No menu items!

ஸ்ட்ராங்கான எடப்பாடி… சரண்டரான அண்ணாமலை – மிஸ் ரகசியா

ஸ்ட்ராங்கான எடப்பாடி… சரண்டரான அண்ணாமலை – மிஸ் ரகசியா

“மோடி 3.0 அமைச்சரவையில தங்களைச் சேர்க்காததுல ரெண்டு பேருக்கு ரொம்ப வருத்தம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“யார் அந்த ரெண்டு பேர்?”

“அன்புமணியும், ஜி.கே.வாசனும்தான். அதிமுகவை மீறி பாஜகவோட பாமக கூட்டணி அமைக்க முக்கிய காரணம் அன்புமணி ராமதாஸ். பாஜக திரும்பவும் ஆட்சிக்கு வந்தா, தனக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும்னு அவர் நினைச்ச்சிருந்தார். ஆனா இப்ப அவரை பாஜக கண்டுக்கவே இல்லை. அமைச்சரவையில அன்புமணிக்கு இடம் இல்லைன்னு தெரிஞ்சதும் அவரை திட்டித் தீர்த்திருக்கார் ராமதாஸ். ‘அப்பவே நான் அதிமுக கூட்டணிக்கு போலாம்னு சொன்னேன். அப்படி போயிருந்தா தருமபுரி தொகுதியிலாவது ஜெயிச்சிருக்கலாம். ஆனா நீதான் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு பாஜக கூட்டணிக்கு போன. ஆனா இப்ப பாரு… எம்பி சீட்டும் ஜெயிக்க முடியல. அமைச்சர் பதவியும் கிடைக்கல’ன்னு அவர் அன்புமணியை வறுத்து எடுத்திருக்கார். அவரை மாதிரியே மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இருந்த ஜி.கே.வாசனும் ரொம்பவே உடைஞ்சு போயிட்டாராம்.”

“சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் அமைச்சரவை விஷயத்துல அதிருப்தியை வெளியிட்டு இருக்காங்களே?”

“அவங்க மட்டுமில்லை. பலரும் இந்த அமைச்சரவை விஷயத்துல அதிருப்தியாதான் இருக்காங்க. இப்ப அவங்களை எல்லாம் சமாதானப்படுத்தற வேலையில அமித் ஷா இறங்கியிருக்கார். நாம இப்ப ஒத்துமையா இல்லைன்னா இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துடும். அதை யோசிங்க. இப்போதைக்கு இது உங்க அரசு. நீங்கள் சொல்றதைத்தான் நாங்க செய்வோம்னு சமாதானம் செஞ்சு வச்சிருக்கார் அமித் ஷா.”

“முன்ன மன்மோகன் சிங் ஆட்சியில பிரணாப் முகர்ஜி பார்த்த வேலையை, இப்ப அமித் ஷா பார்க்கிறார் போல. இந்த ஆட்சி 5 வருஷம் நீடிச்சா சரி.”

“அதைத்தான் பிரதமரும் நினைக்கிறார்.”

“நிதிஷ் குமார்கிட்ட இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திச்சா இல்லையா?”

‘நிதிஷ் குமார்கிட்ட இந்தியா கூட்டணி சார்பா சரத் பவார் பேசுனது நிஜம். அப்ப இந்தியா கூட்டணிக்கு நிதிஷ் குமாரை கூப்டதும் நிஜம். ஆனா அவரோட அழைப்பை நிதிஷ் குமார் ஏத்துக்கல. அதுக்கு அவர் 2 காரணங்களை சொல்லி இருக்கார். தான் பாஜக கூட்டணியை விட்டு வந்தாலும் இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை இல்லைங்கிறது முதல் காரணம். மம்தா பானர்ஜியை நம்பி தான் ஏதும் செய்ய விரும்பலங்கிறது ரெண்டாவது காரணம்.”

”திமுகவோட நாடாளுமன்ற தலைவரா டி.ஆர்.பாலுதானே இருந்தார். இப்ப அந்த பதவிக்கு கனிமொழியை நியமிச்சு இருக்காங்களே?”

“இந்த பதவிக்கு கனிமொழியை சிபாரிசு செஞ்சதே டி.ஆர்.பாலுதானாம். ‘எனக்கு வயசாயிடுச்சு. உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை கவனிக்க என்னால முடியாது. அதனால அந்த பொறுப்பை கனிமொழிகிட்ட ஒப்படைச்சுடுங்க’ன்னு டி.ஆர்.பாலுதான் சொல்லி இருக்கார். அதுக்கு பிறகுதான் அந்த பதவியை கனிமொழிக்கு முதல்வர் கொடுத்தார். கூடவே ஒரு கட்டளையும் போட்டிருக்காராம்.”

“அது என்ன கட்டளை?”

“முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்குப் போய் வரும் 14-ம் தேதியோட 1 ஆண்டு முடியுது. அவரை இனியும் கஷ்டப்படுத்தக் கூடாது. டெல்லியில எப்படியாவது லாபி பண்ணி செந்தில்பாலாஜியை வெளியில கொண்டு வரணும்கிறதுதான் அந்த கட்டளை. திமுக சட்ட வல்லுநர்கள்கிட்டயும் இந்த விஷயத்தை சீக்கிரம் முடிக்கச் சொல்லி முதல்வர் உத்தரவு போட்டிருக்காராம்.”

“பாஜகல அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் இடையில பனிப்போர் நடந்துட்டு இருக்கே”

“தமிழிசை திரும்பவும் அரசியலுக்கு வந்தப்பவே இதை பாஜககாரங்க எல்லாரும் எதிர்பார்த்தாங்க. அண்ணாமலையும் தமிழிசை தனக்கு எதிரா செயல்படுவார்னு எதிர்பார்த்தார். ஆனா இப்ப அவர் எதிர்பார்க்காத விஷயங்களும் நடந்துட்டு இருக்கு. பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன்னு தமிழிசையோட ஆதர்வாளர்கள் எண்ணிக்கை கூடிட்டே வருது. தமிழகத்துல 1 சீட்லகூட ஜெயிக்காததால டெல்லியிலயும் அண்ணாமலைக்கு சூழல் சரியில்லை. அதனால தலைமைகிட்ட அண்ணாமலை சரண்டர் ஆகி இருக்கார். கூட்டணி விஷயத்துல இனி டெல்லி தலைமை சொல்றதை கேட்கிறேன்னு சம்மதிச்சு இருக்கார். டெல்லி தலைமை இப்போதைக்கு அதிமுகவோட நெருங்க ஆசைப்படுதாம். அதனால கொஞ்ச நாட்கள்ல தமிழ்நாட்ல புது கூட்டணிகள் உருவாகலாம்.”

“தேர்தலுக்கு பிறகு அதிமுகல மாற்றம் வரும்னு அண்ணாமலை சொன்னார். ஆனா பாவம் இப்ப அவருக்குதான் மாறுதல் வரும் போல. அதிமுக நியூஸ் ஏதாவது இருக்கா?”

“நாடாளுமன்ற தேர்தல்ல ஜெயிக்காட்டியும் கடந்த தேர்தலைவிட 1 சதவீதம் அதிக வாக்குகள் வாங்கினதைக் காரணம் காட்டி எடப்பாடி தன்னோட இடத்தை உறுதி செய்திருக்கார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு அவர் சொல்றதை கட்சியோட மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் நம்பறாங்க. ஓபிஎஸ் அணியில் இருந்த கு.பா.கிருஷ்ணனும், வைத்தியலிங்கமும் எடப்பாடிகிட்ட வர ஆசைப்படறாங்க. பெங்களூரு புகழேந்தியும் சேர விரும்பறார்.அதுக்கு எடப்பாடி, .சசிகலா, தினகரன், ஓபிஎஸ் தவிர யார் வந்தாலும் எனக்கு ஓகேன்னு சொல்லி இருக்கார். மொத்தத்துல தேர்தல்ல தோத்தாலும் எடப்பாடி ஸ்ட்ராங்காத்தான் இருக்கார்.”

“அப்ப ஓபிஎஸ், சசிகலாவுக்கு இனி வீழ்ச்சிதானா?”

“அவங்க எப்ப எழுந்து நின்னாங்க… இப்ப விழறதுக்கு?” என்றபடி ரவுண்ட்சுக்கு கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...