No menu items!

கமலுக்கு வந்த சிம்பு பஞ்சாயத்து! – மிஸ் ரகசியா

கமலுக்கு வந்த சிம்பு பஞ்சாயத்து! – மிஸ் ரகசியா

“பொதுவா எல்லாரும் பொதுமக்கள் கிட்டதான் கருத்துக் கணிப்பு நடத்துவாங்க. ஆனா எடப்பாடி பழனிசாமி சொந்த கட்சிக்கு உள்ளயே கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கார்” சென்னை வெயிலில் களைத்து வந்த ரகசியாவுக்கு கிர்ணி பழ ஜூஸ் கொடுத்தோம்.

“அப்படி என்ன கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கார் எடப்பாடி?”

“தேர்தல் முடிவுகள் தனக்கு பாதகமா வந்தா கட்சிக்குள்ள இப்ப இருக்கற ஆதரவு தொடருமான்னு அவருக்கு சந்தேகம் இருந்திருக்கு. இதை கட்சியோட முக்கிய தலைவர்கள்கிட்ட நேரடியாவே கேட்க அவர் முடிவு எடுத்திருக்கார். ‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எனக்கு எதிரா கட்சியில் குரல் எழுந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன?’ங்கிற கேள்வியை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, பொன்னையன் போன்ற மூத்த தலைவர்கள்கிட்ட கேட்டிருக்கார்.”

“அதுக்கு அவங்க என்ன சொன்னாங்களாம்?”

“எடப்பாடி இப்படி கேட்டதுக்கு, ‘அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. திமுகவுக்கு மாற்று உங்கள் தலைமையிலான அதிமுகதான். நாங்க எல்லாரும் உங்களோடதான் இருப்போம்’ன்னு எல்லாரும் சொல்லி இருக்காங்க. இதைக் கேட்டதும் எடப்பாடி செண்டிமெண்ட்ல உருகி கண்ணீர் விட்டிருக்கார்.”

“அப்படின்னா தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜகவால உடைக்க முடியாதுன்னு சொல்றியா?”

”அதிமுகவை உடைக்கிறதிலேயே எல்லோரும் இருங்க. தமிழ்நாட்டு பிஜேபிக்குள்ள நடக்குற குழப்பங்கள்லாம் உங்க காதுக்கு வராதா?”

“என்னாச்சு?”

“திருநெல்வேலில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தீயில இறந்தார்ல..?”

“ஆமாம் அதுக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்?”

“விஷயத்தை கேளுங்க. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கிட்டருந்து காட்டமான அறிக்கை ஏதாவது வந்துச்சா? வரல. ட்விட்டர்ல நாலு லைன் எழுதுனதோட நிறுத்திக்கிட்டார்”

“ஏன்? அண்ணாமலை அறிக்கை விட்டாரே? தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கை விமர்சித்து சொல்லியிருந்தாரே?”

“ஆமாம். ஆனா தான் போட்டியிட்ட தொகுதில நடந்த சம்பவத்தைப் பத்தி நயினார் எதுவும் பேசல. காரணம் நாலு கோடி ரூபா விவகாரம். அவரை சுத்தி தமிழ்நாடு போலீஸ் வலை விரிச்சிக்கிட்டு இருக்கு. தமிழ்நாடு பாஜகவின் முக்கிய பொறுப்புல இருக்கிறவரின் வழிக்காட்டல்படிதான் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.”

“யாரு அண்ணாமலையா?”

“அவர் தலைவர்தானே. பணம் காசு கணக்கை பார்க்கிறவர் இல்லையே? விஷயத்தை கேளுங்க. இந்த விவகாரத்துல கட்சி தன்னை கைவிட்டதா நயினார் நினைக்கிறார். அதனாலதான் போலீசையும் தமிழக அரசையும் விமர்சித்து அவர் எதுவும் பேச மறுக்கிறார். அவங்ககிட்ட சுமூகமா போய் பிரச்சினையை தீர்த்துக்க நினைக்கிறார்”

”இந்த விவகாரத்துல போலீஸ் நிறைய பேரை விசாரிக்குது போல. பாஜகவின் தொழில் பிரிவு நிர்வாகி கோவர்த்தனை விசாரிச்சதா கூட செய்தி வந்ததே?”

“ஆமாம். அவர் நான் கிளீனா இருக்கேன். என் பாஸ் புக்லாம் பாத்துக்கங்கனு ஒதுங்கிக்கிட்டார். இப்ப அந்த நாலு கோடிக்கு கணக்கு வேண்டிய பொறுப்பு முழுசா நயினார் கிட்ட வந்துருக்கு. மத்தியில பாஜக ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக்கலாம்னு அண்ணாமலை வாக்கு கொடுத்திருக்கிறதா பாஜகவுல சொல்றாங்க. ஆனா நயினார் டென்ஷனா இருக்கிறார்”

“உப்பை திண்ணா தண்ணி குடிச்சுதானே ஆகணும்”

“இல்ல தாகம் எடுத்தாலும் தண்ணி குடிப்பாங்க” என்று பக்கத்திலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள் ரகசியா.

”சரி, திருநெல்வேலி ஜெயக்குமார் மரண விசாரணை எந்த அளவு இருக்கு?”

“இப்போதைக்கு அது கொலைதான்ற முடிவுல போலீஸ் இருக்காங்க. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ல அவர் இறந்த பிறகுதான் எரிக்கப்பட்டிருக்கிறார்னு சொல்லியிருக்காங்களாம். அதனால போலீஸ் கொலைன்ற மாதிரிதான் விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க”

“அவர் நிறைய பேர் பெயரை எழுதி வச்சிருந்தாரே?”

“அந்தக் கடிதமே உண்மையா இல்லையான்றது இன்னும் தெரியல. போலீசை திசை திருப்ப இப்படி எழுதியிருக்கலாம்னு சொல்றாங்க. ஜெயக்குமாருக்கு பல கோடிகள் கடன் இருக்காம். கடன் கொடுத்தவங்க தொடர்ந்து மிரட்டிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்கதான் ஆள் வச்சு கொலை பண்ணிட்டாங்கனு சொல்றாங்க”

”சரி, இந்த தேர்தல்ல பிஜேபி 150 சீட்கூட வாங்காதுன்னு ராகுல் காந்தி சொல்லி இருக்காரே?”

“ராகுல் சொன்னதைக் கேட்டு அமித் ஷாவுக்கு கொஞ்சம் ஷாக்தான். சரியான தகவல்கள் கிடைக்காம ராகுல் காந்தி இப்படி சொல்லி இருக்க மாட்டாரு. அதனால அதைப்பத்தி கொஞ்சம் சீரியஸா விசாரிங்கன்னு உளவுத் துறை அதிகாரிகள்கிட்ட சொல்லி இருக்கார்னு டெல்லி செய்தி சொல்லுது”

“சரி, நிர்மலா தேவிக்கு தண்டனை விதிச்சு கோர்ட் தீர்ப்பு வந்திருக்கே? அதைப் பத்தி தகவல் ஏதும் உண்டா?”

“நிர்மலா தேவிக்கு தண்டனை கொடுத்தாலும், அவர் யாருக்காக இளம் பெண்களை பயன்படுத்த முயற்சி செய்தார்ங்கிற விஷயம் இன்னும் வெளிய வரலை. தீர்ப்புலயும் அந்த விஷயங்கள் சொல்லப்படலை. இது எப்படி சாத்தியம்னு திமுக வழக்கறிஞர் பிரிவு விசாரிக்குது. அதேபோல் ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை வச்சு இது தொடர்பா ஒரு விசாரணை அறிக்கையை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாங்கினார். ஆனால் அந்த அறிக்கை விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அது அரசு ஆவணம்தானே நாம் ஏன் அதைக் கேட்டு வெளியிடக்கூடாதுன்னு தமிழக அரசு இப்ப யோசிக்குதாம்.”

“திருநாவுக்கரசர் கட்சி மாறப் போறதா ஒரு பேச்சு இருக்கே?”

”ஆமாம் அதுக்கு காரணம் அவர் ட்விட்டர்ல போட்ட ஒரு வீடியோ”

“என்ன வீடியோ?”

”விசிக தலைவர் திருமாவளவனை கடுமையா விமர்சனம் பண்ணி ஒரு வீடியோ”

“அப்படியா? கூட்டணிக் கட்சித் தலைவரையே விமர்சிச்சிருக்காரா?”

“கதையே கேளுங்க. அந்த வீடியோவை போட்டது உண்மைதான். ஆனா திருமாவை பாரட்டி வீடியோ இருக்குன் ஷேர் பண்ணேன். உள்ள இப்படி விஷயம் இருக்குனு நான் நினைக்கலனு அப்புறம் சொல்லி அந்த வீடியோவை டெலிட் பண்ணிட்டாரு. திருமா என் நெருங்கிய நண்பர் இப்படிலாம் சண்டை மூட்டி விடக் கூடாதுனு சொல்லியிருக்கார்”

“இதுக்கும் அவர் காங்கிரஸ்லருந்து விலகுறதா வந்த நியூஸ்க்கும் என்ன சம்பந்தம்?”

“கூட்டணிக் கட்சித் தலைவரை விமர்சித்து அவர் வீடியோ போட்டதுனால அவர் காங்கிரஸ்லருந்து விலகிறார்னு நியூஸ் பரவிடுச்சு”

“அப்போ அவர் காங்கிரஸ்லதான் இருக்கப் போறாரா?”

“அப்படி சொல்ல முடியாது. அவர் வருத்தத்துலதான் இருக்கிறார். திமுகவும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தன்னை திட்டமிட்டு ஒதுக்கினதா அவர் நினைக்கறார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அவர் அதிமுகவுக்கு போக வாய்ப்பு இருக்கறதா பேசிக்கறாங்க. மீண்டும் தாய் கழகத்திலேயே அடைக்கலம் ஆகலாம்னு அவர் முடிவு செஞ்சிருக்காராம்.”

“இப்பல்லாம் கோடம்பாக்கம் பக்கம் நீ அடிக்கடி போறதா கேள்விப்பட்டேனே?”

“தேர்தல் முடிஞ்ச பிறகு அரசியல் பக்கம் செய்திகளுக்கு பஞ்சம் வந்துடுச்சு. அதை ஈடுகட்ட சினிமால ஏதாவது நியூஸ் தேறுமான்னு பார்க்கப் போயிருந்தேன்.”

“ஏதாவது நியூஸ் தேறிச்சா?”

“தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் கதை சொல்ல வந்திருக்கார் ஒரு இளம் இயக்குனர். அந்தக் கதையை சிம்புகிட்ட சொல்லச் சொல்லி அனுப்பியிருக்கார் தயாரிப்பாளர். சிம்புவும் நடிக்க சம்மதம் சொல்ல, திடீர்னு தயாரிப்பாளர் பெரிய பட்ஜெட்டா இருக்கறதால கமல்ஹாசனை வச்சு எடுக்கலாம்னு யோசிச்சிருக்கார். முழு கதையைக் கேட்ட கமல், இந்த படத்தை சிம்புவை வச்சு நானே எடுக்கறேன்னு சொல்லி படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார். இந்த நிலையில்தான் ஐசரி கணேஷ் பிரச்சனையை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கொண்டு சென்று விட்டார். இப்ப பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...