“அண்ணாமலைக்கு உடம்பு சரியாயிடுச்சு போல…” என்று கேட்டவாறு ஆபீசுக்கு வந்த ரகசியாவை வரவேற்றோம்.
“அண்ணாமலை அடுத்த கட்ட நடைப்பயணத்தை திரும்பவும் தொடங்கிட்டாரே… அதைவச்சு கேட்கிறீங்களா?. இந்த நடைப்பயணத்துக்கு அனுமதி கொடுக்கறதுக்கு முன்னாடி, ‘நடைப்பயணத்தில் எந்தக் கட்டத்திலும் அதிமுக பற்றி விமர்சனம் செய்யக் கூடாது’ன்னு அவருக்கு டெல்லி தலைமை உத்தரவு போட்டிருக்கு. இந்த மூன்றாவது கட்ட நடைப்பயணத்தை பியூஷ் கோயல்தான் தொடங்கி வச்சிருக்கார்.”
“அவர் அதிமுக ஆதரவு தலைவராச்சே.”
“ஆமாம். மூன்றாவது கட்ட நடைப்பயணத்தை தொடங்கி வைக்க அவரை அனுப்பியதன் மூலமா அதிமுக மேல தங்களுக்கு இன்னும் சாஃப் கார்னர் இருக்குன்னு அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உணர்த்தி இருக்கு. அதோட பியூஷ் கோயல் மூலமா இன்னும் டெல்லி தலைமை அதிமுகவோட பேசிட்டு இருக்கறதா சொல்றாங்க.”
“ஒரு பக்கம் அதிமுக மேல பாஜகவுக்கு சாஃப்ட் கார்னர் இருக்கறதா நியூஸ் வருது. ஆனா இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேல திமுக்காரங்க கடுப்புல இருக்காங்களாமே?”
“அதுக்கு காரணம் இருக்கு. தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிட்டதா முதல்வர் பெருமையா சொல்லிட்டிருக்கார். ஆனா இந்த நேரத்துல ‘நீங்கள் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள்’னு ஒரு பட்டியலை சமீபத்தில் முதல்வரைச் சந்திச்சு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொடுத்திருக்காங்க. அதோட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்துட்டு வர்றதும் முதல்வரை கடுப்பேத்தி இருக்கு. அதிமுக பக்கம் போறதுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டு வருதோன்னு முதல்வர் சந்தேகப்படறார். கம்யூனிஸ்ட் இல்லாத கூட்டணியை அமைக்கலாமோன்னும் அவர் யோசிச்ச்ட்டு வர்றதா சொல்றாங்க”
“திமுக மகளிர் அணி மாநாட்டைப் பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?”
“திமுக மகளிர் உரிமை மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற ஒரு மாநாடா இருந்திருக்கு. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற பெண் தலைவர்கள் பலரும் மாநாட்டுக்கு வந்தது அதோட வெற்றிக்கான காரணமா சொல்லப்படுது. ஆனா இந்த மாநாட்டைப் பிரபலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திமுக ஐடி விங் செய்யல. டிசம்பர் மாதம் சேலத்தில் நடக்கப்போற இளைஞர் அணி மாநாடுதான் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கணும்கிறது உதயநிதி ஸ்டாலினோட விருப்பம். அதனால மகளிர் உரிமை மாநாட்டை ட்ரெண்டிங் செய்வதில் திமுக ஐடி விங் கொஞ்சம் அடக்கி வாசித்தா சொல்றாங்க. இதனால் கனிமொழிக்கு வருத்தம். கடுப்பு. அதனால கனிமொழியை சமாதானப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் அழைச்சு பாராட்டி இருக்கார். இதனால கனிமொழி கொஞ்சம் சமாதானம் ஆயிட்டாராம்.”
“மாநாட்டுக்கு வந்த சோனியா காந்தி, அப்படியே காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்துலயும் கலந்துகிட்டாரே?”
”முதல்ல இந்த கூட்டத்துல சோனியா காந்தி கலந்துக்கறது சந்தேகமா இருந்துச்சு. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை சோனியா காந்தி சந்திக்க மாட்டார்னே சொன்னாங்க. ஆனா தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை தொடர்புகொண்டு, ‘காங்கிரஸ் நிர்வாகிகளை சோனியா காந்தி கட்டாயம் சந்திக்கணும். இல்லைன்னா அவர் ஏதோ திமுக மாநாட்டுக்கு மட்டும் வந்ததுபோல ஆயிடும். இது தமிழக காங்கிரஸில் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். அதனால நிர்வாகிகள் சந்திப்பு கட்டாயம் நடக்கணும்’னு சொல்லி இருக்கார். அதுக்கு பிறகுதான் காங்கிரஸ் நிர்வாகிகளை சோனியா காந்தி சந்திச்சாராம்.”
“நிர்வாகிகள் கூட்ட்த்தில் என்ன நடந்துச்சுன்னு ஏதும் தெரியுமா?”
“காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சோனியா காந்தியிடம் பீட்டர் அல்போன்ஸ், கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணி போன்ற தலைவர்கள் காங்கிரஸ் தலைவரை மாற்றணும்னு கோரிக்கை வச்சிருக்காங்க. பீட்டரும், கார்த்திக் சிதம்பரமும் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இளைஞர். சுறுசுறுப்பாக செயல்படுகிறார்னு சொல்ல, இதை ரசிக்காத சோனியா காந்தி, ‘காங்கிரஸ் தலைவரை மாத்தறது இருக்கட்டும். தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு நீங்க என்ன செஞ்சீங்க?’ அதை முதல்ல சொல்லுங்க’ன்னு கேட்டிருக்கார். அதுக்கு பிறகு அழகிரிக்கு எதிரான குரல்கள் அடங்குச்சாம்.”
“உதயநிதி மேல நிதித்துறை அதிகாரிங்க வருத்தத்துல இருக்காங்களாமே?”
“எல்லாத்துக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்தான் காரணம். மகளிர் உரிமைத் தொகை ஏற்கெனவே திட்டமிட்டதை விட அதிகமா இப்ப 1 கோடியே 6 லட்சம் பேருக்கு வாழங்கப்படுது. இந்த நிலையில உதயநிதி ஸ்டாலின் போற இடங்களில் எல்லாம், ‘இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யுங்கள். விண்ணப்பம் செய்யாதவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்’ன்னு தொடர்ந்து சொல்லிட்டு வர்றார். மகளிர் உரிமைத் தொகைக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட ஏற்கெனவே 3 மடங்கு செலவாகுது. அதையே எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம நிதித்துறை திணறுது. அப்படி இருக்கும்போது உரிமைத்தொகை கேட்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சொல்லி தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிட்டு வர்றது நிதித் துறை அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கு.”
“அவங்க அதைப்பத்தி நிதித்துறை அமைச்சர்கிட்ட சொல்ல வேண்டியதுதானே?”
“சொல்லாம இருப்பாங்களா?… அவங்க புகார் சொல்லி இருக்காங்க. அதுக்கு அமைச்சர், ‘உதயநிதி கட்சியின் நிலைப்பாட்டைத்தான் பேசிட்டு இருக்கார். அதில் ஒண்ணும் தவறில்லை’ன்னு சொல்லி இருக்கார். அதனால இப்ப அந்த செலவை எப்படி எதிர்கொள்றதுன்னு நிதித்துறை அதிகாரிங்க திணறிட்டு இருக்காங்களாம்.”
“சொல்றதுதானே…செய்யணும்கிற கட்டாயம் இல்லையே எதுக்கு திணறுனும்”