No menu items!

கோவிஷீல்டை திரும்ப பெற்ற நிறுவனம்: அப்ப போட்டவங்க கதி 😯

கோவிஷீல்டை திரும்ப பெற்ற நிறுவனம்: அப்ப போட்டவங்க கதி 😯

கொரோனாவுக்காக போடப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியானது, பக்க விளைவாக இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

தடுப்பூசியும் மாரடைப்பும்

சீனாவில் கடந்த 2019இல் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அதில் இருந்து உலகம் மீண்டு வர நான்கு ஆண்டுகள் ஆனது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர கொரோனா தடுப்பூசிகள் முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அன்றே திரைப்பட நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல் கொரோனாவுக்கு பின்னரும் இன்று வரை மாரடைப்பு மரணங்கள் ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. குறிப்பாக இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா தடுப்பூசிகளும் ஒரு காரணம் என சில மருத்துவர்களே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,  பிரிட்டனில் ஏப்ரல் 2021 அன்று அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். மேலும், அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியானது, இறப்புகளையும் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதாகக் கூறியும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியானது, கோவிஷீல்ட், வாக்ஸ்செவ்ரியா என்ற பெயர்களில் உலகளவில் விற்கப்பட்டது. இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டன. கோவிஷீல்டு தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்று, தடுப்பூசிகளை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேலே குறிப்பிட்ட வழக்கில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், அரிதான நிகழ்வுகளில் கோவிஷீல்டு பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. 

மேலும், “கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவுக்கும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கும் வழிவகுக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) என்றும் அழைக்கப்படுகிறது.

இரத்தம் உறைதல் ஏற்பட்டால், ரத்த ஓட்டமானது பாதிக்கும் சூழல் உருவாகும், பிளேட் செல் குறைந்தால், இரத்த வெளியேற்றத்தின்போது கட்டுப்படுத்தும் தன்மையானது குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசியை திரும்பப் பெற்ற அஸ்ட்ராசெனகா

கொரோனாவுக்காக போடப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி, பக்க விளைவாக இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்ற தகவல் இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராசெனகா  நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் தங்களின் ’வேக்ஸ்சேர்வியா’ (இந்தியாவில் கோவிஷீல்டு) கரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய வகை கரோனாவை எதிர்கொள்லும் பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு சந்தைகளில் இருப்பதால், கோவிஷீல்டு தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தடூப்பூசி போட்டவங்களுக்கு இனியும் பாதிப்பு இருக்குமா?

இந்தியாவில் சீரம் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால், லண்டன் உயர்நீதிமன்றத்தில் அஸ்ட்ராசெனகா தாக்கல் செய்த ட அறிக்கையின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் காருண்யா, ரிதாய்கா ஆகிய இளம்பெண்கள் உயிரிழந்துள்ளதாக கூறி அவர்களின் பெற்றோர்களும் சீரம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனிடையே, இது தொடர்பாக ’வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த, தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார், “வழக்கத்தில், ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி கிடைக்க வேண்டுமானால், அந்தக் கிருமியை வீரியம் இழக்கவைத்து மிகச் சிறிய அளவில் உடலுக்குள் செலுத்த வேண்டும். இதன்படி, கரோனா கிருமியின் கூர்ப்புரதத்தை (Spike protein) அடினோ வைரஸ் மரபணுவில் மாற்றியமைத்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி வழியாகச் செலுத்தினார்கள். அது உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்களின் உயிரைக் காப்பாற்றியது.

அதேவேளை, 10 லட்சம் பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள் என்றால், அவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர்தான் (0.0005%) ரத்தம் உறையும் பிரச்சினையால் அவதிப்பட்டார்கள். ஆக, இந்தத் தடுப்பூசியால் கரோனாவின் இரும்புப் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்தான் அதிகம்; பாதிக்கப்பட்டவர்கள் மிக மிகக் குறைவு.

இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்தப்பட்டதில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகப் புள்ளிவிவரம் எதுவும் இல்லை. இதிலிருந்தே இதன் பாதுகாப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவு என்பது தடுப்பூசியின் பக்க விளைவு (Side effect) அல்ல! எந்த வைரஸ் உடலைத் தாக்கும்போது ரத்தத்தை உறைய வைத்ததோ, அதே வைரஸின் உடல் பாகம்தான் தடுப்பூசியிலும் இருக்கிறது. எனவே, அவரவர் உடல் தன்மையைப் பொறுத்து, தடுப்பூசியில் இருக்கும் வைரஸ் மிக அரிதாக ரத்த உறைவை ஏற்படுத்துகிறது.

இது காலங்காலமாக ரத்த உறைவை ஏற்படுத்துமா என்று கேட்டால், அதுவும் இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட 42 நாள்களுக்குள் இந்த ரத்த உறைவு ஏற்பட்டுவிடும். அதற்குப் பிறகு அது ஏற்பட வாய்ப்பே இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் ரத்த உறைவு குறித்த அச்சம் தேவையே இல்லை.

நவீன மருத்துவத்தில் மருந்தானாலும் சரி, தடுப்பூசியானாலும் சரி, எத்தனை பேருக்குப் பலன் கிடைக்கும், எத்தனை பேருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கவனித்து, பலன் மிக அதிகமாகவும் பாதிப்பு மிக மிகக் குறைவாகவும் உள்ளவை மட்டுமே நடைமுறைக்கு வருகின்றன. அப்படிப் பாதிப்பு உள்ளவற்றையும் மறுபடி மறுபடி ஆய்வுக்கு உள்படுத்தி, பாதிப்பைக் குறைக்கும் பணியைத்தான் நவீன மருத்துவம் முன்னெடுக்கிறது.

இப்போதெல்லாம் திடீர் உயிரிழப்பு என்றதும் அநேகருக்கும் கரோனா தடுப்பூசி மீது சந்தேகம் வருகிறது. ஆனால், மாரடைப்பைத் தூண்டும் நவீன வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த அவர்கள் தவறுகிறார்கள்.

கரோனாவுக்குப் பிந்தைய நம் வாழ்க்கைமுறையும் பெரிதும் மாறியுள்ளது.  உணவுமுறை நவீனமடைந்துள்ளது. உடற்பயிற்சி குறைந்தே போனது. உடல் பருமன் அதிகரித்துள்ளது. உறக்கம் தொலைந்துள்ளது. இளம் வயதில் மது, புகை, போதைப்பழக்கங்கள் ரொம்பவே அதிகரித்திருக்கின்றன. இன்றைய பணிச் சூழலில் எல்லாத் துறைகளிலும் பணி அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அது மன அழுத்தமாக மாறிவிடுகிறது. ரத்த அழுத்தம் எகிறுகிறது; நீரிழிவு வருகிறது. மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஜிம் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளை இளையோர் மேற்கொள்கின்றனர். உளவியல் சிக்கல்கள் மேலும் கூடியுள்ளன. இவ்வளவும் சேர்ந்துதான் திடீர் மாரடைப்பை அதிகரித்துள்ளன. ஆகவே, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படும் என்கிற அச்சத்துக்கு இனி அவசியமில்லை” என்று டாக்டர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...