No menu items!

பயப்படுறீங்களா மோடிஜி! – ராகுல் Vs மோடி வார்த்தைப் போர்

பயப்படுறீங்களா மோடிஜி! – ராகுல் Vs மோடி வார்த்தைப் போர்

தேர்தல் பிரச்சார களத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணத்தை அதானியும் அம்பானியும் கொடுத்தார்களா என்று நரேந்திர மோடி கேட்க, இதில் உண்மைத் தன்மையை அறிய அவர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை மூலம் சோதனை நடத்துங்கள் என்று ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக ஆட்சி நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு பாஜக ஆட்சியில் பல சலுகைகளை கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுபோன்ற புகார்களுக்கு பொதுவாக பாஜக தலைவர்கள் எதிர்வினையாற்றுவது இல்லை. அம்பானி பற்றியோ, அதானி பற்றியோ நரேந்திர மோடி பொது மேடைகளில் பேசுவதில்லை.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய நரேந்திர மோடி, “காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அம்பானி, அதானி பற்றி மட்டும் அவர் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி, அதானி பற்றி பேசுவதை காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்தியது ஏன்?

அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன். இதுகுறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

நரேந்திர மோடிக்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

மோடிஜி பயந்துவிட்டீர்களா?.. பொதுவாக பூட்டிய அறைகளில்தான் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பேசுவீர்கள். பொதுவெளியில் அதானி மற்றும் அம்பானி பற்றி நீங்கள் பேசுவது இதுவே முதல்முறை. அவர்கள் இருவரும் காங்கிரஸுக்கு டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். இதில் உங்களுக்கு தனிப்பட்ட அனுபவம் எதுவும் இருக்கிறதா?.

அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு டெம்போவில் பணம் அனுப்பினார்களா என்பதை அறிய சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை சோதனை நடத்துங்கள். பயப்பட வேண்டாம், மோடி ஜி.

நரேந்திர மோடி அம்பானி மற்றும் அதானிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அதே அளவு இந்தியாவின் ஏழை மக்களுக்கு நாங்கள் கொடுப்போம். . பாஜகவினர் 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளனர். நாங்கள் கோடிக்கணக்கான மக்களை கோடீஸ்வரர்களாக உருவாக்குவோம்.

இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் 3 சுற்று வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இரு தலைவர்களின் வார்த்தைப் போர் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...