சமீப காலமாகவே இந்திய சினிமாவில் மிகப்பெரும் பட்ஜெட்டில், சுமார் 300 கோடி அல்லது அதற்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் மட்டுமே வசூலில் நன்றாக கல்லா கட்டி வருகின்றன. இப்படி பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கான விளம்பரமும், பிரம்மாண்டமும் மக்களை திரையரங்குகளுக்கு வந்து பார்த்து ரசிக்க வைக்கின்றன. ஃபீல் குட் படங்கள், மெல்லிய உணர்வுகளைச் சொல்லும் படங்களை ஒடிடி தளங்களில் பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது.
இதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள சூர்யா முயற்சித்து வருவதாக அவருக்கும் நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
ரஜினி – கமல் என்ற நேரடிப் போட்டிக்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா மூவரும் களத்தில் இறங்கினாலும், சூர்யாவால் முக்கியத்துவம் பெறமுடியவில்லை.
விஜய் – சூர்யா அல்லது அஜித் – சூர்யா என்றோ சூர்யாவால் தனக்கான இடத்தைப் பெறமுடியவில்லை என்ற வருத்தம் சூர்யாவுக்கு இன்றும் இருக்கிறது.
மேலும் அஜித் – விஜய் என்ற போட்டிக்குப் பிறகு சிம்பு – தனுஷ், சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி என்று போட்டிப் பட்டியல் மாறிவிட்டதால், அங்கேயும் தனக்கான இடமில்லை என்ற கோபம் சூர்யாவுக்கு இருக்கிறது.
இதையெல்லாம் இப்போது சரிகட்ட, இன்றைய சினிமா பிஸினெஸ் உதவும் என சூர்யா நம்புகிறாராம்.
அதனால், பெரிய பட்ஜெட்டில் நடித்து, அப்படத்தை இந்தியா முழுவதிலும் மட்டுமில்லாமல், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் திரையிட்டால் இந்திய சினிமாவில் முக்கியத்துவம் பெற வாய்ப்புகள் அதிகம் என்ற ஃபார்மூலாவைதான் இப்போது கையிலெடுத்து இருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாகதான் இப்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் மூலம் எப்படியாவது சூர்யா மார்க்கெட்டை தங்கள் பக்கம் கொண்டுவரவேண்டுமென ஸ்டூடியோ க்ரீன், திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டியும் அதிகம் செலவழித்து வருகிறது.
பான் – இந்தியா படமாக மட்டும் இல்லாமல், பிற மொழிகளிலும் வெளியிடுவதன் மூலம் ஒரு இந்திய நடிகராக புகழ்பெற வேண்டுமென சூர்யா திட்டமிட்டு நடித்து வருகிறார்.
’கங்குவா’ படத்திற்கு பிறகு என்ன என்ற கேள்வி எழவே, இந்த முறை பிரபாஸின் பாணியைப் பின்பற்றுவது என சூர்யா வட்டாரத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாம்.
ஆரம்பத்தில் சாதாரண படங்களிலும், கமர்ஷியல் படங்களிலும் நடித்து வந்த பிரபாஸ், பாகுபலி வரிசைப் படங்கள், சாஹோ, ராதே ஸ்யாம், சலார் என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்ததைப் போலவே சூர்யாவும் நடிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
இதையடுத்து, ’கங்குவா’ படத்திற்குப் பிறகு ராகேஷ் ஒம்பிரகாஷ் மேஹ்ரா இயக்கும் ‘கர்ணா’ படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவிருக்கும் இந்தப்படம் புராணப் படமாகவும், பெரும் பட்ஜெட்டிலும் எடுக்கப்படுமாம். மேலும் இது இரு பாகங்களாகவும் ஷூட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். கேஜிஎஃப், பாகுபலி மாதிரி இரு பாகங்களாக வெளியிட்டால் இரண்டு வருடங்கள் மார்க்கெட்டை தக்க வைக்க முடியுமென சூர்யா தரப்பு நம்புகிறதாம்.