“ஓபிஎஸ் டீம்ல இன்னும் கொஞ்சம் நாள்ல ஒரு விக்கெட் விழப் போகப் போகுது” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“ஐபிஎல் கிரிக்கெட் நடக்கறதால கிரிக்கெட் பாஷையில பேசறியா? எனக்கு கிரிக்கெட்டெல்லாம் தெரியாது. அதனால கொஞ்சம் புரியும்படியா பேசு. யாரோட விக்கெட் விழப்போகுது?”
“ஓபிஎஸ் டீம்ல இருந்து வைத்திலிங்கத்தோட விக்கெட்தான் விழப் போகுது. கொஞ்ச நாளாவே ரெண்டு பேருக்கும் நடுவில விரிசல் இருக்கு. தினகரனை ஓபிஎஸ் சந்திக்கப் போனதுல வைத்திலிங்கத்துக்கு விருப்பம் இல்லை. அதனால ஓபிஎஸ்ஸை அவர் கொஞ்சம் கொஞ்சமா தவிர்க்கறாரு. பேசாம எடப்பாடி அணியிலயே திரும்ப சேர்ந்திடலாம்னு வைத்திலிங்கத்தோட ஆதரவாளர்கள் அவர்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க. திமுகவும் அவரை இழுக்க ட்ரை பண்ணுது. அதனால எந்த நேரத்துலயும் அவர் ஓபிஎஸ்கிட்ட இருந்து கழண்டுக்கலாம்னு சொல்றாங்க.”
“எடப்பாடி சந்தோஷமா இருப்பாரே?”
“ஓபிஎஸ் அணி வீக் ஆகறதை நினைச்சு சந்தோஷப்பட்டாலும் அண்ணாமலையை நினைச்சுத்தான் அவர் டென்ஷனாயிருக்கிறார். வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறின கதையா கோவையில நடந்த பாஜக செயற்குழு கூட்டத்துல பேசின அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா 25 தொகுதிகளில் போட்டியிடும்னு சொல்லியிருக்கார். அமித் ஷா கிட்ட பேசி எல்லாம் சுமுகமா முடிஞ்ச பிறகும் இவர் இப்படி பண்றாரேன்னு கூட இருக்கற தலைவர்கள்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கார் எடப்பாடி. அதுக்கு அவங்க, அண்ணாமலை இப்படி பேசறது வழக்கம்தானே. அவர் பேசிட்டு போகட்டும். நாம 6 தொகுதிக்கு மேல கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. எடப்பாடியும் எதுவா இருந்தாலும் தேர்தல் வரும்போது பார்த்துக்கலாம்னு இருக்காராம். கர்நாடக மாநில தேர்தல்ல பாஜக தோத்ததால, பாஜக அவ்ளோ ஸ்டிரிக்டா இருக்காதுன்னு அவர் நம்பறாரு.”
“அண்ணாமலை ஏன் அதிமுகவை இப்படி பகைச்சுக்கறாரு. நாளைக்கே அவர் நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிட்டா அதிமுகதானே அவருக்காக வேலை செய்யணும்?”
“இதுக்காகத்தான் நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிட வேண்டாம்னு அண்ணாமலை முடிவு எடுத்திருக்காராம். ஸ்ட்ரெய்ட்டா ராஜ்ய சபாவுக்கு போகலாம்னு பார்க்கிறார். அடுத்த வருஷம் கர்நாடகாவுல ஒரு சீட் காலியாகப் போகுது அந்த இடத்துக்கு முயற்சிக்கலாம்.”
“நிர்மலா சீத்தாராமன், அண்ணாமலைன்னு தமிழக தலைவர்களுக்கே தொடர்ந்து ராஜ்யசபா சீட் கொடுக்க அங்க இருக்கற பாஜக தலைவர்கள் சம்மதிப்பாங்களா? அங்க கட்சியில குழப்பம் வராதா”
”அங்க குழப்பம் இருக்கோ இல்லையோ, தமிழக பாஜகல நிறைய குழப்பம் இருக்கு. தேசிய புலனாய்வு அமைப்பு, பாப்புலர் பிரண்டுடன் தொடர்புன்னு சொல்லி ரெண்டு முஸ்லிம் வழக்கறிஞர்களை கைது செஞ்சாங்க. இதைக் கண்டிச்சு வழக்கறிஞர்கள் அமைப்பு நடத்தின ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் பால் கனகராஜ் கலந்துக்கிட்டார். வழக்கறிஞரா இந்த ஆர்ப்பாட்டத்துல கலந்துக்கிட்டதா பால் கனகராஜ் சொன்னாலும், இதுல தேசிய புலனாய்வு அமைப்பை விமர்சிச்சு அவர் பேசினது கட்சியில புகைச்சலை ஏற்படுத்தி இருக்கு. பாரதிய ஜனதாவில் இருந்துக்கிட்டு மத்திய அரசின் புலனாய்வு அமைப்பை இப்படி விமர்சிச்சு அவர் பேசினது சரியான்னு பாஜகவுல விவாதம் நடந்துக்கிட்டு இருக்கு. இந்து முன்னணியும் அதைக் கண்டிச்சு அறிக்கை வெளியிட்டிருக்கு. இதனால வருத்தத்துல இருக்கற பால் கனகராஜ், நமக்கு பாஜக செட் ஆகாதுன்னு திமுகவோட பேசிட்டு இருக்காராம்.”
“கள்ளச்சாராய சாவுகளை கண்டிச்சு சென்னைல பாரதிய ஜனதா நடத்தின ஆர்ப்பாட்டத்துக்கு சொல்றபடி கூட்டம் கூடலியே.”
“ஆமாம். 7 மாவட்டங்கள் இணைஞ்சு நடத்தின இந்த ஆர்ப்பாட்டத்துல சுமார் 500 பேர்தான் கலந்துக்கிட்டாங்க. சில மாவட்ட நிர்வாகிகளே இதுல கலந்துக்காததால அண்ணாமலை அப்செட். இந்த ஆர்ப்பாட்டத்துல கலந்துக்காத பாஜக நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்ய சிபாரிசு செஞ்சிருக்கார். ஆனா பாஜக மாநில பொறுப்பாளரான கேசவ விநாயகம், அதெல்லாம் தேவையில்லைன்னு நிராகரிச்சுட்டாராம்.”
“சொந்தக் கட்சி நிர்வாகிகளையே பதவி நீக்கம் செய்ய முடியாத அண்ணாமலை, திமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யணும்னு சொல்றாரா?”
“நீங்க செந்தில் பாலாஜியைப் பத்தி சொல்றீங்களா?… ஆளுநர் பதவி நீக்கம் செய்யறாரோ இல்லையோ, முதல்வரே அவரை நீக்க வாய்ப்பு இருக்கறதா அறிவாலயத்துல பேசிக்கறாங்க. அவர் மேல முதல்வர் அதிருப்தில இருக்கிறாராம். கடந்த 2 ஆண்டுகள் நடந்த திமுக ஆட்சிமேல பெருசா எந்த ஊழல் புகாரும் இல்லாத நிலையில, செந்தில் பாலாஜியோட கடந்தகால ஊழலைத்தான் இப்ப எதிர்க்கட்சிகள் பேசிட்டிருக்கு. அதை அடக்க, முதல்வர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் அவரை பதவி நீக்கம் செய்யலாம் அல்லது அவரா ராஜினாமா பண்றதுக்கும் சான்ஸ் இருக்குனு அறிவாலய நண்பர்கள் சொல்றாங்க.”
“இதெல்லாம் நடக்கற கதையா? இப்ப செந்தில் பாலாஜிதானே பவர்ஃபுல் மினிஸ்டர்”
”இப்பன்றதை மாத்திக்குங்க. அது கடந்த காலமா மாறிடுச்சு. டாஸ்மாக்ல ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூட சார்ஜ் பண்றாங்கன்ற நியூஸ்லயும் திமுக தலைவர் அப்செட். இதுதான் சான்ஸ்னு மூத்த தலைவர்களும் செந்தில் பாலாஜியைப் பத்தி கொஞ்சம் போட்டுக் கொடுத்திருக்காங்க. ஆனா முதல்வர் இன்னும் இறுதி முடிவு எடுக்கலையாம்?”
“என்ன காரணம்?”
“நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருஷம் வருது கொங்கு மண்டலத்துல செந்தில் பாலாஜியை வைத்துதான் வாக்குகளை வாங்கணும்னு முதல்வர் திட்டம் வச்சிருக்கிறார். அதான் யோசிக்கிறாராம்”
“அவரை அமைச்சரா வச்சிருந்தா நாடாளுமன்றத் தேர்தல்ல எதிர்க் கட்சிகள் நமக்கு எதிரா பிரச்சாரம் பண்றதுக்கு வசதியா போய்டும்னு எல்லா இடத்திலும் வாக்குகள் குறைய வாய்ப்பிருக்குனு முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியிருக்காங்க”
“முதல்வர் என்ன செய்யப் போகிறார்?”
”நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுல எல்லா தொகுதிலேயும் வின் பண்ணனும்னு நினைக்கிறார். அப்பதான் தேசிய அரசியல்ல முக்கியத்துவம் பெற முடியும்கிறது அவரோட எண்ணம். மத்தியில கூட்டணி ஆட்சிதான் வரும், அப்போ திமுக பின்னாடி நின்னுடக் கூடாதுனு பார்க்கிறார்?”
“எப்படி கர்நாடக முதல்வர் பதவியேற்புல பின்னாடி நின்ன மாதிரியா?”
“நீங்களுமா? அது பிரியங்காவுக்கு இடம் கொடுக்கப் போய், ஸ்டாலின் பின்னாடி போய்ட்டார். ஆனா ராகுல் காந்தி பிடித்திருந்தது ஸ்டாலின் கையைதான் பிரியங்கா கையை இல்ல. அதைப் பாத்திங்களா?”
“சரி விஷயத்தை சொல்லு. செந்தில் பாலாஜி பதவி தப்புமா தப்பாதா?”
“இப்போதைக்கு தப்பும் ஆனா எப்போதும் தப்புமானு தெரியாது” சிரித்தாள் ரகசியா.
“நெல்லை மாவட்ட திமுக செயலாளரா மொய்தீன்கான் நியமிக்கப்பட்டு இருக்காரே?”
“நெல்லை மேயருக்கும் ஏற்கெனவே மாவட்ட செயலாளரா இருந்த அப்துல் வகாப்பும் அடிக்கடி மோதிட்டு இருந்தாங்க. மேயருக்கு எதிரா சில கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கறதுக்கு அப்துல் வகாப் காரணமா இருந்ததா சொல்றாங்க. சமீபத்துல துரைமுருகன் நெல்லைக்கு போனப்ப ரெண்டு தரப்பும் அவர் முன்னிலையில மோதி இருக்கு. இதனால திமுக தலைமை கோபமாகி மாவட்ட செயலாளரோட பதவியைப் பறிச்சு மொய்தீன்கான்கிட்ட கொடுத்திருக்காங்க.”