதிர்பாராத வெற்றியை ருசித்திருக்கிறது ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தியா முழுவதிலும் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திராத அளவிற்கு பேசப்பட்ட படமாக அமைந்தது மட்டுமே பாலிவுட்டிற்கு கிடைத்த ஆறுதல்.
ஆனால் இந்த டாப் 10 பட்டியலில் கெத்தாக அடுத்தடுத்து வரிசைக்கட்டியிருப்பவை பான் – இந்தியா படங்கள்தான். இரண்டாமிடத்தை கே.ஜி.எஃப்-2 படமும், மூன்றாமிடத்தை எஸ். எஸ். ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர். படமும் பிடித்திருக்கின்றன. இப்படங்களுக்கு மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு இந்திய சினிமாவின் வழக்கமான க்ளிஷேக்களை தகர்த்து எறிந்திருக்கிறது.
நான்காமிடத்தைப் பிடித்திருப்பது, நான்கு ஆண்டுகளாக சினிமாவில் வனவாசம் இருந்த, கமல்ஹாஸனின் ‘விக்ரம்’. எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாமல், திரையரங்குகளுக்குப் போன ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சர்ப்ரைஸ் சாலட் ஆக அமைந்ததே இதன் வெற்றிக்கு காரணம்.
வழக்கமான கமலின் புத்திசாலித்தனமான காட்சிகள், வசனங்கள் எதுவுமில்லாமல், ஒரு ஆக்ஷன் படத்திற்கான அம்சங்களை மட்டுமே சுவாரஸ்யமாக கொடுத்தது இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற வைத்திருக்கிறது. கமலுக்கு இப்படத்தில்தான் ஜோடி இல்லையே தவிர, இந்த நான்காமிடத்தைப் பகிர்ந்து கொள்வதில் அசத்தலான ஜோடி கிடைத்திருக்கிறார். அவர், மனதிற்கு நெருக்கமான உணர்வளிக்கும் யதார்த்தமான அழகின் அடையாளமாக இருக்கும் ஆலியா பட். ஆலியா பட தனது நடிப்பால் மிரட்டிய ‘கங்குபாய் கதியாவாடி படமும் விக்ரமுடன் இணைந்து நான்காமிடத்தைப் பெற்றிருக்கிறது.
இப்படங்களுக்கு அடுத்து அமிதாப் பச்சன் நடித்திருக்கும் ‘ஜூன்ந்’ திரைப்படம் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அக்ஷய் குமார் அதிக எதிர்பார்ப்போடு, ரொம்பவே மெனக்கெட்டு நடித்த ‘சாம்ராட் ப்ரித்விராஜ்’, இப்படம் இந்தியாவில் புதிய வசூல் சாதனையை படைக்கும் என பாலிவுட்டே எதிர்பார்க்க, ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கவில்லை. மாறாக வசூலில் இப்படம் ஆறாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்திருக்கிறது.
இப்படடியலில் தொடர்ந்து அஜய் தேவ்கனின் இயக்கத்தில் வெளியான ‘ரன்வே 34’, யாமினி கெளதமும், நேஹா தூபியாவும் நடித்திருக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கிய ‘ ஏ தேர்ஸ்டே’, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் மகன் ப்ரண்வ் மோகன்லால் நடித்த ‘ஹிருதயம்’ படமும் சொல்லிக்கொள்ளும் வகையிலான வசூலையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.
வெப் சிரீஸ்களை பொறுத்தவரை, ‘கேம்பஸ் டயரிஸ்’ மக்களிடையே ஏகோபித்த எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. விகாஷ் ஸ்வரூப்பின் புகழ் பெற்ற நாவலான ‘சிக்ஸ் சஸ்பெக்ட்’-ஐ தழுவி எடுக்கப்பட்டிருக்கும் ‘த க்ரேட் இந்தியன் மர்டர்’ இந்திய விண்வெளி துறையில் முன்னோடிகளாக போற்றப்படும் ஹோமி ஜே பாபா, விக்ரம் சாராபாய் போன்றோரின் கதைகளை அழகாக பிரதிபலிக்கும் ‘ராக்கெட் பாய்ஸ்’ போன்ற வெப் சிரீஸ்களுக்கு ரேட்டிங் கொட்டிக்கிடக்கின்றன.
இவற்றோடு ‘பஞ்சாயத்’. ‘ஹியூமன்’, ‘யே காலி காலி ஆங்கேன்’, ‘அஃபரான்’. ‘எஸ்கேய்ப் லைவ்’, ‘ மாய்’. ‘த ஃபேம் கேம்’ போன்ற வெப் சிரீஸ்களும் அதிகம் பார்க்கப்பட்டவையாக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.