No menu items!

அறிவிக்காத தோனி; புலம்பிய ஜடேஜா – சேப்பாக்கத்தில் நடந்தது என்ன?

அறிவிக்காத தோனி; புலம்பிய ஜடேஜா – சேப்பாக்கத்தில் நடந்தது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக் கல் பதிக்கப்பட்டிருக்கிறது. 10-வது முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இத்தனை முறை இறுதிச் சுற்றை எட்டிப் பிடிக்கவில்லை.

சென்னையில் குவாலிஃபையர் போட்டிகள் என்றதும் எந்த அளவுக்கு சந்தோஷப்பட்டார்களோ, அதே அளவுக்கு கவலைப்படவும் செய்தார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். சுழற்பந்து வீச்சில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் இதுவரை திக்கித் திணறியதும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான், நூர் அஹமத் ஆகிய 2 சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததும் இதற்கு முக்கிய காரணம். ஆனால் அவர்களைவிட சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜாவும், தீக்‌ஷணாவும் சிறப்பாக பந்துவீசி, சிஎஸ்கே அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆட்டத்தின் முடிவைவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தது, போட்டிக்குப் பிறகு தோனி கொடுக்கும் பேட்டிக்காகத்தான். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்லின் கடைசி போட்டிக்குப் பிறகு, ‘இதுதான் உங்கள் கடைசி ஐபிஎல்லா?’ என்று வர்ணனையாளர் கேட்பார். அதற்கு தோனி, ‘டெபனட்லி நாட்’ என்று புன்முறுவலுடன் பதில் அளிப்பார். இந்த முறையும் தோனி முகத்தில் அந்த புன்னகையும், உதடுகளில் அந்த பதிலும் இருக்க வேண்டுமே என்று ரசிகர்கள் கவலைப்பட்டார்கள். கடந்த முறை ஓய்வைப் பற்றி பேசிய தோனி, சேப்பாக்கத்தில்தான் ஓய்வை அறிவிப்பேன் என்று சொல்லியிருந்தார். அந்த வகையில் நேற்று ஓய்வை அறிவிப்பாரோ என்ற பதற்றம் ஒருசில ரசிகர்களிடையே இருந்தது.

போட்டிக்குப் பின் அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் ஆடுவீர்களா என்று ஹர்ஷா போக்லே கேட்க, “எனக்குத் தெரியாது. அதுபற்றி முடிவெடுக்க இன்னும் 8 அல்லது 9 மாதங்கள் இருக்கின்றன. முடிவெடுக்க எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. மைதானத்தில் இறங்கி ஆடினாலும், வெளியே உட்கார்ந்து வழிகாட்டுவதாக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன்தான் நான் இருப்பேன்” என்றார். இப்படியாக நேற்று தோனி ஓய்வை அறிவிக்காததில் ரசிகர்களுக்கு திருப்தி.

ஆனால் அதற்கு நேர்மாறாக சோகமாக இருந்தார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா. “தன் கேப்டன்ஷிப் திறமையாலும், பீல்டர்களை தகுந்த இடத்தில் நிற்கவைக்கும் ஆற்றலாலும் சிஎஸ்கே அடித்த 172 ரன்களை 190 ரன்களைப்போல் மாற்றிவிட்டார் தோனி. குஜராத்தின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்” என்று குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் கூறினார் ஹர்த்திக் பாண்டியா.

நேற்றைய போட்டியில் அப்ஸ்டாக் நிறுவனம் வழங்கும் அதிக மதிப்புவாய்ந்த வீரர் விருதை ரவீந்திர ஜடேஜா பெற்றிருந்தார். முக்கியமான கட்டத்தில் 22 ரன்களை எடுத்ததற்காகவும், 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியதற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜடேஜா, ‘நான் மதிப்புமிக்க வீரர் என்று அப்ஸ்டாக்குக்கு தெரிகிறது. ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை’ என்று புலம்பியிருந்தார்.

தோனி ஆட வருவதற்காக தான் அவுட் ஆக வேண்டும் என்று விரும்பும் சில ரசிகர்களை நினைத்து அவர் இந்த பதிவைப் போட்டிருந்தார். தோனி ரசிகர்களுடன் அவர் கொண்டிருக்கும் மோதல் மனப்பான்மை இந்த ட்வீட்டில் தெளிவாகியிருந்தது. ஆக அடுத்த ஐபிஎல்லில் ஜடேஜா மஞ்சள் சட்டை போடுவது கஷ்டம் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...