No menu items!

தமிழிசை Vs முரசொலி – மிஸ் ரகசியா!

தமிழிசை Vs முரசொலி – மிஸ் ரகசியா!

“ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு திடீர்னு வந்துருச்சே…. யாருமே எதிர்பார்க்கலையே…. நீ கூட தகவல் சொல்லலையே?” என்று அலுவலகத்துக்குள் நுழைந்த ரகசியாவிடம் முதல் கேள்வி கேட்டோம்.

“உண்மைதான். யாருக்குமே தெரியல. ஆனா இப்படிதான் தீர்ப்பு வரும்னு நினைச்சதுதான். பேரறிவாளனை விடுதலை செய்யும்போதே அடுத்த ஆறு பேருக்கும் இதே மாதிரியான தீர்ப்பு வரும்னுதான் எதிர்பார்த்தாங்க. அதே மாதிரி வந்துருச்சு.”

“நாடாளுமன்றத் தேர்தல் நேரத்துல தீர்ப்பு வரும்… அதன் பலனை பாஜக எடுத்துக்கும்னுலாம் சொன்னாங்களே.”

“இல்ல. அதுக்கு வாய்ப்பு கிடையாது. ஏன்னா இது முழுக்க முழுக்க நீதிமன்றத்துல நடந்துருக்கு. விடுதலைக்கு எதிர் நிலையைதான் மத்திய அரசு எடுத்துருந்தது. அதனால இதுல பாஜக ரோல் எதுவும் கிடையாது. கவர்னர்களுக்குதான் கொஞ்சம் மண்டை குடைச்சலாகும்.”

“ஏன்….?”

“மாநில அரசின் தீர்மானத்தின்படிதானே தீர்ப்பு வந்திருக்கு. ஆளுநர் தாமதம் செஞ்சா கோர்ட் தலையிடும் வாய்ப்பு இந்த தீர்ப்பின் மூலம் கிடைச்சிருக்கு. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அந்த வகையில இது முக்கியமான தீர்ப்புதான்” என்றாள் ரகசியா.

”இந்த தீர்ப்பு வந்ததால பிரதமரோட தமிழ்நாடு விசிட் பத்தின செய்திகள் பின்னாடி போயிருச்சு… பிரதமர் விசிட் பத்தி சொல்லேன்.”

“அதைப் பற்றி சொல்லும் முன் இனிப்பான செய்தி ஒன்றை சொல்லி ஆரம்பிக்கிறேன். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷனில் இலவச பொருட்களை வழங்குவதைவிட ரூ.1,000 வழங்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட இலவச பொருட்கள் தொடர்பாக நிறைய புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

 “நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். சரி, பிரதமர் வருகை பற்றி சொல்வதாக சொன்னாயே?”

“தென் மாநிலங்களில்…. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலரவைக்க வேண்டும் என்ற பாஜக தலைமையின் லட்சியக் கனவுதான் இதற்கு முக்கிய காரணம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தென் மாநிலங்களில் வலுவாக காலூன்ற நினைக்கிறது பாஜக. இதன் ஒரு பகுதியாக மதுரை, கோவை, திருச்சி ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொள்ளப் போகிறாராம். உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை, விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வாராம். இதெல்லாம் அடுத்த 6 மாதங்களுக்குள் நடக்கும் என்கிறார்கள் கமலாலய தலைவர்கள். இது தவிர அனைத்து மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டு உள்ளதாம்.”

“ஆக்டோபஸைப் போல் தமிழகத்தை சுற்றி வளைக்க பாஜக தன் கைகளை நீட்டுகிறது என்று சொல். அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது?”

“கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடியை இடைக்கால பொதுச் செயலாளராக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடவே 4 மாதங்களில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 4 மாதங்கள் முடிந்துவிட்டதால் எடப்பாடியின் பொதுச் செயலாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறிவருகிறது. ஆனால், எடப்பாடி தரப்பு, ‘புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை எடப்பாடி பொதுச் செயலாளராக நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். நீங்கள்தான் பொதுக்குழுக்கே வரவில்லையே உங்களுக்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியும்?’ என்று அவர்களைக் கலாய்க்கிறார்களாம்.”

“நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக இணைய வாய்ப்பு இருக்கிறதா?”

“டெல்லியில் எடப்பாடி தன்னை சந்தித்தபோதே அமித் ஷா இதைப் பற்றியெல்லாம் பேசினாராம். ஆனால் அப்போதே அவரது யோசனைகளை ஏற்க எடப்பாடி மறுத்துள்ளார். அதனால்தான் அப்போது பிரதமரை சந்திக்க எடப்பாடிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க இருவரும் முயற்சித்து வருகிறார்கள். அப்படி சந்தித்தால், பிரதமரும் இணைந்து செயல்படுங்கள் என்றுதான் சொல்வார் என்கிறார்கள். ஓபிஎஸ் அதற்கு தயாராக இருந்தாலும், எடப்பாடிக்கு அது பிடிக்கவில்லை. அவரது ஆதரவாளர்களும் ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என்கிறார்கள். எனவே பிரதமரே தலையிட்டாலும் அதிமுக இணைவது கொஞ்சம் கஷ்டம்தான்.”

“போன தடவை வரும்போது இணைவதற்கு வாய்ப்பு இருக்குன்ற மாதிரி சொன்னியே….”

“ஓபிஎஸ் தரப்பு ஒகே தான். ஆனா எடப்பாடி முரண்டு பிடிக்கிறார். எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா எல்லோரையும் இணைக்கணும்கிறதுதான் பாஜகவோட விருப்பம்”

“மெகா கூட்டணி வைப்போம்னு எடப்பாடி சொல்றாரே”

“அவர் சொல்ற 11 கட்சி இங்க எங்க இருக்கு? அத யோசிச்சுப் பாத்திங்களா?” சிரித்தாள் ரகசியா.

“10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு நடத்துகிறதே?”

“இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கு எதிர்மாறான நிலையை இப்போதைக்கு காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. இருப்பினும் திமுகவின் கூட்டணி கட்சி என்ற முறையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று அக்கூட்டத்தில் ஆளுங்கட்சி சார்பாக சொன்னால் காங்கிரஸ் கட்சி அதை ஆதரிக்கும் என்கிறார்கள் இதுதானே கூட்டணி தர்மம் என்றும் சொல்கிறார்கள்”

“ராஜீவ் கொலை வழக்கு விடுதலைலயும் காங்கிரஸ் மாற்று நிலை எடுத்திருக்கிறதே..”

“ஆமாம். ஆனால் அது கட்சியினரின் முழுமையான நிலை அல்ல, என்னிடம் பேசிய ஒரு காங்கிரஸ் எம்.பி. என் கருத்து கட்சிக்கு மாறானது. ஆனா வெளில சொல்ல மாட்டேன் என்றார்.”

“யாரவர்?”

“ராகுல் காந்தியின் ஆதரவைப் பெற்றவர்..போதுமா க்ளூ?”

“நீயும் கிசுகிசு சொல்ற ஜோதில ஐக்கியமாகிட்டே.” சிரித்தோம்.

“ஆனா ஒரு விஷயம் கூட்டணிக் கட்சியினருக்கு முதல்வர் மீது கொஞ்சம் வருத்தம் இருக்கிறது. எந்த விஷயத்திலும் தங்களை கலந்து ஆலோசிக்க மாட்டேங்கிறார், விஷயங்களை கேட்டு அறிந்துக் கொள்ள மாட்டேங்கிறார்..என்ற முணுமுணுப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்த முணுமுணுப்புகளை முதல்வர் காதுகளுக்கு மூத்த திராவிடத் தலைவர் கொண்டு சென்றிருக்கிறார். முதல்வர் மாறுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் கூட்டணிக் கட்சியினர்.”

“முதல்வர் எளிதில் அணுகக் கூடியவராகதானே இருக்கிறார்…. என்ன சிக்கல்?”

“கலைஞர் வாரத்தில் ஒருநாளாவது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் தொலைபேசியிலோ நேரிலோ பேசுவார். அதுபோல் இவர் இல்லை என்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அமைச்சர்களே சில கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கிறார்களாம்.”

“என்ன கருத்து?”

“உதாரணத்துக்கு மூத்த அமைச்சர் தொகுதியில் மின் கட்டணம் குறித்து கடுமையான புகார்கள் வந்திருக்கின்றன. இந்த புகார்கள் தொடர்ந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கட்சிக்காரர்களிடம் சொல்கிறார். ஆனால் தலைமையிடம் சொல்ல தயங்குகிறார்.”

“ஆளுநர் – முதல்வர் மோதலைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் ஏதும் இருக்கிறதா?”

“தமிழக ஆளுநரைப் பற்றிய செய்திகள் ஏதும் இல்லை. ஆனால் தெலங்கானா ஆளுநர் தமிழிசையைப் பற்றிய செய்தி ஒன்று உள்ளது. தமிழிசை தெலுங்கானா ராஜ்பவனில் என்னென்ன செய்தார் போன்ற விவரங்களை திரட்டி தங்களுக்கு தருமாறு சந்திரசேகரவ ராவ் தரப்பிடம் திமுக கேட்டிருக்கிறது. ஏற்கனவே ராஜ்பவனில் இருந்துதான் எம்எல்ஏக்கள் பேர விஷயம் தீட்டப்பட்டது என்ற கடுப்பில் இருக்கும் தெலங்கானா முதல்வர், இந்த விஷயத்தில் திமுகவுக்கு உதவ பச்சைக்கொடி காட்டி விட்டார். முரசொலியில், ‘தெலுங்கானா ராஜ் பவனில் நடந்த தில்லாலங்கடி வேலை’ என்ற தலைப்பில் விரைவில் கட்டுரை வெளியாகலாம் என்கிறார்கள்.”

“முரசொலியில் தொடர்ந்து தமிழிசையை விமர்சித்து கட்டுரைகள் வெளிவருகிறதே?”

“ஆமாம். எல்லாம் மேலிட ஆசியுடன் தான் வருகின்றன. தமிழிசையை விமர்சித்து அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் தமிழ்நாட்டு பாஜகவினருக்கு டென்ஷன் தருகிறது முரசொலி. அண்ணாமலையை கண்டுக்காமல் விடுவதையும் கவனியுங்கள். இது ஒரு அரசியல் வியூகம்.”

“ஏதாவது ஒரு ஆளுநர் திமுகவுக்கு தொடர்ந்து தலைவலியாக இருக்கிறார் என்று சொல்.”

“எச்.ராஜாவுக்கு கவர்னர் பதவி வாங்கிக் கொடுக்க டெல்லில முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா இதைக் கேட்டு தமிழக பாஜக தலைவர்கள் சிரிக்கிறார்கள். அவருக்கு முன்னால் ஜி.கே.வாசன் கவர்னராக வாய்ப்பு இருக்கிறது. கவர்னர் வாய்ப்புக்காக அவரும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.”

“கவர்னர் போஸ்ட் கடைல விக்கிற மளிகைப் பொருள் மாதிரி ஆகிடுச்சு.”

“இன்னொரு செய்தியையும் சொல்கிறேன். ஐஜேகே கட்சி நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர், இந்த முறை கள்ளக்குறிச்சியில் இருந்து போட்டியிட விரும்புகிறார். இதற்காக எடப்பாடி, பாஜக இருவரிடமும் தொடர்ந்து நட்பாக பேசி வருகிறார்.

உடையார் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் நிறைய பேர் இருப்பதால் கள்ளக்குறிச்சியில் தன்னால் எளிதில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார் பாரிவேந்தர். கள்ளக்குறிச்சி தொகுதியில் இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போகிறாரா அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிட போகிறாரா என்பது தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியும். இன்னொரு ரகசியத்தையும் சொல்கிறேன்…. சென்னையில் ஒரு பெரிய இடத்து தற்கொலை முயற்சி நடந்திருக்கிறது. அதை மறைக்க முயல்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது”

“தற்கொலை முயற்சியா? யாரது?”

“வளர்ப்பு மகன் போல் இருந்தவர், ஒரு தொலைக்காட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர். அவருக்கும் மனைவிக்கும் சண்டை. மனைவி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது குறித்து செய்தியாளர்கள் விசாரிக்க, அனைத்து செய்திகளும் முடக்கப்பட்டிருக்கின்றன என்று கூறுகிறார்கள். முழுக்க விசாரித்துவிட்டு அடுத்த முறை சொல்கிறேன்” என்று விரைந்தாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...