No menu items!

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 04

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 04

இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம். வரும் நாட்களில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அளவு; பணம் இருந்தாலும் வாங்க பொருட்கள் இருக்காது எனும் நிலை வரும் என்று ஆட்சியாளர்களே எச்சரிக்கிறார்கள். ஏன் இலங்கை இப்படியொரு நெருக்கடிக்குள்ளானது? இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? வரும் நாட்கள் எப்படி இருக்கும்? இந்த மினி தொடரில் விளக்குகிறார் ஈழத் தமிழ் மூத்த பத்திரிகையாளர் கருணாகரன்…

லங்கையின் ‘காலிமுகத்திடல் போராட்டம்’ (Galle Face Revolation), மூன்று மாதத்தில் இலங்கை அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கியதைப் போன்றே வெளியே பலருக்கும் தெரிகிறது. ஆனால், உண்மையில் அப்படியொரு மாற்றம் எதுவும் இன்னும் ஏற்படவில்லை. ஆனாலும், அது நிகழுமா? அதாவது, அந்தப் போராட்டத்தில் கூறப்படுவதைப்போல ஒரு அடிப்படை அரசியல் மாற்றம் இங்கே நிகழுமா அல்லது இடையில் வேறு பல சக்திகளின் இடையீடுகளால் சறுக்கி விடுமா என்று பலரும் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி அதிரடியான மக்கள் எழுச்சிகள் பல இடங்களிலும் நடந்துள்ளன. ஆனால், அவையெல்லாம் எத்தகைய அரசியல் விளைவுகளை  – மாற்றங்களை உண்டாக்கின என்ற கேள்வியும் எழுகிறது. அரபு வசந்தமாக இருக்கலாம், மெரினா எழுச்சியாக இருக்கலாம் – எல்லாமே தோற்றம் காட்டிய அளவுக்கும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கும் வெற்றியை – மாற்றத்தை – உண்டாக்கவில்லை. ஒரு குறிப்பிட்டளவு அதிர்ச்சியை உண்டாக்கி விட்டு, மெல்ல அடங்கிவிட்டன. இதற்கான காரணங்கள் பல. முக்கியமாக நோக்கத்தை – இலக்கை – எட்டும்வரையில் தொடர்ச்சியில்லை. போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குச் சரியான தலைமைத்துவம் இல்லை. இப்படி இன்னும் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

காலிமுகத்திடல் போராட்டமும் ஏறக்குறைய இத்தகைய பண்பைக் கொண்ட ஒன்றே. ஆனால், காலிமுகத்திடல் (Go Home Gotta) போராட்டம் மிகக் கடினமான – சர்ச்சைக்குரிய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை (கோட்டாபய ராஜபக்சவை) விலக்கியுள்ளது. (கவனிக்கவும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அல்ல). மக்களுடைய எழுச்சியின் முன்னே படைகள் எதுவும் செய்ய முடியாமல் செயலிழக்கும் என்பதை நிரூபித்திருக்கிறது. முப்படைகள் மட்டுமல்ல, பொலிஸூம் செயற்படமுடியாமலே நின்றது. மொத்தத்தில் ராஜபக்சவினரின்  குடும்ப ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அரசாங்கத்தை நிலைதடுமாறச் செய்துள்ளது. இது முதல் கட்ட வெற்றி. ஆனாலும்,

ராஜபக்சக்கள் இன்னும் முழுமையாக அரங்கை விட்டுச் செல்லவில்லை. அவர்கள் இன்னும் பலத்தோடுதான் உள்ளனர். அவர்களுடைய திட்டத்தின்படியே இன்னும் பல அரசியற் தீர்மானங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவர்களுடைய நேரடித் தன்மை குறைந்து மறைமுக நிலை அதிகரித்திருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.

ராஜபக்சவினரின் ‘பொதுஜன பெரமுன’ என்ற கட்சிதான் நாடாளுமன்றத்தில் இன்னும் பெரும்பான்மையாக உள்ளது. ராஜபக்சக்களில் முதன்மையானவர்களான மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே உள்ளனர். அவர்கள் நினைப்பது அல்லது எதிர்பார்ப்பதே அதிகமாக நடக்கிறது. நேரடியாக முன்னுக்கு வராமல் திரைக்குப் பின்னிருந்து அவர்கள் இயங்குகின்றனர், இயக்குகின்றனர்.

இதோ இப்பொழுது நடந்து கொண்டிருப்பது இதற்கு நல்ல உதாரணம். புதிய (இடைக்கால) ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று (20.07.2022) நடக்கிறது.  அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி விலகினால் அல்லது மரணமடைந்ததால் இடைக்கால ஜனாதிபதியைத் தீர்மானிப்பது பாராளுமன்றமாகும். இதிலே மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னர் நான்கு பேர்  போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதி நேரத்தில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான எதிர்க்கட்சித் தலைவர்,  சஜித் பிரேமதாச பின்வாங்கி விட்டார். நாட்டின் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு டலஸ் அழகப்பெருமவை தான் ஆதரிப்பதாகவும் டலஸின் வெற்றிக்குப் பின்னர் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் தாம் பங்கேற்பதாகவும், அவர் சொல்லியுள்ளார். இதைக்குறித்து கடுமையான விமர்சனங்கள் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியினரிடத்திலும் மக்களிடத்திலும் எழுந்துள்ளன. பொறுப்பான சந்தர்ப்பத்தில் முடிவெடுப்பதில் சஜித் தடுமாறுகிறார், பலவீனமாக இருக்கிறார் என.

மற்ற மூவரும் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அநுரகுமார திசநாயக்க ஆகியோர். மூவரிலும்  இருவருக்கே கடுமையான போட்டி. ஒருவர் தற்போது பதில் ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க. மற்றவர் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும. இதில் ரணில் விக்கிரமசிங்க  வென்றுள்ளார். ஆனால், டலஸ் அழகப்பெரும வென்றிருந்தாலும் சரி, அதாவது இருவரில் யார் வென்றாலும் அது ஏற்படுத்தும் நிலைமை ஒன்றுதான். ஒன்று, ராஜபக்சக்களுக்கே முதல் வெற்றி. இரண்டாவது, மக்களுக்கு எந்தப் புதிய நன்மைகளும் கிட்டப்போவதில்லை. ஆட்சித்தன்மையோ கட்டமைப்பு மாற்றமோ நிகழமாட்டாது.

காரணம், இங்கே வேடிக்கை என்னவென்றால் இந்த இருவரையும் நிறுத்தியிருப்பதே ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன தான். ஆச்சரியமாக உள்ளதா? அதுதான் உண்மை. டலஸை பொதுஜன பெரமுனவின் தலைவரான ஜீ. எல். பீரிஸின் அணியும், ரணிலை அந்தக் கட்சியின் செயலாளரான காரியவசத்தின் தரப்பும் வெளிப்படையாகவே ஆதரிக்கின்றன.  இதற்குக் காரணம், பெரமுனவுக்கு இவர் வந்தாலும் வெற்றி, அவர் வந்தாலும் வெற்றி. அப்படியான ஒரு பொறிமுறையை அது வகுத்திருக்கிறது. அதனால், இருவருக்கும் ஆதரவளிக்கிறது. எவர் வந்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு நன்மை. ராஜபக்சவினர் காப்பாற்றப்படுவர் என்ற இரட்டை லாபம்.

அப்படிப் பார்த்தால் ராஜபக்சவினரின் மூளை சாதாரணமானதல்ல. இன்னும் பெரமுன அவர்களுடைய கைகளில் உள்ளதால், நாடாளுமன்றத்தில் அதுவே பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால், அவர்கள் பலமான நிலையில் – லாபத்தைப் பெறக்கூடியவர்களாக உள்ளனர். ஆக, இன்னும் எதையும் தீர்மானிக்கும் சக்தியாக ராஜபக்சக்களும் அவர்களுடைய பொதுஜன பெரமுனவுமே உள்ளது.

இந்தச் சூழலில் இன்னொரு வேடிக்கையையும் இங்கே நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். இந்தத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியைத் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்தும் பொதுஜனபெரமுனவுடன் நெருங்கி விட்டன, அதாவது ராஜபக்சக்களுடன். இதற்கு அவை என்னதான் நியாயங்களைச் சொன்னாலும் இதுதான் உண்மை. அதாவது டலஸூக்கு வாக்களித்தாலும் அதனுடைய இறுதி நன்மை அல்லது இறுதி விளைவு பொதுஜன பெரமுன = ராஜபக்சவினர். இதனை அநுரகுமார திசநாயக்க, “ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சவினரைப் பாதுகாக்க முற்படுகிறார் என்றால், டலஸ் அழகப்பெரும என்ன செய்யப் போகிறார்? டலஸ் அழகப்பெருமவும் மொட்டுக்கட்சியை காப்பாற்றவே முற்படுகிறார். அதன் வழியே ராஜபக்சக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஏனென்றால், மொட்டுக் கட்சியே ராஜபக்சவினருடையதுதான். அவர்களை மையப்படுத்திய ஒன்றுதான். ஆக மொத்தத்தில் இருவரும் மொட்டுக்கட்சியின் ஆதரவு ஆட்கள். இதனால்தான் இவர்கள் இருவரும் தவறானவர்கள்” என்று.

அநுரதிசநாயக்க மட்டுமல்ல,  பல அரசியல் நோக்கர்களும் இதைச் சுட்டிக் காட்டுகின்றனர். டலஸோ, ரணிலோ மாற்றங்களைத் தரப்போவதில்லை. நடந்த போராட்டம் இவர்களில் யாரையும் பதவியில் அமர்த்துவதற்கானதல்ல. ஆனாலும், அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இறுதியில் தவிர்க்க முடியாமல் சஜித்தும் தன்னுடைய எதிர்த்தரப்பான பொதுஜன பெரமுனவின் ஆளை – டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் நிலைக்குள்ளாகியுள்ளார். சஜித் மட்டுமல்ல, ராஜபக்சவினரின் கூடாரத்திலிருந்து வெளியேறிய இடதுசாரிகளின் கூட்டு எனப்படும் ‘சுயாதீன அணி’யும் டலஸையே ஆதரிக்கிறது. ராஜபக்சவினரையும் ‘மொட்டுக்கட்சி’ என்ற பொதுஜன பெரமுனவை வெளிப்படையாகக் கடுமையாக விமர்சிக்கின்ற – எதிர்க்கின்ற தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகளும் பெரமுனவின் ஆளான டலஸையே ஆதரிக்கின்றன. ஆக மொத்தத்தில் இப்பொழுது எல்லோரும் மொட்டுக்கட்சியின் கூடாரத்துக்குள் வந்துவிட்டனர். அதாவது ராஜபக்சக்களின் வளையத்துக்குள் வீழ்ந்துள்ளனர். இதனைக் குறித்து பலரும் ஏராளம் கேலி செய்கிறார்கள்.

ரணில், டலஸ் ஆகிய இருவருடைய வெற்றிக்கும் அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் அதிகப்படியான வாக்குகள் வேண்டும். அந்த வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியுடையவை. இருவரும் அந்தக் கட்சியின் ஆதரவில்தான் தங்கியுள்ளனர் என்பதைப்போல அந்தக் கட்சிக்கும் இருவரும் வேண்டும். அதனால் இருவரையும் அந்தக் கட்சி ஆதரிக்கிறது என்றவாறாக நிலைமை ஆகியுள்ளது. இத்தகைய குழப்பமும் முட்டாள்தனமும் கையறு நிலையுமான அரசியற் சூழல் கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கையில் நிலவுகிறது. இது எதிரெதிர் நிலைப்பாடுகளை உடைய தரப்புகளை வேறு வழியில்லாமல் ஒன்றில் ஒன்று தங்கியிருக்க வேண்டி வைத்திருக்கிறது. 2015இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வரலாற்று ரீதியாகவே எதிர்த்தரப்பாக இருந்த சுதந்திரக் கட்சி இணைந்து செயற்பட வேண்டியிருந்தது. அதன் விளைவாகவே மைத்திரிபால சிறிசேன (சிறிலங்கா சுதந்திரக்கட்சி) ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க (ஐக்கிய தேசியக் கட்சி) பிரதமராகவும் வந்தனர். ஆனாலும், பதவியில் எட்டப்பட்ட ஒருங்கிணைவு ஆட்சியில் நிகழவில்லை. முடிவு இடையில் அந்த அரசு கவிழ்ந்தது.

பின்னர் வரலாறு முழுவதும் எதிரெதிர் முகாமலிருந்த மகிந்த ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்தனர். இப்பொழுது ரணில் மீதான கடுமையான விமர்சனமே அவர் ராஜபக்சவின் ஆளாகச் செயற்படுகிறார் என்பதுதான். அப்படி ஒரு நெருக்கமும் இணைவும் இருந்தாலும் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் இன்னொரு வடிவமாக டலஸ், ரணில் என்ற இருவரை நிறுத்தி, இருவருக்கும் அனைவரையும் ஆதரவளிக்கும் ஒரு நிலையை உருவாக்கி அரசியல் விளையாட்டைச் செய்கின்றனர் ராஜபக்சக்கள்.

அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் செயற்படும். தமது நலனுக்காகவும் தொடர்ச்சியான இருப்புக்காகவும் ஒன்றுக்குள் ஒன்று அது எப்படி விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளல்களையும் செய்யும் என்பதற்கு அழகிய உதாரணம் இன்றைய இலங்கை அரசியல்.

அரசியலில் எப்போதும் ஆச்சரியங்களும் அதிரடித் திருப்பங்களும் இருப்பதுண்டு. ஆனால், அவை தலைகீழ் மாற்றங்களாகவோ முடிவுகளாகவோ இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அது சுய அழிவிலும் சமூகச் சிதைவிலும்தான் போய் முடியும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் நாடகத்தில் தீவிர விரோதச் சக்திகள் எல்லாமே ஒன்றிணைந்திருக்கின்றன. தமிழ், முஸ்லிம் விரோதச் சக்திகளான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்றவையும் இணைந்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால் இதில் பிரபாகரனையும் புலிகளையும் கடுமையாக எதிர்ப்போரும் உண்டு. தீவிரமாக ஆதரிப்போரும் உண்டு. ஆனால், அரசியற் குத்துக் கரணத்தில் இதெல்லாம் கண்டு கொள்ளப்படவே இல்லை. இந்த நலன் சார்ந்த இணைவும் சேர்ந்த நடவடிக்கைகளும் அரசியற் தற்கொலைகளே தவிர, ஆக்கபூர்வமானவை அல்ல.

இதனால்தான் இலங்கை மேலும் மேலும் குழப்பத்திலும் சீரழிவிலும் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. இதற்குக் காரணம், மக்களைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் சிந்திக்காத ஒரு அரசியற்பாரம்பரியம் இலங்கையில் வளர்ச்சியடைந்திருப்பதேயாகும். ஜனநாயக உரிமைகளைப் பற்றியும் மக்களின் நலன், நாட்டின் முன்னேற்றம் போன்றவற்றையும் சிந்திப்பதற்குப் பதிலாக இனரீதியாகச் சிந்திக்க முற்பட்டதே அடிப்படைத் தவறாகும். இனரீதியாகச் சிந்திப்பதென்பது இனவாதமாகச் சுருங்கிச் செயற்படுவது என்றானது. இதனால் ஒவ்வொரு தரப்பிலும்  நடக்கும் தவறுகள் காணாமல் விடப்பட்டன. அல்லது நியாயப்படுத்தப்பட்டன.  இதனால் தவறுகள் பெருகின. தவறான அரசியற் பாரம்பரியம் உருவாகியது. தமது தவறுகளை மறைப்பதற்கு இனவாதத்தைப் பெருப்பித்துப் பெருப்பித்தே ஒவ்வொரு தரப்பும் வந்துள்ளன. அவற்றின் வளர்ச்சியே இன்றைய விளைவுகள். மக்களை இனரீதியாகப் பிளவுபட வைத்து விட்டு, தாம் தமது தேவைக்கேற்ப இணைந்தும் பிரிந்தும் (பிரிந்த மாதிரியும்) முரண்பட்டும் அரசியல் செய்து கொள்வது. இந்தப் பாரம்பரியத்துக்கு வயது அறுபதுக்கு மேல். ஆனாலும் இன்னும் அது தளராமல், மூப்படையாமல் இளமைத்துடிப்புடன்தான் செயற்பாட்டுக்களத்தில் உள்ளது. ஏறக்குறைய இது மிகக் கீழ்த்தரமான அரசியல் வணிகம். இதை அரசியல் தந்திரோபாயம் என்று என்னதான் நியாயப்படுத்தினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படித் தந்திரோபாய அரசியல் என்றால் அதனால் நன்மைகள் எட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படியான நன்மைகள் இதுவரையில் நாட்டுக்கோ மக்களுக்கோ ஏற்பட்டிருக்கிறதா? இல்லையே. இந்தத் தந்திரோபயத்தின் (வணிகத்தின்) மூலம் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும்தான் நன்மையை அடைந்து வந்திருக்கின்றன. இன்றும் அதுதான் நிலைமை.

இத்தகைய அரசியலின் வளர்ச்சியினால் இலங்கையில் எப்போதும் மக்கள் வெற்றியடைவதில்லை, தலைமைகளே வெற்றியடைகின்றன. மக்கள் நன்மைகளைப் பெறவில்லை, தலைமைகளே நன்மைகளை அனுபவிக்கின்றன. இதை இன்றைய வரலாற்றுச் சூழலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இதை மாற்றுவதற்கென உருவாகிய – உருவாக்கப்பட்ட – காலிமுகத்திடல் எழுச்சி இன்று அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத கட்டத்தில் நிற்கிறது. வரலாற்றின் துயரம் இதுவன்றி வேறென்ன?

உண்மையில் இந்த வீழ்ச்சி அல்லது தடுமாற்றம் ஏன் ஏற்பட்டது? எப்படி நிகழ்ந்தது? இதுவே ஆய்ந்தறிய வேண்டியதாகும்.

(தொடரும்)

இத்தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க…

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 01

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 02

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...